கரு.முத்து
muthu.k@kamadenu.in
கொடை வள்ளல் கேள்விப்பட்டிருக்கிறோம். குடை வள்ளல்? வேதாரண்யம் ஒன்றியம் அண்டர்காடு சிதம்பர விலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி ஆசிரியை வசந்தா அப்படி ஒரு குடை வள்ளல்.
வேதாரண்யம் அருகேயுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1,400 ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் குடைகளை வழங்கி, கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் பாராட்டு மழையில் நனைந்துவருகிறார் வசந்தா.
அண்டர்காடு பள்ளிக்குள் நுழைந்தால் மேலும் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. பயன்படுத்தப்பட்ட பேப்பர் கப்புகள், பேப்பர் தட்டுகள் பலவிதமான கற்றல் உபகரணங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. பனை ஓலைப் பொருட்கள், மண்பாண்டங்கள் வகுப்பறைக்குள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. புதுப் புது விளையாட்டுகள் மூலம் மாணவர்கள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கின்றனர். 1-ம் வகுப்பு, 2-ம் வகுப்பு மாணவர்கள் 250 திருக்குறள்களை ஒப்பிக்கும் திறன் பெற்றிருக்கிறார்கள். முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கில வார்த்தைகளை எழுதிக்காட்டுகிறார்கள்.