கடிவாளம் - காலத்தின் கட்டாயம்!


தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் தலைதூக்கியிருக்கும் ஆபாசமும் வன்முறையும் எல்லை மீறிக்கொண்டிருக்கின்றன.

சமீபத்தில், ஒரு நெடுந்தொடரில், ஒரு பெண் கதாபாத்திரம் தன் சகோதரியையே கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துமாறு சமூக விரோதிகளைத் தூண்டும் வகையில் அமைந்த காட்சிக்காக, ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் தொடர்பான புகார் கவுன்சில் (பிசிசிசி), சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சிக்கு அபராதம் விதித்திருப்பது இந்தப் பிரச்சினையின் தீவிரத் தன்மையை உணர்த்தியிருக்கிறது.

பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட கலை வடிவங்களில் ஒன்றான நெடுந்தொடர்கள், ஒரு காலத்தில் ஆபாசமும் வன்முறையும் நிறைந்த திரைப்படங்களுக்கு மாற்றாகவே இருந்தன. குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில் உருவான இந்நிகழ்ச்சிகள், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தன. ஆனால், காலப்போக்கில் குடும்ப உறவுகளின் சிக்கல்களைச் சித்தரிப்பதாகக் கூறிக்கொண்டு, குடும்ப உறவுகளையே சிதைக்கும் வகையிலான தொடர்கள் பெருகத் தொடங்கின.

இன்றைக்கு, தொலைக்காட்சி சேனல்கள் புற்றீசல் போல் பெருகிவிட்ட சூழலில், நெடுந்தொடர்களில் ஆபாசமான காட்சிகளும் வன்முறைக் காட்சிகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டன. குழந்தைக் கடத்தல், கொலை முயற்சி, கூடா நட்பு, முறை தவறிய உறவுகள் என்று மிகுந்த அதிர்ச்சியளிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.

x