உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in
“என்ன இல்லைன்னாலும் சமைக்கலாம். ஆனா, எண்ணெய் இல்லாம சமைக்க முடியுமா? எண்ணெய்தான் என்னோட வெற்றிக்கு அஸ்திவாரம்” என்றபடி பளீரெனச் சிரிக்கிறார் தாரகேஸ்வரி பழனிச்சாமி.
சுத்தமான செக்கு எண்ணெய் வணிகத்தில் சத்தமின்றி சாதனைகள் செய்தவர் தாரகேஸ்வரி. சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருதுகளை வென்றிருக்கும் இவரை, சென்னையில் உள்ள இவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.
“ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க, ஒரு டோர் டெலிவரி அனுப்பிட்டு வந்திடறேன்” என்று கண்ணிமைக்கும் நேரத்தில் சிட்டாகப் பறந்தார். சொன்னது போலவே, பத்து நிமிடங்களில் பாய்ந்து வந்தவர், கொங்கு தமிழில் உரையாடத் தொடங்கினார்.
“எனக்குச் சொந்த ஊர் கோயமுத்தூருங்க. அப்பா, அம்மா, அக்கானு அளவான குடும்பம். படிச்சது கோவையிலதான். சிறுவயசுலிருந்தே துறுதுறுனு இருப்பேன். அப்பா சின்னச் சின்ன பிசினஸ் செஞ்சிட்டு இருப்பார். அவரைப் பார்த்து எனக்கும் பிசினஸ் மேல ஆர்வம் வந்துடுச்சு.
‘பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்’ படிக்கத்தான் ஆசைப்பட்டேன். வீட்ல இன்ஜினீயரிங் படிக்கச் சொல்லிட்டாங்க. விருப்பம் இல்லாம சேர்ந்தாலும் நல்லா படிச்சேன். கேம்பஸ் இன்டர்வியூவுல நல்ல வேலையும் கிடைச்சுது. அப்புறம் கல்யாணம் ஆச்சு. கணவர் தனஞ்செயனுடன் அமெரிக்காவுக்குப் பறந்துட்டேன்.