ரூபாய்க்கு ஒரு இட்லி!- கஷ்டத்திலும் கருணைகாட்டும் கமலம்மாள் பாட்டி


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

‘ஒரு ரூபாய் இட்லி பாட்டி’ - இப்படித்தான் உலகமே இன்றைக்கு வியந்து பார்க்கிறது கமலம்மாளை. 82 வயதாகும் இவர் வார்த்துத் தரும் இட்லியைச் சுவைக்கவும், இவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் இளைஞர் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது. இவரைப் பற்றிய காணொலியை, உள்ளூர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த ஒருவர் யூ-டியூப் சேனலில் பதிவேற்ற, பாட்டியின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவிவிட்டது. ஃபேஸ்புக் முதல் பிபிசி வரை இவரைப் பற்றிய செய்திகள் வைரலாகியிருக்கின்றன.
கோவை - சிறுவாணி சாலையில் இருக்கிறது வடிவேலாம்பாளையம். மேற்குத் தொடர்ச்சி மலைக்குன்று ஒன்றின் அடிவாரத்தில் இருக்கும் இந்த அழகிய கிராமத்தில், ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கிறது கமலம்மாள் பாட்டியின் இட்லிக் கடை. கடை என்று பேருக்குச் சொன்னாலும் அது வீடுதான். பழங்காலத்து வீடு. உள்ளே சிறு முற்றம். ஓரமாய் நான்கு பேர் அமரக்கூடிய திண்ணை. விறகு அடுப்பு. அதனுள் எரியும் தென்னை ஓலை மட்டைகள்.

நான் சென்றது காலை நேரம். அப்போதுதான் பெரிய சட்டியில் முதல் அடைசல் இட்லியை வேகவைத்து ஒரு தட்டில் கொட்டிக்கொண்டிருந்தார் பாட்டி. இன்னொரு அடுப்பில் உளுந்த வடை எண்ணெய்யில் குளித்துக் கொண்டிருந்தது.
பத்திரிகை, பேட்டி என்றதும், “ஆமா, நீங்க எல்லாம் ஃபோட்டோ கீட்டோன்னு எடுத்துட்டுப் போயி ஊரு உலகமெல்லாம் பரப்பிடுறீங்க. நான் என் பொழப்பப் பார்க்க வேண்டாமா?’’ என்னைத் திரும்பிக்கூட பார்க்காமல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டே பதில் பேசுகிறார் பாட்டி. பின்னர், ‘‘நீ இப்படி குக்கு (உட்காரு) கண்ணு... மொதல்ல நாலு புட்டு (இட்லி) சாப்பிட்டுட்டுப் பேசு’’ என்கிறார் தாய்மைக்கே உரிய பேரன்புடன்!

உடன் இருந்த பெண்மணியோ, “ஆத்தாவைக் கூப்பிட்டுட்டுப் போக கொஞ்ச நேரத்துல கார் வரப் போகுது சாமி. பத்து மணிக்கு ஏரோபிளான்ல மெட்ராஸ் போறாங்களாம். நீ சிக்கிரமா சாப்புட்டுட்டு போட்டோ புடிச்சுக்க. இல்லைன்னா பாட்டிய புடிக்க முடியாது!’’ என்று செல்லமாகச் சீண்டுகிறார்.

x