கடனாளியாகாமல் ‘காப்பாற்றிய’ வைகோ!- இது ராமநாதபுரம் ரவுசு


கே.சோபியா
readers@kamadenu.in

சமூக வலைதளங்களில் வைகோ பற்றிய கிண்டல்களுக்கும் வசவுகளுக்கும் பஞ்சம் இருந்ததில்லை. பல்வேறு அரசியல் காரணங்களுக்காக சில கட்சியினர் செய்யும் வேலை இது. ஆனால், மதிமுகவின் இளைஞரணி மாவட்ட அமைப்பாளராக இருந்த ஒருவரே சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் போட்டு வைகோவைக் கலாய்த்திருப்பதுதான் மதிமுக வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘கடனாளி ஆகாமல் தடுத்து என்னைக் கட்சியை விட்டு நீக்கிய வைகோ அவர்களுக்கு நன்றி!’ என்பதுதான் அந்த வம்புப் போஸ்டரின் வாசகம்.

ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த அரு.சுப்பிரமணியன்தான் இந்தப் புரட்சிப் போஸ்டருக்குச் சொந்தக்காரர். இவர் டூவீலர் ஷோரூம் நடத்தும் அளவுக்கு வசதியானவர் என்பதால், கட்சிக்குப் பொருளாதார ரீதியாக உதவியிருக்கிறார். அதனால், கட்சியில் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே விறுவிறுவென மாவட்ட இளைஞரணி அமைப்பாளரானார்.
2019 மக்களவைத் தேர்தலின்போது, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனின் மகனுமான ஆனந்துக்காக இவர் தேர்தல் வேலை பார்த்ததுதான் இப்போதைய பிரச்சினைக்
கான தொடக்கப் புள்ளி. “இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் செயல்” என்று உள்ளூர் நிர்வாகிகள் கண்டித்தபோது, “தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியுடன் நாம் கூட்டணி வைத்திருப்பது மட்டும் சரியா?” என்று கேள்வி கேட்டிருக்கிறார் சுப்பிரமணியன்.

மேலும், டி.டி.வி.தினகரனைப் புகழ்ந்து ஃபேஸ்புக்கில் இவர் போட்ட பதிவு இன்னொரு திரியைக் கொளுத்திவிட்டது. அந்தப் பதிவுக்காக, வைகோவின் உதவியாளரான அருணகிரி இவரைக் கண்டித்ததாகவும், அதனால் இருவரும் கருத்து ரீதியாக மோதிக்கொண்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே இவர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

x