கண்ணான கண்ணே- 30


கர்ப்பகாலத்தை மூன்று பருவங்களாகப் பிரித்துக்கொண்டு அதற்கேற்ப உணவு, உடற்பயிற்சியைத் திட்டமிடல் அவசியம். ஒவ்வொரு மூன்று மாதத்திலும் எத்தகைய உணவு முறை உகந்தது, எவ்வளவு தூரம் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யலாம் போன்ற ஆலோசனைகளை இந்த அத்தியாயத்தில் காண்போம்.

கர்ப்பம் தரித்திருப்பதை மருத்துவர் உறுதி செய்தவுடனேயே ஆயிரமாயிரம் கேள்விகள் மனதில் தோன்றிவிடுகின்றன. இதைச் செய்யலாமா... அதைச் சாப்பிடலாமா... நீச்சல் பயிற்சி ஆபத்தானதா? என்றெல்லாம் வினாக்கள் எழுகின்றன. அவற்றில் சிலவற்றுக்கு எனது விளக்கங்களை அளிக்கிறேன்.

கர்ப்பமாக இருப்பது இப்போதுதான் உறுதியானது. நான் ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணம் செய்யலாமா? ஒருமுறை எனது க்ளையன்ட் இப்படி ஒரு கேள்வியை எழுப்பினார்.

ஆட்டோ ரிக்‌ஷா என்ன, பாராசூட்டில்கூட செல்லலாம். முதல் பருவ கர்ப்பகாலத்தில் உங்களின் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுகிறது. அப்போது நீங்கள் ஆயத்த நிலையில் இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். இந்தக் காலகட்டத்தில் உங்கள் மருத்துவர் குறிப்பிட்டு ஓய்வைப் பரிந்துரைக்காவிட்டால் வெகு இயல்பாகவே நீங்கள் இருக்கலாம்.

இந்தப் பருவத்தில் உங்கள் உடல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையைப் பெறுகிறது. ஒரு காலத்தில் விளையாட்டு வீராங்கனைகள் ஒலிம்பிக் போன்ற மிகப்பெரிய போட்டிக்கு முன்னதாக கர்ப்பமடைவதை வழக்கமாகக் கொண்டனர். முதல் முப்பருவத்தில் ரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரிக்கும், இதனால் உடலில் ஏரோபிக் செயல்திறன் அதிகரிக்கும் என்பதால் அவ்வாறு செய்தனர். ஆனால், ஒருகட்டத்தில் இதற்குத் தடைவிதித்த ஒலிம்பிக் கமிட்டி இதனை ‘அபார்ஷன் டோப்பிங்’ என்றழைத்தது. ஒரு விளையாட்டுப் போட்டிக்குத் தேவையான உத்வேகத்தை அளிக்கும் வகையில் கர்ப்பம் உடலுக்கு உறுதியை அளிக்கிறது.

நானும் கரீனாவும் ஒருமுறை ஃபேஸ்புக் லைவில் தோன்றியபோது கரீனா இதைத்தான் சொன்னார். கர்ப்பம் தரித்தல் என்பது நோய்வாய்ப்படுவது அல்ல. அது ஓர் இயற்கையான மாற்றம். அதனால் அதற்கு முன்னர் நீங்கள் என்னென்ன செய்தீர்களோ அதனை இனியும் செய்யலாம். ஏன் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் தங்கம்கூட வெல்லலாம் என்று கரீனா பேசியிருந்தார்.
இதுதான் நிதர்சனமும்கூட. சில பெண்கள் கர்ப்பமடைவதை நோய் போலவே உணர்கின்றனர். கர்ப்பம் தரித்தலுக்கு முன்னதாக உடலையும் மனதையும் வலிமையாகக் கட்டமையுங்கள். ஆரோக்கியமான உடலும் உள்ளமும் ஆரோக்கியமான கர்ப்பகாலத்துக்கு வித்திடும்.

செரீனா வில்லியம்ஸ் தனது கர்ப்பகாலத்தின் முதல் முப்பருவத்தின்போதுதான் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?

இந்தக் கேள்வியை மிகவும் நுணுக்கமாக அணுக வேண்டும். நீங்கள் ஏற்கெனவே சிறு வயதிலிருந்து உடற்பயிற்சியை செய்து வருகிறீர்கள், அல்லது கர்ப்பமடைவதற்குக் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து உடற்பயிற்சி செய்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் உங்கள் உடல் எப்போதெல்லாம் பயிற்சி தேவை என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறதோ அப்போதெல்லாம் பயிற்சி செய்யுங்கள்.

கர்ப்பத்துக்கு முன்னதாக நீங்கள் ஓட்டப் பயிற்சி செய்தால் அதையே தொடருங்கள், பளு தூக்குதல் செய்தீர்கள் என்றால் அதையும் தொடரலாம். ஸ்கீயிங் எனப்படும் தண்ணீர், பனிச்சறுக்கு செய்துவந்தீர்கள் என்றால் அதையும்கூட தொடரலாம். பல ஆண்டு காலமாக நீங்கள் பின்பற்றிவந்த பயிற்சி என்பதால் உங்கள் குழந்தை ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தையே.

அதேவேளையில் நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு வெகுசில காலத்துக்கு முன்னதாக உடற் பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள். அதுவும் கூட சரிவர முறையாக பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லவில்லை என்றால் கர்ப்பம் தரித்த பின்னர் முதல் பருவத்தில் கடுமையான பயிற்சிகளைத் தவிர்க்கவும். நீங்கள் சைக்கிளிங், நீச்சல் போன்ற பளு சாராத பயிற்சிகளைச் செய்வது நல்லது. கர்ப்பகாலத்தில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாதவாறு தற்காத்துக் கொள்வது மிகமிக அவசியம். அதனால் பயிற்சியின்போதும் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பயிற்சியை முடிக்கும்போது ஒரு வாழைப்பழத்துடன் நிறைவு செய்யலாம்.

இதுவரை நான் உடற்பயிற்சியே செய்ததில்லை என்ற வகையறா பெண்களும் இருக்கின்றனர். நீங்கள் அந்தப் பிரிவில் அடங்குவீர்கள் என்றால் தயவு செய்து அப்படியே இருங்கள். கர்ப்பகாலத்தில் புதிதாக உடற்பயிற்சி வகுப்புக்குச் செல்லாதீர்கள்.

கர்ப்பகாலத்தில் எல்லா பெண்களுக்கும் எழும் சந்தேகம் காலை நேரச் சோர்வு பேச்சுவழக்கில் மசக்கை ஏன் ஏற்படுகிறது என்பதே?

ஒருவகையில் இது வெகு இயல்பானது என்பது தான் உண்மை. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலேயே இந்தச் சோர்வு ஏற்படுகிறது. புரோஜஸ்டிரோன் ஹார்மோன்கள் மிக அதிக அளவில் சுரப்பதால் உடலின் அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்த இயலாமல் போய்விடுகிறது. ஆனால், இதை எளிதில் சரிசெய்யலாம். நீங்கள் உண்ணும் உணவே மார்னிங் சிக்னஸுக்கு மருந்து.

1.    காலையில் முதல் உணவாக ஏதாவது ஒரு பழம் அல்லது உலர் பழவகையை உட்கொள்ளுங்கள்.

2.    மதிய உணவிலோ அல்லது இரவு உணவிலோ சற்று தூக்கலாக நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் ரத்த சர்க்கரை அளவு படிப்படியாகக் குறையும்.

3.    வீட்டில் தயாரிக்கப்பட்ட சர்பத் வகையில் கொஞ்சம் காலா நமக் எனப்படும் கறுப்பு உப்பைப் பயன்படுத்திப் பருகலாம். அதிலும், கோக்கம் எனப்படும் வட இந்தியாவில் விளையும் பழத்தைக் கொண்டு சர்பத் செய்து பருகலாம். இதில் தாது உப்பு கள் மிக மிக அதிகமாக இருக்கின்றன.
4.    குளிக்கும்போது வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் லெமன் கிராஸ் சேர்த்துக் குளிக்கலாம். இது உடலுக்கும்
மனதுக்கும் இதமான அனுபவத்தைத் தரும்.

5.    குளியலுக்குப் பின்னர் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயோ அல்லது நெய்யோ எடுத்து அதை உங்கள் காதின் உள்புறமாக மசாஜ் செய்யலாம்.

இவற்றைத் தொடர்ந்து செய்துவந்தால் மார்னிங் சிக்னஸில் இருந்து சற்றே விடுபடலாம்.

மார்பகக் காம்புகளில் ஏற்படும் எரிச்சலைத் தடுப்பது எப்படி?

கர்ப்பகாலத்தின் முதல் பருவத்தில் சில பெண்களுக்கு மார்பகக் காம்புகளில் அரிப்பு, எரிச்சல் ஆகியன ஏற்படும். இது இயல்பானதே. ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் சிறு உபாதை இது. ஆனால், சில பெண்களுக்கு இது கட்டுக்கு அடங்காமல் சென்றுவிடும். இதற்குக் காரணம் ஊட்டச்சத்து குறைபாடும் ஹார்மோன் மாற்றத்துடன் சேர்ந்து கொள்வதே.


குளிப்பதற்கு முன்னால் உடலை மரச்செக்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் மூலம் மசாஜ் செய்து கொள்ளவும். வாசனை திரவிய சோப்புகளை முற்றிலுமாகத் தவிர்க்கவும்.

இரவு உணவுடன் வைட்டமின் இ நிறைந்த பதார்த்தங்களை எடுத்துக் கொள்ளவும். வைட்டமின் டி குறையாமல் பார்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் இவற்றைச் சீரான அளவில் வைக்க சப்ளிமென்டுகளை எடுக்கலாம்.

ஊறவைத்த பாதாம், உலர் பழ வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் உள்ள ஃபைட்டோ ஸ்டீரால்ஸ் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கொழுப்பைத் தரும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக யோகா செய்யலாம்.

யோகா செய்வதன் மூலம் ஹார்மோன் அளவு சீராக இருக்கும்.

சரியான நேரத்தில் முழுமையான உணவை உட்கொள்வது மிக மிக அவசியம்.

முதல் பருவத்தில் கர்ப்பவதிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அடுத்த வாரமும் தொடரும்.

(வளர்வோம்... வளர்ப்போம்)

x