இத்தொடர் எழுத ஆரம்பித்ததில் இருந்து செய்திகளைப் பார்க்கும் பார்வையில் எனக்குள்ளுமே ஒரு மாற்றம் வந்திருப்பதை உணர்கிறேன். இது பொய்யாக இருக்கலாமோ என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது. அப்படி சந்தேகம் வந்த பல சங்கதிகள் பொய்யாகத்தான் இருக்கின்றன.
பொய்ச்செய்திகளோ வதந்தியோ... அவற்றைப் பரப்புவது என்பது பன்னெடுங்காலமாகவே வழக்கத்தில் உள்ள ஒன்று தான். பத்திரிகைகள் முதற்கொண்டு ஆரம்பித்த இவ்விஷயம் இப்போதைய இணைய உலகில் பன்மடங்கு பெருகி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. காரணம், பொய்ச்செய்திகளை உடனே நம்புகின்றனர். அதில் ஒரு சுவாரசியம் காண்கின்றனர். பிரபலங்களைப் பற்றியும், வெகுஜன ரீதியான சமாசாரங்கள் பற்றியும் சொல்லப்படும் பொய்களை எளிதில் நம்பி விடுகின்றனர்.
கடந்த ஜூன் 9-ம் தேதி இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா தீவில் ‘சினாபுங்’ (Mt.Sinabung) என்ற மலைப்பகுதியில் ஒரு எரிமலை வெடித்து இருக்கிறது. அதை ‘கார்டியன்’ (The Guardian) பத்திரிகை செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அது உண்மைச் செய்தி.
கடந்த வாரம் நான் சார்ந்திருக்கும் மருத்துவர்கள் ‘வாட்ஸ் -அப்’ குழுவில் ஒரு காணொலி பகிரப்பட்டது. ‘கண் இமைக்காமல் இந்த வீடியோவைப் பாருங்கள். ஒரு எரிமலை வெடிப்பதை அவ்வளவு தைரியமாகப் பதிவு செய்திருப்பார் போடோகிராபர். சில நொடிகள் வீடியோவில் ஒரே இருட்டாகத்தான் இருக்கும். தொடர்ந்து பாருங்கள்’ என்ற பீடிகையுடன் இருந்தது அந்த வீடியோ. சற்றே கவனித்துப் பார்த்தால் யாரும் கண்டு பிடித்து விடலாம் அது போலி வீடியோ என்று.
எரிமலை வெடிக்கும் என்பது புகைப்படக்காரருக்கு எப்படித் தெரியும்? அதுவும் அழகாக, கறுப்பாக வாணவேடிக்கை போல வெடிக்கிறது. இரண்டொரு கார்கள் அந்தக் கடலின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கின்றன. மற்றபடி ஒரு மனிதரையும் காணவில்லை. இணையம் மற்றும் வேறு ஆதாரங்களையும் ‘செக்’ செய்தேன். அந்த வீடியோ 2017-ம் ஆண்டில் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட வீடியோ என்பது தெரிய வந்தது. எரிமலை வெடித்தால் சேதாரம் எப்படி இருக்கும் என்பதை விளக்குவதற்காக தயாரிக்கப்பட்டது அந்தக் காணொலி.
எப்போதோ செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவை ஒரு உண்மை நிகழ்வைத் தொடர்ந்து தூசு தட்டி எழுப்பி இணையத்தில் பரவச் செய்கிறார்கள். நடந்த ஒரு நிகழ்வின் உண்மை வீடியோவே இருக்கும்போது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு காணொலியைப் பரப்புவதன் காரணம் என்னவாக இருக்க முடியும்? பீதியைக் கிளப்ப, வெறுமனே மக்களை திசை திருப்ப எனப் பல காரணங்களை அனுமானித்தாலும் பொய்ச்செய்திகளைப் பரப்புவதன் உளவியல் பிடிபடாத ஒன்றாகவும் பல சுவாரசியங்களை உள்ளடக்கியதாகவும்தான் இருக்கிறது.
இது கூடப் பரவாயில்லை. என் மருத்துவர்கள் குழுவிலேயே இன்னொரு செய்தி. அண்டை மாநிலம் ஒன்றில் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்ட ஒரு மருத்துவர் அதைச் செலுத்த முடியாமலும், அவமானம் தாங்காமலும் தற்கொலை செய்து கொண்டார் என்ற ஒரு செய்தி பகிரப்பட்டிருந்தது. எந்தச் செய்தித்தாளிலும் சரி, தொலைக்காட்சியிலும் சரி நான் அப்படி ஒரு செய்தியைக் கேள்விப்படவே இல்லை. சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள சில பத்திரிகை அலுவலகங்களைக்கூட தொடர்பு கொண்டேன். ஆனாலும் அப்படி ஒரு சம்பவத்தை இன்று வரை என்னால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
சுவாரசியத்துக்காகவும் மலிவான சுவைக்காகவும் உயிரோடிருப்பவர்களைக் கொன்று விடுகிறார்கள். அல்லது தமக்கு வேண்டாதவர்களாக இருப்பின் போலித்தகவல் ஒன்றின் மூலம் அவர்களை உலகறியச் செய்து விடுகிறார்கள். அச்செய்திகளை இணையத்திலோ வேறு வழிமுறைகளிலோ விசாரித்துப் பார்த்தாலே முக்காலே மூணுவீசம் உண்மை நிலவரம் தெரிந்துவிடும். புற்றீசல் போலப் பெருகும் போலிச் செய்திகளால் ஜனநாயகமும், நீதியும், பொதுமக்களின் நம்பிக்கையும் கேலிக்கூத்தாகி வருவது ஆபத்தானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பொருளாதாரம், உளவியல், தகவல் தொழில்நுட்பம், அரசியல் எனப் பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களும் போலிச் செய்திகளைப் பற்றிய ஆய்வுகளை அதிகம் மேற்கொண்டுள்ளனர். காரணம், நிலைமை இப்படியே போய்க்கொண்டிருந்தால் நீண்ட கால அடிப்படையில் அரசியல் ரீதியாகவும், அடிப்படை உரிமைகளுக்குமே பங்கம் வந்து விடுமோ என்ற அளவுக்கு அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
போலி எது, உண்மை எது எனக் கண்டறியும் ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. சில இணையதள முகவரிகள், செயலிகள் போன்றவற்றின் மூலம் உண்மைச் செய்திகளைப் பிரித்தறியும் முயற்சி தொடர்கிறது. அது பற்றிய விழிப்புணர்வையும் மாணவப் பருவத்திலிருந்தே அனைவருக்கும் உண்டாக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் கருத்து.
எதையும் சந்தேகப்படவும், வேறு கோணத்தில் யோசிக்கவும் நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். நம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்பது பன்னெடுங்காலமாய் நமக்குப் போதிக்கப்பட்ட உண்மையல்லவா?
இன்று நேற்றல்ல... 15-ம் நூற்றாண்டில் இருந்தே போலிச்செய்திகள் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அச்சு ஊடகங்கள் தொடங்கி தபால், தந்தி, தொலைக்காட்சி, திரைப்படங்கள், வானொலி என்று ஒவ்வொரு தொழில்நுட்ப வளர்ச்சியின் போதும் பல பரிமாணங்களை எட்டிய போலிச்செய்திகள் விவகாரம் தற்போதைய இணைய உலகில் முழுவீச்சில் மிரட்டுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான்.
போலிச் செய்திகளை நம்புவதும் உளவியல் ரீதியாகவே சில ஆச்சரிய உண்மைகளைக் கொண்டதாக இருக்கிறது. ஏற்கெனவே நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைப் பற்றி (familiarity) வேறு மாதிரி கேள்விப்படும்போது நம்மையும் அறியாமல் நம்பத்
தொடங்கி விடுகிறோம். மட்டுமல்லாது, அது போன்ற செய்திகள் நம்மை எட்டும்போது ஆழ்ந்து சிந்தித்து அதன் நம்பகத் தன்மையைச் சந்தேகிக்க மறந்து விடுகிறோம். ஒரு வகையில் சொல்வதானால் மேலோட்டமான சிந்தனாசக்தியை மட்டுமே செலவிடுகிறோம். செய்தியின் சுவாரசியத்தில் ஆழ்ந்து போகும் மனது அதன் உண்மையை அறிய சவுகரியமாக மறந்து விடுகிறது.
அதுதான் எல்லாமே மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோமே? ஒரு செய்தியை ‘யூ-டியூப்’ (youtube) வழியாகப் பாருங்கள் என்று அதன் இணைப்பைப் பகிர்ந்து பாருங்கள். நூற்றில் பத்துப் பேர் கூடப் பார்க்க மாட்டார்கள். அதே காணொலியைத் தரவிறக்கம் செய்து தொட்டவுடனே ‘ஓபன்’ ஆகும் காணொலியாகப் பகிருங்கள். நூற்றுக்கு நாற்பது பேராவது பார்த்து விடுவார்கள். காரணம், அந்த இணைப்பின் வழியாகச் சென்று ‘யூ-டியூப்’ வழியாகப் பார்க்க சில நொடிகள் ஆகும். அதற்கான பொறுமை பலருக்கு இல்லை. அதே தொட்டவுடன் பார்க்க முடிந்தால் என்னவென்று பார்த்து விட்டு அடுத்த வேலைக்குச் சென்று விடுவார்கள்.
எதிலும் பொறுமையில்லாமல் பரபரப்புடனே வாழப் பழகிவிட்ட நம் தலைமுறையைத் திருப்திப்படுத்த இணையத்தை எவ்வளவு வேகமாக்க முடியுமோ அவ்வளவு வேகமாக்க முயல்கிறார்கள் வல்லுநர்கள். ஒரு காணொலியோ, செய்தியோ திறப்பதற்குச் சில நொடிகள் தாமதமானால் கூட அதைப்பார்ப்பதைத் தவிர்த்து விடுகின்றனர் இளைஞர்கள்.
அப்படிப்பட்டவர்களின் சக்தி மிக்க உணர்வுகளைத் தூண்டி ஒரு விஷயத்தை வைரலாக்குவது எளிது என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள் இத்தகைய போலிச்செய்திகளை உண்டாக்குபவர்கள். அதற்காக நிறைய மெனக்கிடவும் செய்கிறார்கள்.
ஆச்சரியம், பயம், வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி மற்றும் அவமதிப்பு போன்ற உணர்ச்சிகளுக்கு நாம் ஆட்படும்போது சிந்திக்கும் திறனைப் புறந்தள்ளி விட்டு உணர்ச்சி வயப்பட்ட நிலையில் செய்திகளை ‘ஃபார்வேர்டு’ செய்து விடுகிறோம்.
இன்றைக்கு நிறைய பேர் செய்தித்தாள்களைப் படித்து தெரிந்து கொள்வதை விட சமூக வலைதளங்கள் வாயிலாகவே பல செய்திகளைத் தெரிந்து கொள்கிறார்கள். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செய்திகள் நம் முன் வந்து விழுகின்றன.
முன்பெல்லாம் பத்திரிகைகளில் வதந்திகளையோ அல்லது நிரூபணமாகாத, நிச்சயமற்ற செய்திகளையோ ஒரு சுவாரசியத்திற்கு வேண்டி தனிப்பகுதியாகவே தருவார்கள். படிப்போம். ரசிப்போம். வதந்தி தானே என்றெண்ணி லேசில் கடந்து போய் விடுவோம். தற்போது நிலைமை அப்படியில்லை. வதந்தியே உண்மைச் செய்தியைப்போல் வேடம் தரித்து, ஒலி ஒளிக்காட்சியாக வரும்போது பல அப்பாவிகள் அதை நம்பிவிடவும் கண்மூடித்தனமாக ‘ஷேர்’ செய்யவும் வாய்ப்புள்ளது.
இதனால் யாருக்கு, என்ன லாபம் என்கிறீர்களா? இது போன்ற போலி செய்தித் தயாரிப்பாளர்களுக்கு சில நோக்கங்கள் இருக்கின்றன. தனிநபர் அல்லது ஒரு அமைப்பின் மீதுள்ள வெறுப்பினால் அல்லது பொறாமையினால் இப்படிச் செய்வார்கள். எதிரிகளைப் பழிவாங்க அல்லது அவர்களுக்குப் பாடம் கற்பிக்க இப்படி துவேஷத்தில் ஈடுபடலாம். அரசியல் லாபங்களுக்காக இப்படி போலிச் செய்திகளைப் பரப்புவதையும் முழுநேர வேலையாகவே பலர் செய்து வருகின்றனர்.
தம் சித்தாந்தங்களை மின்னல் வேகத்தில் பரப்ப மற்றவர்கள் மீது பொய்யும் பரட்டும் சுமத்தி உண்டாக்கப்படும் ‘மீம்கள்’ ஏராளம். அவ்வளவு ஏன்? தன் தொழில் போட்டியாளரை ஒழித்துக்கட்ட தக்க புனைவுகளுடன் தகவல்களைக் கசிய விடுவது சர்வ சாதாரணமாய் நடக்கிறது.
இப்படிக் கன்னாபின்னாவென்று ஒரு தகவலோ காணொலியோ வைரலாகி விடும்போது அதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாய் முக்கியமான ஒன்று. நிறைய பேர் பகிரப்பகிர நிறைய விருப்பக்குறிகள் கிடைக்கின்றன. லைக்குகள் அதிகரிக்க அதிகரிக்க விளம்பரங்களும் அதிகம் ஆகி பணம் ஒரு புறம் உட்கார்ந்த இடத்திலேயே கிடைத்து விடுகிறது.
இதை யார் செய்தார்கள்... எவ்வளவு சம்பாதித்தார்கள்?
என்பதெல்லாம் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. இணையத்தில் புழங்கினாலும் அடையாளமற்று உலவுவது (anonymity) எளிதாக இருப்பதனால் கிடைக்கும் மறைமுக லாபங்களில் இதுவும் ஒன்று.
ஒரு பொருளைக் கடையில் சென்று வாங்குவதானாலும் சரி, ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பதாக இருந்தாலும் சரி... நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கிறோம். அந்தத் தகவல்கள் நம்மை அடைவதில் இன்று பெரும்பாலும் சமூக வலைதளங்களின் பங்கு கணிசமானது என்பது உண்மை. ஆக, அவற்றால் பரப்பப்படும் போலிச் செய்திகள் நம் முடிவையும் தவறாக்கி விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதால் தகவல்களைச் சீர் தூக்கிப் பார்த்துத் தெளியுங்கள் நண்பர்களே!
(இணைவோம்)