கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
மதுரை குலுங்க குலுங்க பிறந்த நாள் விழா நடத்தி கட்சித் தலைமைக்கும் மற்றவர்களுக்கும் தனது பலத்தைக் காட்டுவது மு.க.அழகிரியின் ஸ்டைல். இப்போது அதே அஸ்திரத்தை சுப்பிரமணியன் சுவாமியும் கையில் எடுக்கிறார்.
`ஒன் மேன் ஆர்மி' போல ஜனதா கட்சியை நடத்தி வந்த காலத்திலேயே, டெல்லி அரசியலில் கொடிகட்டிப் பறந்தவர் சுப்பிமணியன் சுவாமி. ஒரே ஒரு டீ பார்ட்டி வைத்து, வாஜ்பாயின் ஆட்சியைக் கவிழ்த்தது அவரது லாபி வலிமைக்கு ஓர் சான்று. ஜெயலலிதா தொடங்கி தற்போதைய ப.சிதம்பரம் வரையில் பலரைச் சிறைக்கு அனுப்பியதிலும் அவருக்குப் பெரும் பங்குண்டு.
அப்படிப்பட்டவர் பெருத்த எதிர்பார்ப்புகளுடன் 2013-ல், தனது கட்சியை பாஜகவில் இணைத்தார். 2014 தேர்தலுக்குப் பிறகு நிதியமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தார். ஆனால், அது கைகூடவில்லை. இதனால் பாஜவுக்குள்ளும் ஒன்மேன் ஆர்மியாகிப் போனார் சுவாமி.
நாமும் பாஜகவில்தான் இருக்கிறோம் என்பதை எல்லாம் மறந்து மத்திய அமைச்சர்களையும், பாஜக தலைவர்களையும் தொடர்ந்து விமர்சித்தபடியே இருந்த சுவாமி, இந்த முறையாவது தன்னைக் கண்டுகொள்வார் என்று எதிர்பார்த்தார். ஆனால், இம்முறையும் அவரை ஏமாற்றியது பாஜக.