சுங்கக் கட்டணம் திடீர் உயர்வு நியாயமற்றது!


தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கக் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டிருக்கிறது. முறையான அறிவிப்புகள் இன்றி கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் மக்கள் அதிர்ந்துபோய் நிற்கிறார்கள். அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் அரசு நடந்து கொள்வது விமர்சனங்களுக்கும் வழிவகுத்திருக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 46 சுங்கச் சாவடிகளில், 20 சாவடிகளில் செப்டம்பர்  முதல் தேதி நள்ளிரவு முதல் 5 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இது தொடர்பான முறையான அறிவிப்பு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பிலிருந்து வரவில்லை என்று வாகன உரிமையாளர்களும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க சுங்கக் கட்டணம் குறைய வேண்டுமே தவிர, அதிகரித்துக்கொண்டே போவது நியாயமற்றது. சாலைக் கட்டுமானத்தைப் பொறுத்தவரை அடிப்படைப் பராமரிப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய நிலை இன்றும் தொடர்கிறது. இப்படியான சூழலில், ரகசியமாகக் கட்டணத்தை உயர்த்துவது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. 

சுங்கக் கட்டண உயர்வு என்பது பேருந்துக் கட்டணம் தொடங்கி லாரி, கார் போன்ற வாகனங்களின் வாடகை வரை உயரும் சூழலுக்கு வழிவகுக்கக் கூடியது. இது அனைத்துப் பொருட்களின் மீதும் மறைமுகமாக விலை உயர்வை ஏற்படுத்திவிடும். இதனால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுவார்கள். இதை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் எதிர்க்கட்சிகள், சாலை அமைக்கும் செலவைவிட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்தும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டும் தமிழக அரசு, இவ்விஷயத்திலாவது விழித்துக்கொண்டு உடனடியாகச் செயலாற்ற வேண்டும். சுங்கக் கட்டண உயர்வுக்குத் தமிழகத்தின் அனைத்துத் தரப்பிலிருந்து எழுந்திருக்கும் எதிர்ப்பை மத்திய அரசிடம் எடுத்துக்கூறி விரைவில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்!

x