குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
கட்சி ஒதுக்கிவைத்தாலும் கராத்தே தியாகராஜன் பிசியாகவே இருக்கிறார். சிபிஐ பிடியில் இருக்கும் ப.சிதம்பரத்தைச் சந்திக்க சென்னைக்கும் டெல்லிக்கும் பறந்தபடி இருக்கும் கராத்தே, திமுக வட்டாரத்தை வெறுப்பேற்றும் விதமாக அவ்வப்போது அறிக்கைகளையும் விட்டுக் கொண்டிருக்கிறார். முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம் கிளப்ப.... ‘அண்ணன் ஸ்டாலின் அவர்கள் 2007-ல் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது நண்பருடன் பேங்காக் சென்றார். அவர் விமானம் ஏறும்போதுதான் இந்த விஷயம் முதலமைச்சர் கலைஞருக்கே தெரியும்’ என்று அதிமுகவை முந்திக்கொண்டு அறிக்கை கொடுத்தார் கராத்தே. இதைப் பார்த்துவிட்டு, ‘கராத்தே அதிமுக-வில் சேரப்போகிறார்’ என்று செய்திகள் பரவின. அதற்கேற்றார் போல் அமைச்சர் ஜெயக்குமாரும் “அதிமுகவில் சேர்க்கக் கூடாதவர் பட்டியலில் கராத்தே தியாகராஜன் பெயர் இல்லை” என்று கொளுத்திப் போட்டார். இந்த நிலையில் காமதேனு பேட்டிக்காக கராத்தே தியாகராஜனைத் தொடர்பு கொண்டோம். “கோர்ட்டிலிருந்து ஏர்போர்ட் போயிட்டு இருக்கேன். ஒரு மணி நேரத்தில் போடிங் எடுத்துட்டு நானே லைன்ல வர்றேன்” என்று மெசேஜ் அனுப்பினார். அதன்படியே மீண்டும் அழைத்தார். அவர் அளித்த பேட்டியிலிருந்து...
அதிமுகவினரே அமைதியாக இருக்கையில் ஸ்டாலின் பேங்காக் போனது குறித்து நீங்கள் மெனக்கெட்டு அறிக்கை தந்தது ஏன்?
இதென்னங்க வம்பா இருக்கு... அரசுப் பதவி எதிலும் இல்லாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, முதல்வரிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறார். ஆனால் நம்ம, அண்ணன் ஸ்டாலின் மேயராக இருந்தபோது துணை மேயரா இருந்துருக்கோம். அதனால், அவரது வெளிநாட்டுப் பயணம் குறித்து எனக்குத் தெரியும் என்பதால் அறிக்கை கொடுத்தேன். தப்பு ஒண்ணும் இல்லையே... நடந்த சம்பவத்தைத்தானே சொன்னேன்.