ஹாட் லீக்ஸ்: வேற ரூட்டு வேலுமணி!


வேற ரூட்டு வேலுமணி!

மழைநீர் சேகரிப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது, நீர் ஆதாரங்களைப் பெருக்குவது தொடர்பாக மண்டல வாரியாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி. ஆகஸ்ட் 29-ல், நடந்த மதுரை மண்டல கூட்டத்தில் மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்த வேலுமணியை வரவேற்று பதாகைகளை நட்டு படோடோபம் காட்டினார்கள் ஆளும்கட்சிக்காரர்கள். கட்சிக்காரர்களைச் சந்திக்கப் போவதாகச் சொன்னால் சர்ச்சை வெடிக்கும் என்பதால் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் மண்டல வாரியாகக் கட்சிக்காரர்கள் மத்தியிலும் தனது அதிகாரத்தை நிலைநாட்டி வருகிறார் வேலுமணி. அடுத்து 9-ம் தேதி நடக்கவிருக்கும் திருச்சி மண்டல ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் தடதடக்கின்றன.

கையில காசு... பையில சிலை!

முரசொலி அலுவலகத்தில் அண்மையில் திறக்கப்பட்ட கருணாநிதியின் சிலை மாடலில் சிறிய அளவிலான உலோகச் சிலையை திருச்சியிலுள்ள தனது அலுவலகத்தில் வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் நேரு. இதேபோல் மொத்தம் 15 சிலைகளுக்கு மீஞ்சூர் சிற்பி தீனதயாளனிடம் ஆர்டர் கொடுத்திருந்தாராம். கடந்த வாரம் அதில் ஒரு சிலையை எடுத்து மாநகரச் செயலாளர் அன்பழகனிடம் கொடுத்த நேரு, “இத உன்னோட ஆபீஸ்ல கொண்டு போய் வைப்பா” என்று சொன்னதுடன் மறக்காமல் சிலைக்காக பத்தாயிரம் ரூபாயை எண்ணி வாங்கிக் கொண்டார். இதையடுத்து மேலும் சில நிர்வாகிகளும் சிலை கேட்டு சிலிர்த்துக் கிளம்பிவர, அத்தனை சிலைகளும் ஒரே மூச்சில் விற்றுத் தீர்ந்துவிட்டதாம். சிற்பியிடம் அடுத்த ஆர்டரைக் கொடுத்திருக்கிறாராம் நேரு.

x