கணினி மற்றும் ஸ்மார்ட்போன்களின் வரவும், முழு வேகத்தில் இணையமும் கிடைத்ததற்குப் பிறகு நம் வாழ்க்கையே முழுதாக மாறிவிட்டது எனலாம்.
செய்திகள் பரவும் விதமும், அவற்றை நாம் பார்க்கும் வேகமும் கூடிக்கொண்டே தான் போகின்றன. அதிலும் தவறான, போலியான செய்திகளை இணையத்தில் உலவ விடுவது பலருக்கு முழு நேர வேலையாகவே இருக்கின்றது.
எதைப் பற்றி வேண்டுமானாலும் போலிச்செய்தி (fake news) வருகிறது. யாரைப்பற்றி வேண்டுமானாலும் வருகிறது. வந்த வேகத்தில் விஷம் போலப் பரவவும் செய்கிறது. நல்ல உண்மையான செய்திகள் பரவுவதைக் காட்டிலும் பன்மடங்கு அதிக வேகத்தில் போலிச்செய்திகள் பரவுகின்றன.
போலிச்செய்திகளை உருவாக்குவதற்கென்றே பல தளங்கள் இயங்குகின்றன. அவை ஒவ்வொரு நாளும் நம் சிந்திக்கும் திறமைக்குச் சவால் விட்டு போலி உள்ளடக்கத்துடன் உலா வந்து எல்லா சமூக வலைதளங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன.
அரசியல் லாபத்துக்காக, வெறுமனே அவதூறு பரப்புவதற்காக, பின்னணியில் கிடைக்கும் பொருளாதார லாபத்துக்காக, பழிவாங்குவதற்காக என்று பல விதங்களிலும் இது போன்ற செய்திகள் உருவாக்கப்படுகின்றன. அவை அதே வேகத்தில் பல அப்பாவிகளால் அதிவேகமாகவும் பரப்பப்படுகின்றன.
ஏன் நாம் நம்புகிறோம்?
மனிதன் சிந்திக்கும் முறைக்கும் கூட சில தனிப்பட்ட தன்மைகள் உள்ளன. ஒரு பக்கமாகச் சார்ந்து யோசிக்கத் தலைப்படுவது (bias), ஒரே விஷயத்துக்கு உள்ள குறுக்கு வழிகளைப் பற்றி யோசிப்பது (short cuts) மற்றும் சொல்லப்படும் தகவலையே நேர் மாறாகப் புரிந்து கொள்வது (perception errors) போன்றவையே அத்தனிப்பட்ட தன்மைகள். இதை நன்கு புரிந்து கொண்டாலே போதும், நாம் ஏன் முட்டாள்தனமான, அர்த்தமற்ற பொய்களைக்கூட நமக்கே தெரியாமல் நம்பத் தொடங்கி விடுகிறோம் என்று விளங்கிவிடும்.
செய்திகளில் இருக்கும் எதிர்மறைத்தன்மை ஒரு விபரீத ஆர்வத்தைத் தூண்டி விடுகிறது. அந்த ஆர்வம் சிந்திக்கும் திறனையும் மழுங்கடிக்கச் செய்து வேகமாக மனதுக்குள் புகுந்து விடுகிறது. அதுவும் பிரபலமான ஒருவரைப் பற்றிய செய்திகள், இயற்கைச் சீற்றங்கள் குறித்த முன்னறிவிப்புகள், மத நம்பிக்கை சார்ந்த அவதூறுகள், எல்லாவற்றுக்கும் மேலாக பாலியல் ரீதியிலான செய்திகள் மறு விசாரணைக்கு நம் மனம் போவதற்கு முன்பே ஃபார்வேர்டு செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கிறோம்.
ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடுமா என்று நாம் பேச்சுவாக்கில் சொல்வதுண்டல்லவா? அப்படி உண்மையாகப் பலர் நம்பியதும் நடந்திருக்கிறது.
அது இதுபோன்ற போலிச்செய்திகள் உருவாவதில் இருக்கும் ஒரு உளவியல் தன்மை என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்படிச் செய்திகள் தவறாக இருந்தாலும் அடிக்கடி கண்ணில் தென்படும் போதும் கேள்விப்படும்போதும் அது உண்மையாகத்தான் இருக்கும் என்று குழு குழுவாக மக்கள் நம்பத்தொடங்கி விடுவார்கள். ஏதோ ஒரு பழைய செய்தியின் தாக்கத்தில் இதை அதனோடு சேர்த்துக் குழம்பி, போலிச்செய்தியை உண்மை என்றே பலரும் ஒருவாறு நம்பத் தொடங்கி விடுவார்கள். இதை ‘மண்டேலா விளைவு’(Mandela effect) என்றே உளவியல் சொல்கிறது.
அதாவது தென்னாப்பிரிக்காவின் தலைவர் நெல்சன் மண்டேலா சிறையில் இருக்கிறார். விடுதலையுமாகவில்லை. ஆனால், மக்கள் பலரது எண்ணமும் அவர் 1980-ம் ஆண்டிலேயே காலமாகி விட்டதாகவே நினைத்துக்கொண்டு இணையவெளியில் இது பற்றியே பொய்யான தகவல்களை உண்மை போலவே நம்பிப் பேசிக்கொண்டனராம். உண்மையில் 1990-ம் ஆண்டு சிறையிலிருந்து வந்த அம்மாமனிதர் தன் இன்னுயிரை நீத்தது 2013ல். ஆனால், அட்வான்ஸாகவே இப்படி நம்பி விட்டிருந்திருந்திருக்கிறார்கள் மக்கள். ஒட்டு மொத்தமாக தவறாக நினைக்கும் (collective misremembering) இந்த விளைவுக்கு அவர் பெயரையே வைத்தும் விட்டனர்.
நம் மனதில் ஞாபகங்கள் பதிவதும் அவற்றை மீண்டும் நினைவுகூர்ந்து தகவல்களை மீட்டெடுப்பதும் ஒருவித சிக்கலான, பல படிகளைக் கொண்ட ஒரு வழிமுறை. இந்தப் படிகளில் எங்கு வேண்டுமானாலும் தவறு நேரலாம். அதற்கேற்ப ஞாபகக் குழப்பங்களும் நமக்கு ஏற்படலாம்.
அதிலும் அரசியல் தொடர்பான போலிச்செய்திகளும் வதந்தியும் தீயெனப் பரவித் தேர்தலில் கூட பலவித மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தி விடும். அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற 2016-ம் ஆண்டில், தேர்தலுக்கு முன்னரே இணையத்தில் ஒரு தகவல் வெகு வேகமாகப் பரவியது. அதிபர் தேர்தலில் போப் ஆண்டவர் (Pope Francis) தன் முழு ஆதரவையும் வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கே அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், உண்மை அவ்வாறு இல்லையாம்.
இதை விட அபாயகரமான சில சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன அதே அமெரிக்காவில். ஒரு பீஸ்ஸா (pizza) கடைக்குள் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது ஒரு இளைஞன் கைத்துப்பாக்கியுடன் ஆக்ரோஷமாக நுழைகிறான். அங்கே இங்கே யாரையோ அவன் தேட சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் மூலைக்கொருவராகச் சிதறியோட போலீஸ் அமுக்கிப் பிடித்தது அவனை. ‘இந்த இடத்தில் குழந்தைகளைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல்கள் செய்வதாகவும் அந்தக் கூட்டத்துக்கும் முக்கிய அரசியல் தலைவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தான் ஒரு செய்தியில் பார்த்ததாக’ அந்த நபர் சொல்லி இருக்கிறார். முற்றிலும் தவறான அந்தத் தகவலால் தூண்டப்பட்டு சட்டத்தை மீறிய அந்த இளைஞனைப் போல வெளியே தெரியாமல் எத்தனை சம்பவங்கள் நடைபெற்றனவோ?
இணையப் பயன்பாடு அதிகரித்த தற்போதைய சூழல்தான் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் தகவல்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய காலம்.
எப்படிப் பொய்ச் செய்திகளைக் கண்டறிவது?
எந்த நிறுவனம் அல்லது செய்தி ஏஜென்சி அத்தகவலை வெளியிடுகிறது என்று பார்க்க வேண்டும். பாதி விஷயம் அதிலேயே புரிந்து போகும். தரமான, பெயர் வாய்ந்த நிறுவனங்கள் பெரும்பாலும் பொய்ச்செய்திகளைப் பரப்பாது.
ஆனால், புகழ் பெற்ற செய்தி நிறுவனங்களின் பெயரை நினைவூட்டும் ஒரு பெயரை வைத்துக்கொண்டு ஒரிஜினல் நிறுவனத்துக்கே அல்வா கொடுக்கும் டுபாக்கூர் ஏஜென்சிகளும் உண்டு. பலமுறை சரி பார்க்கும் பொறுப்பு நமக்குத்தான் உண்டு. நிறுவனங்களோ அல்லது குறிப்பிட்ட தளங்களோ அல்லது அதை எழுதியவரோ எது ஒன்றிலும் உங்களுக்கு நம்பகத்தன்மை குறைவாக இருந்தால் விட்டுவிடுங்கள். அச்செய்திகளைப் படித்து நேரத்தை வீணடிக்காமல் போய்க்கொண்டே இருங்கள். உண்மையான செய்தி தானாக உங்களை வந்தடையும்.
எதையும் சந்தேகியுங்கள்
ஆம். சந்தேகப்படுவது என்பது வேறு. வெறுப்பு மனப்பான்மையுடன் ஒதுக்கித் தள்ளுவது என்பது வேறு. நடந்த சம்பவங்களைப் பற்றி எல்லோருக்குமே எல்லாமும் தெரிந்திருக்கவில்லை என்னும்போது முழுதாக அச்செய்தியை நீங்கள் நம்பவேண்டும் என்ற அவசியமில்லை.
99 சதவீதம் உண்மை இருந்தாலும் 1 சதவீதம் பொய் கலந்திருக்கலாமோ என்று உங்கள் உள்ளுணர்வு சொன்னால் நம்புங்கள். தப்பில்லை. கூடிய சீக்கிரமே உங்களுக்கு உண்மை தெரிய வரும்.
அதே செய்தி குறித்து மற்ற நிறுவனங்களோ பத்திரிகைகளோ ஆன்லைனில் என்ன சொல்லியிருக்கின்றன என்பதைப் பலரும் ‘செக்’ செய்வதே இல்லை. என் அனுபவத்தில் பத்துக்கும் மேற்பட்ட செய்திகளை இப்படி ‘க்ராஸ் செக்’ செய்தபோது தவறானவை என்பதைக் கண்டறிந்து அதே சூட்டில் வாட்ஸ் -அப் குழுவிலும் பகிர்ந்திருக்கிறேன்.
கூகுள் ஒன்றும் ஆண்டவரில்லை
ஆம். அது ஒரு தேடு இயந்திரம் (search engine). நாம் தேட விரும்புவதைச் சொல்கிறோம். அது தொடர்பான அனைத்து இணைப்புகளையும் அது தேடி நம் முன் கொட்டுகிறது. சில தகவல்கள் ஆணித்தரமான உண்மையாகவும் சில தகவல்கள் நிபுணர்களின் துணையுடனும் சில தகவல்களைக் கண்டவுடனே நிராகரிக்கவும் பழகிக்கொண்டால் கூகுள் ஒரு நல்ல தோழன். அதை விட்டுவிட்டு எல்லாவற்றுக்கும் கூகுள் தான் உற்ற துணை என்று இருப்பது அவ்வளவு சரியானதல்ல. எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ மருத்துவம் சம்பந்தமான விஷயங்களுக்கு இது சாலப் பொருந்தும்.
வேகத்தைக் குறையுங்கள்
செய்திகளை சேனல்கள் முந்தித் தரட்டும். நீங்கள் ஏன் முந்துகிறீர்கள்? சாவகாசமாக அக்கம் பக்கம் பாருங்கள். எந்த தளத்திலாவது யாரேனும் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்களா? அல்லது நீங்கள் பார்த்த நியூஸ் சேனல் மட்டும்தான் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறதா என்பதை உணரலாம். வேகமாகச் செய்திகளைத் தருகிறேன் பேர்வழி என்ற ஆர்வக்கோளாறில் அரையும் குறையுமான செய்திகளைக் கக்குவதிலேயே குறியாக இருக்கும் நிறுவனங்களால் மக்கள் சந்திக்கும் குழப்பங்கள் ஏராளம். டிஜிட்டல் குப்பையைக் கூட்டிப் பெருக்கி மனசையும் கணினியையும் கூட சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தலைப்பிலேயே தவறு இருக்கலாம்
தலைப்புகள் பெரும்பாலும் எழுதப்படுபவர்களால் வைக்கப்படுவதில்லை. செய்தியைச் சூடாகவும், சுவையாகவும், படிக்கத் தூண்டும் விதத்திலும், உள்ளே இழுக்க வேண்டும் என்பதற்காகவும் செய்தி ஆசிரியர்கள் அதன் தலைப்பில் சில சூட்சுமங்களை வைப்பதுண்டு. அதனால் ஈர்க்கப்பட்டு உள்ளே போனாலும் படிக்கப் படிக்க பொய்க்கலவைப் பூச்சு இருப்பது நமக்கே விளங்கிவிடும். ஆக, அதைப் பரப்பும் வேலையை நாம் செய்யக்கூடாது.
எல்லாவற்றையும் விட நம் மீது தொடுக்கப்படும் செய்திப்போர் முழு வீச்சில் நடப்பதால் செய்திகளின் நம்பகத்தன்மையை சோதித்துப் பார்க்க நேரமின்றி அவற்றில் ஆழ்ந்து அயர்ந்து விடுகிறோம். அந்த அநாவசிய அயர்ச்சியைத் தவிர்க்க வேண்டுமானால் தேர்ந்தெடுத்து வாசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் குப்பைகளை இனங்கண்டு தேவையானவற்றை மட்டும், தேவையான அளவில் படிக்க, கிரஹிக்க கற்றுக்கொண்டால் டிஜிட்டல் புயலின் சேதாரங்களிலிருந்து சற்றேனும் தப்பிக்கலாம்.
(இணைவோம்)