கரு.முத்து
muthu.k@kamadenu.in
சினிமா தியேட்டர்கூட இல்லாத குக்கிராமத்தில் இருந்துகொண்டே தமிழ் சினிமா பற்றிய அத்தனை விவரங்களையும் துல்லியமாகத் தொகுத்து வைத்திருக்கிறார் 68 வயதான பொன். செல்லமுத்து. கடலூர் மாவட்டம் வேப்பூருக்கு அருகிலுள்ள ஏ.சித்தூர் கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரான செல்லமுத்துவுக்குத் தன்னைத் திரைப்பட ஆய்வாளர் என்று அழைத்துக்கொள்வதில்தான் அத்தனை பெருமை. எந்தவொரு தமிழ்த் திரைப்படத்தைப் பற்றிக் கேட்டாலும், அடுத்த நொடியே அதன் முழு விவரங்களையும் கொட்டுகிறார்.
உலகமே சினிமாதான்
செல்லமுத்துவிடம் சுமார் 4,200 படங்களின் பாட்டுப் புத்தகங்கள் உள்ளன என்ற ஒரு செய்தியே இவரின் சினிமா ஆர்வத்தை எடுத்துச்சொல்லிவிடும். இந்த சினிமா காதலரைச் சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்றால், மனிதர் பாட்டுப் புத்தகங்கள், கேசட்டுகள், சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்கள் சூழ சந்தோஷமாக வாழ்கிறார்.