மஹா பெரியவா 27: அருளே ஆனந்தம்


பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

‘சிவா விஷ்ணு கோயிலைக் காண்பிக்கிறேன் என்று நம்மை எல்லாம் அழைத்துச் சென்ற மகா பெரியவா, கோயிலைக் காட்டவே இல்லையே?

அதற்குப் பதிலாக சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் அந்தத் தெருவில் இருக்கிற ஒரு பழைய வீட்டை ஸ்ரீமடத்துக்கு வாங்குவது பற்றிப் பேசினாரே...’

மகா பெரியவாளுடன் அன்றைய தினம் காலை சென்று வந்த உள்ளூர் அன்பர்கள் குழம்பினார்கள்.
அவரிடமே கேட்கக்கூடிய விஷயமா இது?

‘என்ன பெரியவா... சிவா விஷ்ணு கோயில் இருக்கிற இடத்தைக் காட்றேன்னு சொல்லி ஏதோ ஒரு தெருவுக்கு எங்களை எல்லாம் கூட்டிண்டு போனேள்... கோயில் எங்காவது தெரியறதானு நாங்களும் நாலா பக்கமும் பார்த்தோம். கோயிலே தென்படலை. திடீர்னு ஒரு வீட்டை அடையாளம் காண்பித்து, ‘இந்த வீட்டு உரிமையாளர் யாரு?’னு விசாரிச்சேள்... அப்படியே மடத்துக்குத் திரும்பிட்டோமே..’ என்று மகானிடம் கேட்க முடியுமா?

முக்காலமும் உணர்ந்த சர்வேஸ்வரனின் அவதாரமான பெரியவாளுக்கு எல்லாம் தெரியும் என்ற நம்பிக்கையோடு கண்கண்ட தெய்வத்துடன் ஸ்ரீமடத்துக்குத் திரும்பி நடந்தவர்கள், உள்ளே வந்து மகானுக்கு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணிட்டு, அவரவர் இல்லத்துக்குத் திரும்பிப் போனார்கள்.

ஒரு சில நாட்கள் ஓடின...

அன்றைய தினம் காலை வேளையில் ‘அவர்’ காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வந்தார்.
‘எவர்?’
‘இந்த வீட்டை ஸ்ரீமடத்துக்கு விலைக்குத் தரியா?’ என்று ஒரு நாள் காலை வேளையில் மகா பெரியவா ஒருவரைப் பார்த்துக் கேட்டார் அல்லவா? அவர்தான்!

முகத்தில் ஒருவிதமான கவலை ரேகைகள் தென்பட வந்தவர், மகானுக்கு நமஸ்காரம் செய்தார்.

புன்முறுவல் பூத்த மகான், ‘எப்படி இருக்கே?’ என்று ஜாடையில் விசாரித்தார்.

‘‘நன்னா இருக்கேன் பெரியவா... வீட்டை வித்துடலாம்னு முடிவெடுத்திருக்கேன். அன்னிக்கு நீங்க என்னோட  இடத்துக்கே வந்து கேட்டேள். அப்ப முடியாதுன்னு சொன்னேன். அந்த நேரத்துல அப்படிச் சொன்னதுக்கு ரொம்ப வெக்கப்படறேன். இப்ப சந்தர்ப்ப சூழ்நிலை மாறிடுத்து. அதான் ஒங்களுக்கே குடுத்துடலாம்னு இருக்கேன்...’’ என்று சொல்லி இரு கரங்களையும் கூப்பினார்.
‘‘என்னாச்சு திடீர்னு?’’ பெரியவாளின் கேள்வி.

‘‘என்னோட புள்ளைக்கு உடம்பு முடியலை. டாக்டர்கிட்ட கூட்டிண்டு போனேன். அவனோட சிகிச்சைக்கு நிறைய பணம் செலவாகும் போலிருக்கு. கைவசம் ஒண்ணும் இல்லை. அதான் வீட்டை வித்துடலாம்னு இருக்கேன். நீங்க கேட்டதால உங்ககிட்டயே குடுத்துட்டு சொந்த ஊருக்கே போய் செட்டில் ஆயிடலாம்னு இருக்கேன். அங்கே போனா வைத்தியச் செலவும் ஓரளவு குறையும். கையிலயும் நாலு காசு வெச்சிண்டிருக்கலாம்’’ என்றார் அவர்.

அவரை தீர்க்கமாகப் பார்த்தார் மகா பெரியவா. பிறகு, ‘‘ஒண்ணும் கவலைப்படாத. உன் புள்ளையாண்டானுக்கு எதுவும் ஆகாது. அவனுக்கு எந்த வியாதியும் இல்லை. நன்னா இருப்பான். வைத்தியத்துக்கு நானே டாக்டரைச் சொல்றேன்’’ என்று கருணைக் கடலான பெரியவா திருவாய் மலர்ந்ததும், கிட்டத்தட்ட கண் கலங்கி விட்டார் அவர்.

‘மகனுக்கு எந்த வியாதியும் இல்லை’ என்று மகானின் திருவாயில் இருந்து வார்த்தைகள் வந்ததும், அவர் மனதில் இருந்த ஒட்டுமொத்த பாரமும் குறைந்தது போல் உணர்ந்தார்.

பிறகு, ‘‘காஞ்சிபுரத்தை விட்டு நீ வேறு எங்கும் போக வேண்டாம். இந்த ஊர்லயே இரு. எனக்கு நீ தர்ற வீட்டுக்குப் பதிலா உனக்கு இங்கயே ஒரு வீடு புதுசா கட்டித் தரச் சொல்றேன்’’ என்று ஆசிர்வதித்தார். வஸ்திரங்களும் பிரசாதமும் தந்து அவரை அனுப்பினார்.
இதை அடுத்து வந்த இரு வாரங்களுக்குள் அந்த வீடு காஞ்சி ஸ்ரீமடத்தின் பெயருக்கு முறையாகப் பதிவு செய்யப்பட்டு  ஆவணங்களும் மடத்துக்கு வந்துவிட்டன.

அதேவேளையில் மகா பெரியவா பரிந்துரைத்த மருத்துவர் மூலம் அந்த இடத்து உரிமையாளர் மகனுக்கு நல்ல சிகிச்சை வழங்கப்பட்டது. அதிசயத்திலும் அதிசயமாக அவனும் மெள்ள குணமாகத் தொடங்கினான்.

மிகவும் மோசமாக இருந்த தன் மகனை மகா பெரியவாதான் குணமாக்கினார் என்கிற நன்றிக் கடன் காரணமாக அனுதினமும் மடத்துக்கு வந்து மகானின் திருச்சந்நிதியில் நமஸ்காரம் செய்து விட்டுப் போனார் அந்தத் தகப்பனார்.

மடத்து சார்பாகவே அவர் விரும்பும் இடத்தில் ஒரு வீட்டைக் கட்ட உத்தரவிட்டார். ஒரு பக்கம் அந்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

இதை அடுத்து வந்த ஒரு நாளில் மடத்தோடு தொடர்புடைய பிரபலமான ஸ்தபதி ஒருவரை வரச் சொன்னார் மகா பெரியவா.
மகானின் அழைப்பைக் கேட்ட மாத்திரத்தில் ஸ்ரீமடத்துக்கு ஓடி வந்தார் ஸ்தபதி. பெரியவா திருச்சந்நிதி முன் நமஸ்காரம் பண்ணிவிட்டு பணிவாய் வணங்கி நின்றார்.

ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு அருகே உள்ள தெருவில் பழைய வீட்டை வாங்கி இருக்கும் விவரத்தைத் தெரிவித்தார் பெரியவா. பிறகு அந்த வீட்டின் வரைபடத்தைக் காண்பித்தார். ‘‘இப்போ நான் காண்பிக்கிற இடத்துல நீ ஒரு பள்ளம் வெட்டணும். ஒரு ஏழெட்டு அடிக்குத் தோண்டிப் பார்த்துட்டு அங்கே என்ன இருக்குன்னு வந்து சொல்லணும்’’ என்றார்.

மாமுனிவர் சொன்ன விஷயங்களை பவ்யத்துடன் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் ஸ்தபதி.

‘மகா பெரியவா சொன்னால் ஏதோ காரணம் இருக்கும். அவரை எதிர் கேள்விகள் கேட்கக் கூடாது’ என்று தனக்குள் தெளிந்தவர், மீண்டும் அவரை வணங்கினார். தன் பணியாளர்களுடன் அந்த வீட்டை நோக்கிப் புறப்பட்டார் ஸ்தபதி.

வீட்டைக் காலி செய்து ஒரு சில நாட்கள் ஆகியிருந்தபடியால், வெறிச்சோடிக் கிடந்தது. ஆங்காங்கே குப்பையும் கூளமும் குவிந்து கிடந்தன.

எங்கே தோண்ட வேண்டும் என்று மகா பெரியவா குறித்துக் கொடுத்த இடத்தைப் பணியாளர்களை வைத்து அளக்க ஆரம்பித்தார் ஸ்தபதி. தோண்ட வேண்டிய இடத்தைக் கண்டுபிடித்தவருக்கு அதிர்ச்சி.

எங்கே தோண்ட வேண்டுமோ, அந்த இடத்தில்தான் வீட்டின் கழிப்பறை. ஸ்தபதிக்கும் மற்றவர்களுக்கும் துர்நாற்றத்தின் வீச்சம் அந்த இடத்தில் நிற்கவே விடவில்லை.

‘‘இந்த இடத்தில்தான் பள்ளம் தோண்டணும்’’ என்று உடன் வந்த பணியாளர்களிடம் அடையாளம் காண்பித்தார் ஸ்தபதி. என்னதான் துர்நாற்றம் வீசுகிறது என்றாலும், பெரியவா உத்தரவை மீறுகிற எண்ணம் இல்லை.

அடுத்து பணியாளர்கள் கர்மமே சிரத்தையாக கடகடவென்று அந்த இடத்தைக் கடப்பாரையால் இடிக்க ஆரம்பித்தார்கள். கற்கள் அனைத்தையும் பெயர்த்து எடுத்த பிறகு மண்வெட்டியால் பெரிய பள்ளம் வெட்டத் தொடங்கினர்.

சுமார் ஏழடி வரை தோண்டி இருப்பார்கள். அப்போது மண்ணையும் மீறிக்கொண்டு ஏதோ ஒன்று பெரிதாகத் தெரிந்தது. ‘என்ன இது? வித்தியாசமான கல்லாகத் தெரிகிறதே...’ என்று தோண்டும் பணியில் ஈடுபட்டவர்கள் திகைத்தனர். அந்தப் பகுதியில் இருந்த மண்ணை மட்டும் கைகளால் விலக்கினர்.

என்ன ஆச்சர்யம்..!.. ஒரு சிவலிங்கத்தின் மேல்பகுதி தெரிந்தது.

ஸ்தபதி உள்ளே எட்டிப் பார்த்தார். சிவலிங்கத்தைப் பார்த்ததும் சிலிர்த்துப் போன அவர், மேலே இருந்தவாறே கன்னத்தில் போட்டுக் கொண்டார். ‘‘அந்த லிங்கத்தை அப்படியே ஜாக்கிரதையா மேலே எடுத்து வாங்க’’ என்று பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

குறிப்பிட்ட இந்த இடத்தில் ஏன் தோண்டச் சொன்னார் மகா பெரியவா என்பது ஸ்தபதிக்கு இப்போதுதான் புரிந்தது.
பள்ளத்துக்குள் இருந்த மணலை மெள்ள விலக்கி, அந்த லிங்கத் திருமேனியை அப்படியே தூக்குவதற்கு பணியாளர்கள் முயன்றனர்.
அத்தனை சுலபத்தில் அசைந்து கொடுப்பானா அந்த ஆனந்தத் தாண்டவன்?

முடியவில்லை. இன்னும் சில பணியாளர்கள் மேலிருந்து பள்ளத்துக்குள் இறங்கி தூக்க முயற்சி செய்தார்கள். ஊஹூம்... இம்மிகூட அசைவில்லை.

மேலே நின்று கொண்டிருந்த ஸ்தபதி யோசித்தார். பக்கத்திலேயே ஏகாம்பரேஸ்வரர் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் யானையும் உண்டு. இந்த விஷயம் நினைவுக்கு வர, யானையைக் கூட்டி வரச் செய்தார்.

யானையும் வந்தது.

பிள்ளையை வைத்து தகப்பனாரைத் தூக்க வைத்தார்கள். ஆனால், பிள்ளைக்கும் அசைந்து கொடுக்க வில்லை பரமேஸ்வரன்.
‘பணியாளர்களை வைத்து தூக்கிப் பார்த்தும் முடியவில்லை. யானையைக் கட்டி இழுத்துப் பார்த்தும் நடக்கவில்லை. அப்படி என்றால்.. இது மகா பெரியவா என்கிற மகா சக்தியால் மட்டுமே சாத்தியம்’ என்ற முடிவுக்கு வந்தார் ஸ்தபதி. தீர்மானத்துடன் மடத்துக்கு ஓடினார்.

அங்கே ஒரு வேத பண்டிதருடன் பேசிக்கொண்டிருந்தார் மகா பெரியவா.

ஸ்தபதியின் வருகை தெரிவிக்கப்பட்டது.

மலர்ந்த முகத்தோடு வரச் சொன்னார்.

வந்தவர் விஷயத்தைச் சொன்னார்.

ஒரு கணம் கண்களை மூடி, ஈஸ்வரனை வணங்கி விட்டு, ‘‘இதோ, நானே வரேன்’’ என்று சொன்ன கலியுக நடமாடும் தெய்வமான மகா பெரியவா எழுந்தார்.

உடன் புறப்படத் தயாரான சிப்பந்தியிடம், ‘‘கங்கா ஜலம், வில்வ இலை, கற்பூரம் எடுத்துக்கோ’’ என்றார்.

தோண்டப்பட்ட இடம் நோக்கி தொண்டர் படையுடன் விரைந்தார் மகா பெரியவா.

அதற்குத்தான் காத்திருந்தான் பரமேஸ்வரன்..!

(ஆனந்தம் தொடரும்)

x