குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சந்திப்புக்காக வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் முதல்வர். அவரது பயணத்தின் உள்விவகாரங்களைக் குடைந்து அறிக்கை மேல் அறிக்கையாக விட்டுக் கொண்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அதுபோலவே, ஓபிஎஸ் தரப்பிலும் முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் ஏகத்துக்கும் அதிருப்தி ரேகைகளை படரவிட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட இரண்டு வார காலப் பயணம் இது என்பதால் நிச்சயம் முதல்வர் பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்துச் செல்வார் என்று பெரிதும் எதிர்பார்த்தார் துணை முதல்வர் ஓபிஎஸ். ஆனால், அதை அவர் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. பொறுப்பை ஒப்படைக்கத் தேவையில்லை என்று முதல்வர் முடிவெடுத்து விட்ட நிலையில், “இப்பக்கூட பிரயோஜனமில்லைன்னா எதுக்கு இந்தப் பதவி?” என்று ஓபிஎஸ் முகாம் கொந்தளித்தது.
கடந்த வாரம் தேனியில் முகாம் போட்டிருந்த ஓபிஎஸ்ஸிடம் அவரது ஆதரவாளர்கள், “ஈபிஎஸ் உண்மையில் எதற்காக வெளிநாடு டூர் போகிறார்?” என்று கேட்டதற்கு, “யாருக்கப்பா தெரியும்... எல்லாம் மேல இருக்கவனுக்கே வெளிச்சம்” என்று விரக்தியுடன் சொன்னாராம் ஓபிஎஸ். இதைக்கேட்டு, “மேல இருக்கவன்னு அண்ணன் சொன்னது ஆண்டவனையா... அமித் ஷாவையா?”ன்னு தெரியலியே என்று கமென்ட் அடித்திருக்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.