ஆட்சியர் பதவிக்கு ஆட்கள் தேவை!- அதிகாரிகளை அலறவிட்ட திகில் போஸ்டர்


கரு.முத்து
muthu.k@kamadenu.in

‘வேலைக்கு ஆட்கள் தேவை’ என்ற விளம்பரங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால்,  ‘மாவட்ட ஆட்சியர் பணிக்கு ஆட்கள் தேவை’ என்ற விளம்பரத்தை எங்காவது எப்போதாவது கண்டிருக்கிறோமா? புதுக்கோட்டை மாவட்டம்  கறம்பக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்போது அப்படியொரு புரட்சிகர சுவரொட்டிகளை ஒட்டி தெறிக்க விட்டிருக்கிறார்கள். ஆட்சியர் பணிக்கு மட்டுமல்ல... மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் பணிகளுக்கும் ஆள் தேடுகிறது இந்தச் சுவரொட்டி!

‘புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள குளந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள புல எண் 244, வெட்டுக்குளத்தை மத்திய புலனாய்வுத் துறை மூலமாவது கண்டுபிடித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர, இந்திய அரசியலமைப்பு விதிகளின் கீழ் பணிபுரிய உண்மையான அரசுப் பணியாளர்கள் தேவை’ என்கின்றன விளம்பர வாசகங்கள். அதுமட்டுமல்ல, ‘பொது அறிவு, சுயமரியாதை, தன்னொழுக்கம் ஆகியவைதான் தகுதிகள்; நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அமைச்சர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிபாரிசுக் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ என்றெல்லாம் கறார் காட்டுகிறது விளம்பரம். வார்த்தைக்கு வார்த்தை அறச்சீற்றமும் நுட்பமான அரசியல் பகடியும் இழையோடும் இந்த வித்தியாசமான விளம்பரத்தின் பின்னணியில் இருப்பது யார்?

சுவரொட்டியில் இருக்கும் அலைபேசி எண்ணுக்கு அழைத்தால், எடுத்துப் பேசுகிறார் எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான துரை.குணா. சாதிய ஆதிக்கம், காவல் துறை அடக்குமுறை, பள்ளிகளில் கட்டாய வசூல் என்று பல்வேறு பிரச்சினைகளுக்காகக் களமிறங்கி போராடுகிறவர். ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நாவலால் ஊரில் பல பிரச்சினைகளைச் சந்தித்தவர். ‘கருத்தாயுதக்குழு’ எனும் பெயரில், துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு மக்கள் கவனத்தை ஈர்ப்பது இவரது வழக்கம். வேறெந்தச் சுவரொட்டியையும்விட இந்தச் சுவரொட்டி பெரும் அதிர்வுகளைக் கிளம்பியிருக்கிறது. இப்படி ஒரு விளம்பரத்தின் பின்னே இருக்கும் விவகாரம் என்ன?

x