ப.சிதம்பரத்தை வேண்டுமென்றே வேட்டையாடுகிறார்கள்!- கவிஞர் முத்துலிங்கம் அதிரடி


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

எம்ஜிஆருக்குப் பிடித்தமான கவிஞர்களில் ஒருவர் கவிஞர் முத்துலிங்கம். 1977 தேர்தலில் இவரது பாடல்களை எம்ஜிஆர் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதும் வெற்றிக்கு ஒரு காரணம் என்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழ் சுட்டிக்காட்டியிருந்தது. சட்டமன்ற மேலவை உறுப்பினர், அரசவைக் கவிஞர் என்று எம்ஜிஆர் ரசித்துக் கொண்டாடிய இந்தக் கவிஞர் இன்று வரையிலும் சென்னையில் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். சினிமா, தமிழ் தொடர்பான எந்த நிகழ்வுக்கு அழைத்தாலும் தன் வயதையும் பொருட்படுத்தாமல் பங்கேற்பதை ஒரு சமூகக் கடமையாகச் செய்துவரும் முத்துலிங்கம், சமீபத்தில், உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த இளந்தமிழர் பயிற்சிப் பட்டறைக்காக மதுரை வந்திருந்தார். அவருடன் உரையாடியதிலிருந்து…

எப்படிப் போகிறது வாழ்க்கை?

எப்போதும் போல அமைதியாக, நிதானமாகப் போகிறது. எம்ஜிஆர் காலத்திலேயேகூட நான் கொடிகட்டிப் பறந்தேன் என்றோ, தாழ்ந்து போனேன் என்றோ சொல்ல முடியாது. வாய்ப்புக்காக நான் என்றைக்கும் எந்த இயக்குநரையும் போய்ப் பார்த்தது கிடையாது. சமீபத்தில், ‘மௌனகுரு’ இயக்குநர் சாந்தகுமார் ‘மகாமுனி' படத்திற்குப் பாடல் எழுதுமாறு கேட்டுக்கொண்டார். இரண்டு பாடல்கள் எழுதினேன். விஜய்சேதுபதி நடிக்கும் மற்றொரு படத்திற்குப் பாடல் எழுத இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அழைத்தார். எழுதினேன். முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் என்ற முறையில் மாதம் 12 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வந்தது. ஒரே உத்தரவில் அதை 20 ஆயிரமாக உயர்த்தியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. முன்பு எழுதிய சினிமா பாடல்களுக்கு வருடம்தோறும் ராயல்டி வருகிறது. வாடகை வீட்டில் இருந்தாலும் சுயமரியாதையோடு வாழ்கிறேன்.

x