நல்ல பல நன்மைகளைத் தருவதாக அமையட்டும்!


அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்விக்கெனப் பிரத்யேகத் தொலைக்காட்சி சேனலைத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.

முன்னுதாரணமான இந்த முன்னெடுப்பு, பள்ளிக்கு வெளியே அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்தெடுக்க மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள், மத்திய அரசின் துணையுடன் கல்விக்கெனத் தனி சேனல்களை நடத்திவருகின்றன. ஆனால், பள்ளி மாணவர்களுக்காக  மாநில அரசே கல்விக்கெனப் பிரத்யேகமாக தொலைக்காட்சி சேனல் தொடங்கி இருப்பது இதுவே முதல் முறை. இந்த சேனலில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 33 தலைப்புகளில் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், அறிவியல், தொழில்நுட்பம், பேச்சுப் போட்டி, இசை, விளையாட்டு எனப் பள்ளிப் பருவத்துக்குச் செழுமை சேர்க்கும் அம்சங்கள் இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
தனியார் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்ப வசதிகளின் துணையுடன் தங்கள் திறனை அதிகரித்துக்கொள்ள நிறையவே வாய்ப்பு உண்டு. அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அப்படியான வாய்ப்புகள் வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அந்த வகையில், பள்ளியில் மட்டுமல்லாமல் வீட்டிலும் பாடங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மாணவர்களின் திறனை மேம்படுத்தும்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நெட்வொர்க் மூலம் இது ஒளிபரப்பாகிறது. இதைத் தனியார் நெட்வொர்க்குகளுக்கும் விரிவாக்குவது பரவலான மாணவர்களுக்கு இதன் பலனைக் கொண்டுசெல்லும். அதேநேரம் இந்த நடவடிக்கைகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தனித்தன்மையைப் பாதித்துவிடக் கூடாது. 

x