வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
காங்கிரஸில் ஒரு மவுனச் சூறாவளி நிலைகொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அமித் ஷாவின் கண்ணசைவில் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் வேலி தாண்டி வேட்டையாடப்படுகிறார்கள். காங்கிரஸின் ஒட்டுமொத்தத் தலைவர்களும் போராட்ட குணத்துடன் அரசை எதிர்த்து நிற்பார்கள் என்று பார்த்தால் காங்கிரஸ் முகாமிலிருந்து ஆங்காங்கே வெள்ளைக் கொடிகள் நீள்கின்றன.
“மோடியை எப்போது பார்த்தாலும் தீயவராகச் சித்தரித்து விமர்சித்துக்கொண்டே இருந்தால், அவரை எதிர்கொள்ள முடியாது” என்று ஜெய்ராம்ரமேஷ் தொடங்கிவைத்த ரிலே ரேஸில் அபிஷேக்மனு சிங்வி, சசி தரூர், சத்ருகன் சின்ஹா என்று அடுத்தடுத்து பங்கேற்பாளர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். “பிரச்சினைகளின் அடிப்படையில்தான் பிரதமரைத் தாக்க வேண்டும், தனிப்
பட்ட முறையில் அல்ல” என்கிறார் அபிஷேக் மனுசிங்வி. “இதைத்தான் கடந்த ஆறு ஆண்டுகளாகச்சொல்லிவருகிறேன். அரசு சரியாகச் செயல்படும்போது மோடியைப் பாராட்டினால்தான் எதிர்க்கட்சிகளின் விமர்சனம் நம்பகத்தன்மை கொண்ட
தாக இருக்கும்” என்கிறார் சசி தரூர். மோடியைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்துவந்த மணிசங்கர் அய்யரும் இந்தக் கருத்துடன் உடன்பட்டு நிற்பது இன்னொரு விநோதம்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கையை மோடி அரசு அதிரடியாக மேற்கொண்டபோதே காங்கிரஸ் கட்சிக்குள் வெளிப்படையான கருத்து மோதல்கள் தொடங்கிவிட்டன. அபிஷேக் மனு சிங்வி தொடங்கி ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா, அவரது மகன் தீபேந்தர் ஹூடா, ஜோதிராதித்ய சிந்தியா, மிலிந்த் தியோரா, குல்தீப் பிஷ்னோய் போன்ற பல தலைவர்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஒருபக்கம் கட்சித் தலைமை இந்த நடவடிக்கையைக் கடுமை
யாக விமர்சித்துக்கொண்டிருந்த சமயத்தில் இந்தத் தலைவர்கள் மாறுபட்ட குரலில் பேசினர்.