ஆனந்தன தூக்கு... சிவசாமிய நோக்கு!
அமமுகவின் திருப்பூர் மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் எம்பி-யான திருப்பூர் சிவசாமி பெரும் கூட்டத்துடன் சென்று அதிமுகவில் ஐக்கியமாகி விட்டார். இவரது திடீர் ஜம்ப்பால் அமமுகவை விட அதிமுக முகாம்தான் இப்போது ஆடிப்போய்க் கிடக்கிறது. முன்பு திருப்பூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர் சிவசாமி. இவரால் கட்சிக்குள் வளர்க்கப்பட்ட எம்.எஸ்.எம்.ஆனந்தன் படிப்படியாக முன்னேறி மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடித்து மந்திரியும் ஆனார். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்ட சிவசாமி, மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினகரன் பக்கம் போனார். அங்கு, மாவட்டச் செயலாளர், மாநிலத் தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஆனந்தன் கம்யூனிஸ்ட் வேட்பாளரையே சமாளிக்க முடியாமல் தோற்றுப் போனார். இதனால், இனி ஆனந்தனை வைத்துக்கொண்டு ஆலாபனை செய்யமுடியாது என்ற முடிவுக்கு வந்த அதிமுக தலைமை, சமயம் பார்த்து சிவசாமிக்கு சிக்னல் கொடுத்தது. இதையடுத்து, கடந்த வாரம் தனது ஆதரவாளர்கள் புடைசூழ தாய்க் கழகத்தில் தஞ்சமடைந்தார் சிவசாமி. இவரது வருகையால் திருப்பூர் அதிமுக பலப்படுமா என்று தெரியாது. ஆனால், சிவசாமிக்கும் சிஷ்யகோடி ஆனந்தனுக்கும் பெரும் மல்லுக்கட்டு இருக்கும் போலிருக்கிறது.
வந்த இடத்துல வாகா சுட்டுட்டாங்க!
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் இறுதிச் சடங்கு ஆகஸ்ட் 26-ல் டெல்லியில் நடந்தது. அதில் கலந்துகொண்ட விஐபி-க்களைக் குறிவைத்து செல்போன் திருடர்களும் ஊடுருவி இருக்கிறார்கள். அந்தத் திருட்டுக் கும்பல் பாபுலால் சுப்ரியோ உள்ளிட்ட இரண்டு மத்திய அமைச்சர்கள் உள்பட மொத்தம் 12 பேரின் செல்போன்களை சத்தமில்லாமல் சுட்டுவிட்டதாம். செல்போனைப் பறிகொடுத்த அத்தனை பேருமே பாஜக முக்கியத் தலைகள். இருந்தாலும் இது தொடர்பாக வழக்கு ஏதும் பதிவுசெய்யாமல் செல்போன் திருடர்கள் பற்றி ரகசிய விசாரணை நடத்தி வருகிறது டெல்லி போலீஸ்.