இணையச் சிறையின் பணயக் கைதிகள் 27: ஆழ்மன வக்கிரங்களும் இணையமும்


நீலப்படங்களை இணையத்தில் நிறைய பார்த்துத் தன் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியைத் தொலைத்த இளைஞனைப் பற்றி கடந்த அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன்.

அவரைப் போல் நிறைய பேர் அந்த மாதிரிப் படங்களின் விளைவாகத் தவறான கருத்துகளை மனதில் ஏற்றிக்கொண்டு அதன் மூலம் பலவிதமான உடல் மற்றும் மனநலக் கோளாறுகளால் அவதியுறுகிறார்கள்.

நம் ஆழ்மன வக்கிரங்களும் வித்தியாசமான நமது உள்ளக்கிடக்கைகளும்தான் அதுபோன்ற படங்களைத் தயாரிப்பவர்களின் மூலதன ஐடியா என்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

இயல்பான ஒரு பாலியல் உறவின் தன்மைகளைப் பன்மடங்கு அதிகமாக்கி, வழக்கத்தில் இல்லாத ‘புதுமை’களைப் புகுத்தி வெளியிடுவதைப் பார்க்கும் பலரும் இயற்கைக்கு மாறான விஷயங்களைப் பார்த்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைகிறார்கள். அவற்றைச் சொந்த வாழ்வில் பரீட்சித்துப் பார்க்கவும் முயல்கிறார்கள். அதன் விளைவாகப் பாலியல் நோய்களால் பாதிக்கப்பட்டு, தேவையற்ற மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

இதனால், ‘உடல்ரீதியாக நான் மற்றவர்களைக் காட்டிலும் பலவீனமானவனாக இருக்கிறேன்’ என்ற தவறான முன்முடிவுக்கு வருகின்றனர் பலர். ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவரின் உடல்வாகு வேறு, அமெரிக்கரின் உடல்வாகு வேறு, ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவரின் உடல்வாகு வேறு என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர். அதன் விளைவாகத் தன்னைப் பற்றியே மிகத் தாழ்வாக நினைத்துக்கொண்டு அடுத்த முயற்சியிலேயே ஈடுபடத் தொடங்கிவிடுகின்றனர்.

நீலப்படங்களின் வேகம் நிஜ வாழ்க்கையில் இல்லை என்று கவலைப்பட்ட அந்த இளைஞரிடம் உண்மையை விளக்கிச் சொல்ல நிறைய நேரம் பிடித்தது. அவையெல்லாம் நடிப்பு, அதை அந்நடிகர்களே சொல்லியிருக்கிறார்கள். உண்மையான பாலியல் உறவு என்பது இங்கு சொல்லப்படாத பல விஷயங்களை உள்ளடக்கியது என்பன போன்றவற்றை அந்த இளைஞனுக்கு விளக்கினேன். மேலும், இதுபோன்ற படங்களைப் பார்த்து எப்போதுமே ஒருவித பதற்றத்தில் இருப்பதால் பாலியல் உறவில் திருப்தியற்ற நிலைக்குத் தள்ளப்படுவது பற்றியும் விளக்கினேன்.

‘போர்னோகிராபி’ (pornography) என்பதே ஆண்களின் இச்சைக்கான வடிகால் மாதிரியான ஒரு களம். அங்கே இருபாலினரும் முழுத் திருப்தி எட்டுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே.

கருத்தரிப்பு பற்றிய விழிப்புணர்வும், பால்வினை நோய்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வும் கொஞ்சம்கூட இல்லாமல்தான் மேற்சொன்ன நீலப்படங்கள் எல்லாம் வெளிவருகின்றன.

“எப்படி சார், இவர்களுக்கெல்லாம் எய்ட்ஸ் மாதிரி நோய்கள் எல்லாம் வராதா. இவ்வளவு மோசமாகவும் பாதுகாப்பு இன்றியும் கூடிக் களிக்கிறார்களே... இவர்கள் எப்படி தங்களைக் காத்துக்கொள்கிறார்கள்?” என்று அப்பாவியாக என்னிடம் கேட்டார் ஓர் இளைஞர்.
அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து, தனக்கு நோய் எதுவும் இல்லை என்று நிரூபணமான பின் படங்களில் நடிக்க வந்திருக்கலாம். அல்லது அதில் நடிப்பவர்களில் நிஜமான கணவன் - மனைவியாகக்கூட இருக்கலாம். அல்லது நாம் பார்க்கும் பாதிப்படமே ஏதேனும் தொழில்நுட்ப உதவியுடன் நம் கண்ணை மறைக்கும்படிச் செய்திருக்கலாம் – இப்படிப் பலவாறு கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்படும், இதுபோன்ற விவாதங்களின்போது.

“பாலியல் தொடர்பான படங்களைப் பார்ப்பதே தவறு என்றாகிவிடுமா?” எனக் கேட்டார் அந்த இளைஞர். இல்லை… அப்படிச் சொல்ல முடியாது. அவற்றைப் பார்த்துவிட்டு கண்டும் காணாமல் தம் ஆழ்மன வேட்கைகளுக்குத் தீனி போட்டுக்கொண்டு சாதாரணமாகக் கடந்து போய்விடுபவர்கள்தான் இங்கு அதிகம்.

குறிப்பிட்ட சில சதவீதம் பேர்தான் பிரச்சினையில் மாட்டிக்கொள்வார்கள். எல்லாவித ‘நடத்தை அடிமைத்தனம்’ (behavioural addiction) போலத்தான் இதையும் பார்க்க வேண்டும்.

நீலப்படங்களைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் இருப்பவர்கள் வேறு. ‘நீலப் படங்களைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை; அவை எனக்கு மணிக்கணக்கில் வேண்டும்; மற்ற எதுவும் எனக்கு முக்கியமில்லை’ என்று அதற்கு அடிமை ஆகிவிட்டவர்கள் வேறு.
அடிமைத்தனம் என்று சொல்லும்போதே மூளையின் பொதுவான சில செயல்பாடுகள் நினைவுக்கு வர வேண்டும். அதாவது, வேறு பல போதைப் பொருள் அடிமைத்தனத்தில் மூளை என்னென்ன மாற்றங்களைக் காண்பிக்கிறதோ அதே மாற்றங்களை இதுபோன்ற ‘போர்னோகிராபி’ அடிமைத்தனத்திலும் காணலாம்.

இன்னும் ஒரு நோயாக மருத்துவ நூல்களில் சேர்க்கப்படாவிட்டாலும், வருங்காலத்தில் சேர்க்கப்பட்டுவிடலாம் என்ற அளவில்தான் இப்பிரச்சினை உள்ளது.

நேரடியான அளவுகோல்கள் இல்லாததால் இந்தப் பிரச்சினை உண்மையில் எத்தனை பேருக்குப் பிரச்சினையாக இருக்கிறது என்பதும் தெரியாது. அதேபோல் எத்தனை பேர் இது போன்ற படங்களைப் பார்க்கிறார்கள் என்பது பற்றியும் சரியான புள்ளிவிவரம் இல்லாததால், இப்பிரச்சினை உண்மையிலேயே எவ்வளவு பெரியது என்பது பற்றியும் நமக்கு முழுமையாகத் தெரியாது.
ஆக, நீலப்படங்கள் பார்ப்பதை ஒரேயடியாகத் தவறு என்றும் சொல்ல முடியாது. முற்றிலும் சரியே என்று ஒத்துக்கொள்ளவும் முடியாது.
பொதுஜனங்களிடம் பாலியல் உறவு குறித்த தவறான தகவல்களை இதுபோன்ற படங்களால் விதைக்க முடியும். பலவிதமான வக்கிரங்களைப் பார்க்கும் பலரும் ஒருவிதக் குழப்பத்துக்கும் பதற்றத்துக்கும் ஆளாக நேரிடலாம்.

போதைப்பழக்கமும் ஆளுமைக் கோளாறும் ஒருங்கே சேர்ந்த நபர், இதுபோன்ற பாலியல் படங்களால் தூண்டப்படும்போது வன்புணர்வு போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது சாதாரணமாகி விடலாம்.

அதனாலோ என்னவோ அவ்வப்போது இதுபோன்ற இணையதள முகவரிகள் அரசாங்கத்தால் தடை செய்யப்படுகின்றன. எனினும், சிறிது காலம் மட்டுமே அந்த தளங்களைப் பார்க்க முடியாமல் இருக்கிறது. அதன் பின் சிறிய அளவிலான முகவரி மாற்றங்களுடன் அதே தளத்தை இணையத்தில் நம்மால் காண முடிகிறது (எல்லா தளங்களும் அப்படி அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமாக இருந்த சில நீலப்பட முகவரிகள் இப்போது அணுக முடியாதவாறு இருக்கின்றன).

பாலியல் படங்களைப் பொறுத்தவரை இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம் உண்டு. தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணின் முழு வீடியோவையும் இணையவெளியில் பதிவேற்றி மகிழும் சிலரின் மனப்பான்மைதான் அது. இந்த வக்கிர மனப்பான்மை நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிப்பதாக உள்ளது.

தன்னை  நம்பித் தனியாக வந்த பெண்ணையோ, ஆணையோ அறையில் தள்ளும்போதே கேமராவை ‘ஆன்’ செய்துவிடுகிறார்கள். அந்தப் படத்தில் நானும்தான் ‘நடிக்கிறேன்’ என்ற நினைப்பு இருந்தாலும் தன் ‘பார்ட்ன’ரைப் படம் பிடிக்கும் ஆர்வமே பிரதானமாகிவிடுகிறது.

பெரும்பாலான சம்பவங்களில் செல்போன் கேமரா  ‘ஆன்’ செய்யப்பட்டிருப்பது அப்பெண்ணிற்குத் தெரியாமல் இருப்பதை நாம் காண முடியும். ஒரு சில வீடியோக்களிலோ இரண்டு பேரும் விரும்பியே அதுபோன்ற படத்தில் நடிப்பதையும் நாம் பார்க்க முடியும்.
சம்பந்தப்பட்ட இருவரைத் தாண்டி மூன்றாவது நபர், தான் ‘செட்’ செய்த மறைமுகக் கேமரா மூலம் பலரது அந்தரங்கத்தைப் பொதுவெளியில் அரங்கேற்றம் செய்த வீடியோக்களை எக்கச்சக்கமாக இணையத்தில் காணலாம். இவற்றுக்கு ‘ஸ்பைகேம்’ (spycam) வீடியோக்கள் என்றே பெயர் உண்டு. எத்தனையோ பேரின் அந்தரங்கம் காற்றில் பறந்ததன் பின்னணியில் இது போன்ற சைபர் குற்றவாளிகளின் பங்கு மிக முக்கியமானது.

இதைத் திருட்டுத்தனமாகச் செய்யும் சமூக விரோதிகள் மறைமுகமாகத் தாக்குகிறார்கள் என்றால், “நம்பி வந்த என்னை எப்படிப் படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றலாம்... இது நம்பிக்கைத் துரோகம் மிகுந்த நேரடியான தாக்குதல் அல்லவா?” என்று கதறுகின்றனர் பல இளம்பெண்கள்.

தாம் பாலியல் உறவில் ஈடுபடுவதை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும் என்ற உந்துதலே, உளவியல் ரீதியாகக் குழப்பமான ஒரு விஷயம்தான். இருவர் மட்டுமே அனுபவித்து மகிழக்கூடிய ஓர் அந்தரங்கத்தை அடுத்தவருக்கு எதற்காகத் தெரிவிக்க வேண்டும்? அப்பெண்ணையோ ஆணையோ தனிமையில் சந்தித்ததை ஊருக்குச் சொல்ல விரும்புவதன் உளவியல் என்ன?

இணையம் பிரபலமாவதற்கு முன் இதுபோன்ற செயல்களை நாம் அவ்வளவாகக் கேள்விப்பட்டதில்லை. சமூகத்தில் பிரபலமானவர்களின் அந்தரங்கத்தை அம்பலமாக்குவதில் முனைப்புடன் இருந்த நபர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தன்னை நம்பி, காதலோ காமமோ தன்னுடன் பகிரவந்த ஒரு அப்பாவிப் பெண்ணை, அவள் அறியாமல் படம் பிடித்து உலகமே அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகச் சாதாரணமாகப் பதிவேற்றும் செயலை என்ன பெயர் கொண்டு அழைப்பது என்று தெரியவில்லை.

வெளியாகிவிட்டதே தன் அந்தரங்கம் என்று அதிர்ந்து கூனிக்குறுகி, ஆர்ப்பரித்து, அரற்றி, மனநிலை பாதிக்கப்பட்ட அல்லது உயிரையே விட்ட பெண்களின் இடத்திலிருந்து பார்க்கும்போது இணையம் ஒரு வரமா, சாபமா என்ற ஆயாசம் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

(இணைவோம்)

x