ஓட்டப்பந்தயங்களில் சர்வதேச அளவில் 7 உலக சாதனைகளைப் படைத்தவர் அமெரிக்காவின் டாமி ஸ்மித். மைதானத்தில் முடிசூடா மன்னனாக இருந்தபோதிலும் அவர் மனதில் ஒரு வருத்தம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அமெரிக்காவில் தனது கறுப்பின மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்களே என்பதுதான் அந்த வருத்தம். வெள்ளை இன மக்களுக்காக நடத்தப்படும் உணவு விடுதிகளில் கறுப்பின மக்கள் அனுமதிக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் அவரது மனம் அமைதியில்லாமல் தவித்தது.
சாதாரண மக்கள் மட்டுமின்றி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் கறுப்பின வீரர்களும் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவது அவரது மன உளைச்சலை அதிகரித்தது. இவற்றுக்கெல்லாம் ஏதாவது ஒரு தருணத்தில் எதிர்வினையாற்றத் திட்டமிட்டார். அந்த நேரத்தில்தான் 1968-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி மெக்ஸிகோவில் நடைபெற்றது.
அமெரிக்க கறுப்பின மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கும் வகையில் இந்த ஒலிம்பிக் போட்டியை கறுப்பின வீரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அந்நாட்டில் மனித உரிமைகளுக்காகப் போராடிவந்த ஹாரி எட்வர்ட்ஸ் என்ற பேராசிரியர் கோரிக்கை விடுத்திருந்தார். குறிப்பாக, தனது உயிர் நண்பரும் தடகள வீரருமான டாமி ஸ்மித்திடம் இதுபற்றி விவாதித்துள்ளார். ஆனால், டாமி ஸ்மித்துக்கு இதில் உடன்பாடு இல்லை. அதேநேரத்தில், “ஒலிம்பிக் போட்டியின் ஏதாவது ஒரு கட்டத்தில் கறுப்பின மக்களுக்காக குரல் எழுப்புவேன்” என்று உறுதி கூறிய ஸ்மித், இதுபற்றி சக கறுப்பின வீரர்களுடன் விவாதித்தார். இதைத்தொடர்ந்து ஒரு திட்டம் உருவானது.
1968-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி மெக்சிகோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. இப்போட்டியில் தான் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பியிருந்த ஸ்மித், கறுப்பின மக்களுக்கான குரலை அன்றைய தினம் எழுப்பத் தீர்மானித்தார். இதுதொடர்பாக சக கறுப்பின வீரர்களிடமும் விவாதித்த அவர், பரிசு பெறும் வீரர்கள் கருப்பு நிற கையுறையுடன் முஷ்டியை உயர்த்தி தங்கள் கருத்தைப் பதிவு செய்வது என்று முடிவெடுத்தார்.
ஓட்டப்பந்தயத்தில் வல்லவரான டாமி ஸ்மித், எதிர்பார்த்தபடியே 19.83 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து சாதனையுடன் தங்கம் வென்றார். இப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரரான பீட்டர் நார்மன் வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு அமெரிக்க கறுப்பின வீரரான ஜான் கர்லோஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். ஏற்கெனவே திட்டமிட்டபடி இரு கறுப்பின வீரர்களும் கருப்பு நிற கையுறையுடன் பதக்க மேடை மீது ஏறத் தயாரானார்கள். அப்போதுதான் கார்லோஸ் தனது கையுறையை விடுதியிலேயே விட்டுவந்தது தெரியவந்தது. இதைப்பற்றி இருவரும் விவாதித்துக்கொண்டிருக்க, அருகில் வந்த பீட்டர் நார்மன், “என்ன விஷயம்?” என்று கேட்டுள்ளார்.
கையுறை விஷயத்தை இருவரும் கூற, “இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. டாமி ஸ்மித் தன் திட்டப்படி வலது கையில் கருப்பு நிற கையுறையை அணியட்டும். அவரது மற்றொரு கையுறையை கார்லோஸ் தனது இடது கையில் அணியட்டும். உங்களுக்கு ஆதரவாக நானும் இருக்கிறேன்” என்று கூறினார் நார்மன். அத்துடன் கறுப்பின மக்களுக்கு ஆதரவான பேட்ஜையும் அவர் அணிந்தார். இதைத்தொடர்ந்து காலணி இல்லாமல் கருப்பு நிற காலுறையுடன் பதக்க மேடையில் ஏறிய ஸ்மித்தும், கார்லோஸும், அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, கருப்பு நிற கையுறையுடன் கூடிய முஷ்டியை உயர்த்திப் பிடித்து ‘பிளாக் பவர் சல்யூட்’ அடித்து கறுப்பின மக்களுக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்தக் காட்சியை அமெரிக்க புகைப்படக்காரரான ஜான் டாமினிஸ் (John Dominis) படம் பிடித்தார்.
ஒலிம்பிக் கிராமத்தில் இச்சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. விளையாட்டில் அரசியலைக் கலந்ததற்காக 3 வீரர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாமி ஸ்மித், “எங்கள் நாட்டு மக்களைப் பொறுத்தவரை வெற்றிபெற்றால் மட்டுமே எங்களை அமெரிக்கர்கள் கொண்டாடுவார்கள். அதே நேரத்தில் இப்போட்டியில் நான் தோற்றிருந்தாலோ, அல்லது ஏதாவது தவறான செய்கையைச் செய்து சிக்கியிருந்தாலோ, என்னை அமெரிக்கராகப் பார்க்கமாட்டார்கள். ‘நீக்ரோ’ என்று பொத்தாம் பொதுவாக கூறிவிடுவார்கள். இன்று நாங்கள் செய்ததைப் பலரும் தவறாகக் கருதலாம். ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் கறுப்பின மக்களுக்கு நாங்கள் செய்தது சரியென்று தெரியும்” என்றார்.
இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, “அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்களின் சக்தியைக் காட்டுவதற்காக வலது முஷ்டியை உயர்த்தினேன். கறுப்பின மக்களின் ஒற்றுமையை விளக்குவதற்காக கார்லோஸ் இடது முஷ்டியை உயர்த்தினார். இப்படி எங்களின் ஒற்றுமை மற்றும் சக்தியை உணர்த்துவதற்காக எங்கள் முஷ்டியை உயர்த்தினோம். அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்களின் வறுமையைப் பிரதிபலிப்பதற்காகக் கருப்பு நிற காலுறையை மட்டும் அணிந்துகொண்டு பதக்க மேடையில் ஏறினோம். அதே நேரத்தில் கறுப்பின மக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்த கருப்பு நிற ஸ்கார்ப்பை கழுத்தில் அணிந்துகொண்டோம்” என்றார்.
ஜான் டாமினிஸ் (John Dominis)
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1921-ம் ஆண்டு பிறந்த ஜான் டாமினிஸ், கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் சினிமாட்டோகிராபி படித்தார். 1943-ம் ஆண்டு அமெரிக்க விமானப் படையில் இணைந்த இவர், அதிலிருந்து வெளியேறிய பிறகு புகைப்படங்களை எடுத்து பல்வேறு பத்திரிகைகளுக்கும் வழங்கிவந்தார். கொரியப் போர், வியட்நாம் போர் உள்ளிட்ட பல்வேறு போர்களையும் படம்பிடித்துள்ள இவருக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் அதிகம். அதனாலேயே 6 ஒலிம்பிக் போட்டிகளில் இவர் புகைப்படக்காரராக இருந்துள்ளார். ‘பிளாக் பவர் சல்யூட்’ (Black Power salute) என்ற பெயரில் அழைக்கப்படும் கறுப்பின அமெரிக்க வீரர்களின் எதிர்ப்பைக் காட்டும் இப்படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்தது. 2013-ம் ஆண்டு தனது 92-வது வயதில் இவர் காலமானார்.