கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
சுகி சிவத்தின் உரைகளுக்கு எப்போதும் ரசிகர் கூட்டம் உண்டு. கோயில்கள், பொது மேடைகளில் இவருக்குக் கூடுகிற கூட்டத்தைப் போலவே, இவரது புத்தகங்கள், வானொலி, தொலைக்காட்சி உரைகளுக்கும் வரவேற்பு குறையவே இல்லை. இன்றைய இணைய உலகில், இவரது யூ-டியூப் சேனலும் தொடர்ந்து ஹிட் அடிக்கிறது. 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கும் இவர் மீது, சமீப காலமாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லியபடி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் சுகி சிவத்துடன் ஒரு பேட்டி:
எப்படி வந்தீர்கள் இந்தத் துறைக்கு?
பள்ளிக் காலங்களிலேயே வாரியார் சுவாமிகளின் நிகழ்ச்சிகளுக்கு என்னை அப்பா அழைத்துச் செல்வார். மயிலாப்பூரில் வசித்தபோது, கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. அப்போதெல்லாம் புலவர் திலகம் கீரன் எந்தப் பக்கவாத்தியமும் இல்லாமல் பல மணி நேரம் சொற்பொழிவாற்றியதைப் பார்த்து வியந்திருக்கிறேன். நாமும் ஏன் இவரைப் போலப் பேசக் கூடாது என்ற எண்ணம் வந்தது அப்படித்தான். சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்தபோது, பேராசிரியர் கணபதி தந்த பெரும் ஊக்கம் எனது பேச்சுத் திறனுக்கு உரம் போட்டது. இப்படி என் வளர்ச்சியில் என்னுடைய சுற்றுப்புறத்திற்குப் பெரிய பங்குண்டு.