துயர் துடைக்கும் தோழர் சாதிக் அலி!- ஃபேஸ்புக் வழியே பேர் சொல்லும் சேவை


கரு.முத்து
muthu.k@kamadenu.in

தோழர் சாதிக் அலி. ட்ரூ காலர் அவரது எண்ணுக்கான பெயரை அப்படித்தான் காட்டுகிறது. அவரது ஃபேஸ்புக் பக்கமும் அப்படித்தான் அவரை அறிமுகப்படுத்துகிறது. ‘தோழர்’ என்ற அந்த முன்னொட்டு வெறும் சம்பிரதாயமானதல்ல... ஏழ்மையில், நோயில் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்குத் தோள் கொடுக்கும் நிஜமான தோழமை இவருடையது. ‘இணைந்த கைகள் கரூர்’ என்ற இவரது முயற்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஃபேஸ்புக் பக்கம் உலகின் வெவ்வேறு மூலைகளில் உள்ள உதவும் உள்ளங்களையும் சமூக ஆர்வலர்களையும் ஒருங்கிணைக்கிறது. விஷயம் கேள்விப்பட்டு, கரூர் அருகே தோட்டக்குறிச்சியில் இருக்கும்  சாதிக் அலியைச் சந்தித்துப் பேசினேன்.

“ஐடிஐ முடிச்சிட்டு வெளிநாட்டுல வேலை பார்த்துட்டு இருந்தேன். 2015-ல சென்னை, கடலூர்ல கடுமையான மழை, வெள்ளம் வந்தப்ப மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு.

நண்பர்கள்கிட்ட பேசி ஒன்றரை லட்ச ரூபாய் நிதி திரட்டினோம். அதோட 300 போர்வைகளையும் வாங்கி அனுப்பி வைச்சோம். கஷ்டப்படுறவங்களுக்கு ஏதாவது ஒரு வகையில உதவ முடியும்னு தோணுச்சு. 2016-ல, தமிழ்நாட்டுக்கு வந்துட்டேன். பிறந்தது திருவண்ணாமலை மாவட்டம்னாலும் அண்ணன் குடும்பம் கரூரில் இருந்ததால நானும் கரூருக்கு வந்துட்டேன். இங்கே ஏழைத் தொழிலாளர்கள் படுற சிரமங்களைப் பார்த்து ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன்” என்று சொல்லும் சாதிக் அலி, ஒரு ஏழைச் சிறுமியின் இதய அறுவைசிகிச்சைக்காகப் பணம் திரட்டத் தொடங்கிய அனுபவம்தான் இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளி என்கிறார்.
“பசுபதிபாளையத்தைச் சேர்ந்த 9 வயசு சிறுமி கிருத்திகாவுக்கு உடனடியா ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை. யார் மூலமாவோ இந்தச் செய்தி எனக்கு வந்துச்சு. நான் உடனடியா அங்கே போய் நிலவரத்தைத் தெரிஞ்சிக்கிட்டேன். பெரிய தொகை தேவைப்படும்னு தெரிஞ்சவுடனே, அதைத் திரட்டுறதுக்கான வேலைகள்ல இறங்கினேன். அது பத்தின தகவல்களோட நோட்டீஸ் அடிச்சி, கரூர் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், கடைத்தெருன்னு எல்லா இடத்துலயும் கொடுத்து உதவி கேட்டேன். ஆனா, யாரும் என்னை நம்பல. பிழைப்புக்காக இப்படிச் செய்றேன்னு சில பேரு ஏளனமா பேசினாங்க. மொத்தமா 3,800 ரூபாய்தான் கிடைச்சுது. என்ன பண்ற
துன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தப்பதான், என் அண்ணி காமிலா, ‘மொபைல் போனை வச்சுட்டு நோண்டிகிட்டு இருக்கியே, அத வச்சு உருப்படியா ஏதாவது பண்ண முடியுமான்னு பாரு’ன்னாங்க. உடனடியா ஃபேஸ்புக்ல அது பத்தி எழுதினேன்” என்கிறார் சாதிக் அலி.

x