வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடக் கூடாது!


தமிழகத்தில் இது புதிய மாவட்டங்கள் உதிக்கும் காலம் போலும். ஆண்டின் தொடக்கத்தில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமானது கள்ளக்குறிச்சி. அடுத்து, திருநெல்வேலியிலிருந்து தென்காசியும், காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டும் தனி மாவட்டங்களாகின. அண்மையில் வேலூரும் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. நிர்வாக அடிப்படையில் அந்தந்தப் பகுதி மக்களுக்குப் பலனளிக்கும் விஷயம் என்பதால், இந்நடவடிக்கை நிச்சயம் வரவேற்கத்தக்கது.

புதிய மாவட்டங்களுக்கு, ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மாவட்ட மருத்துவமனை என்று பல்வேறு வசதிகள் கிடைக்கும். பல்வேறு பலன்கள் மக்களை வந்தடையும். பெரிய மாவட்டங்களில், தொலைதூர கிராம மக்கள் பல்வேறு விஷயங்களில் இடர்ப்பாடுகளைச் சந்திக்கிறார்கள்; நிலப்பரப்பின் அடிப்படையில் இயல்பாகக் கிடைக்க வேண்டிய பலன்களையும் அந்தந்தப் பகுதி மக்கள் இழக்கிறார்கள். இதன் அடிப்படையில்தான் புதிய மாவட்டங்களுக்கான குரல்கள் எழுகின்றன.

அதேசமயம், எந்த நோக்கத்திற்காகப் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றனவோ அந்த நோக்கங்களே நிறைவேறுவதில்லை என்பதுதான் துரதிருஷ்டம். உதாரணமாக, மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்த பெரம்பலூரிலிருந்து, 2007-ல் அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கும் பெரம்பலூரும் சரி, அரியலூரும் சரி பின்தங்கிய மாவட்டங்களாகவே இருக்கின்றன. அதிலும் கல்வி, சுகாதாரம், வாழ்வாதார மேம்பாடு போன்ற விஷயங்களில் அரியலூரின் நிலை மிக மோசம். ஒட்டுமொத்த மாவட்டங்களை எடுத்துக்கொண்டாலும், மனித வாழ்நிலை மேம்பாட்டு அறிக்கை தொடர்பாக 2003-ல் வெளியான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட சூழல்களில் இன்று வரை பெரிய மாற்றங்கள் இல்லை.

ஆகவே, புதிய மாவட்டங்களை அறிவிப்பதோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல் நிர்வாக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் புதிய மாவட்டங்களின் முன்னேற்றத்துக்கான பணிகளை முடுக்கிவிடுவதும் முக்கியம். அப்போதுதான் மாவட்டப் பிரிவினைகளின் பலனை மக்கள் அனுபவிக்க முடியும்!

x