ஹாட் லீக்ஸ்: சால்வை போட்டு சலாம் வைத்து...


பந்திக்குப் பிந்து... பதவிக்கு முந்து!

திருச்சி  மாநகர்  மாவட்ட  அதிமுக  செயலாளர்  பதவியைப் பிடிக்க சிட்டிங் செயலாளரும் முன்னாள் எம்பி-யுமான குமார், முன்னாள் மாவட்டச் செயலாளரும்அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், பால்வளத்தலைவர் கார்த்திகேயன் ஆகியோருக்கு இடையில் கடும்போட்டியே நடக்கிறது. ஏற்கெனவே தனது உடல் நிலையைக் காரணம் காட்டி மாவட்டச் செயலாளர் பதவியை குமாருக்கு விட்டுக் கொடுத்தார் வெல்லமண்டி. ஆனால், பதவி கைமாறியதும் தீட்டிய மரத்திலேயே கூர்பார்க்க ஆரம்பித்தார் குமார். இந்த நிலையில்புதிய வரவாக உள்ளே வந்தார் ஈபிஎஸ் ஆதரவாளரான கார்த்திகேயன். “அடுத்த தேர்தலில் வெல்லமண்டி நிக்கிறதா இல்லை. அவருக்குத் தலைமையும் சீட் குடுக்கிறதா இல்லை. அதனால, அவரோட திருச்சி கிழக்குத் தொகுதியில நான்தான் வேட்பாளர்” என்று ஆள் திரட்ட ஆரம்பித்தார் கார்த்திகேயன். இதைப் பார்த்துவிட்டு, “நல்லவேளை நம்ம பதவிக்கு ஆபத்தில்லை” என்று நினைத்துக் கொண்டிருந்தார் குமார். ஆனால், விட்டுக்கொடுத்த பதவியை மீண்டும் பிடிக்க வெல்லமண்டியும் இப்போது முஷ்டி தூக்குகிறார். இதைப் பார்த்துவிட்டு கார்த்திகேயனும் மாநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு அடிபோடுகிறாராம்.

சால்வை போட்டு சலாம் வைத்து...

சட்டமன்ற பொதுக்கணக் குழு, அதன் தலைவரான துரைமுருகன் தலைமையில் சென்ற வாரம் தென் மாவட்டங்களுக்கு விசிட் போட்டது. அப்போது மதுரையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த துரைமுருகனைக் காண நிறைய அதிமுக எம்எல்ஏ-க்களும் வந்தார்கள். அங்கே திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி நலம் விசாரித்ததும், கன்னம், இடுப்பைக்கிள்ளி கேலி செய்த கண்கொள்ளாக் காட்சிகளையும் பார்க்க முடிந்தது. தேனிக்குப் போன துரைமுருகனை வரவேற்ற ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார் எம்பி சால்வையெல்லாம் போட்டு சலாம் வைத்தார். “ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் விரும்பினாலும் திமுக எம்எல்ஏ-க்கள் அதை விரும்பவில்லை” என்று மக்கள் செல்வர் டி.டி.வி.தினகரன் சும்மாவா சொல்கிறார்?!

x