உலகம் சுற்றும் சினிமா - 5: காதல் அழிவதில்லை


மனிதர்களைப் போல் வேறெந்த உயரினமும் தன் உணர்வுகளைக் கொண்டாடித் தீர்ப்பதில்லை. மனிதர்களின் உணர்வுப் பட்டியலில் எப்போதுமே உயர்ந்த இடத்தில் இருப்பது காதல்தான். உன்னதமான உணர்வுகளுக்கு ஊற்றாக இருக்கும் காதல், எல்லோருக்குமே இனிமையானதாக அமைந்துவிடுவதில்லை. அந்த வகையில், வலி, வன்மம், கோபம் கலந்த காதல் கதைதான் ‘கான் வித் தி விண்ட்'. மார்கரேட் மிட்சல் எழுதிய ‘கான் வித் தி விண்ட்’ நாவலைத் தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 1939-ல் வெளியானது.

‘தி விசார்ட் ஆஃப் ஓஸ்' (1939), ‘ஜோன் ஆஃப் ஆர்க்' (1948) போன்ற புகழ்பெற்ற படங்களின் இயக்குநரான விக்டர் ஃபெளமிங் இயக்கிய மெகா காவியம் இது. படத்தின் பிரதான கதாபாத்திரமான ஸ்கார்லெட் ஓ ஹாரா என்ற இளம் பெண்ணின் கதாபாத்திரத்துக்கு, 1,400 பெண்கள் ‘ஆடிஷன்’ செய்யப்பட்டனர் . இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விவியன் லீ அந்தப் பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். ‘ஹாலிவுட் திரையுலகின் மன்னன்’ என்றழைக்கப்படும் கிளார்க் கேபில், பிரிட்டிஷ் நடிகரான லெஸ்லி ஹாவர்ட், பிரெஞ்ச் – அமெரிக்க - பிரிட்டிஷ் சினிமாக்களில் புகழ்பெற்று விளங்கிய ஒலிவா டி ஹாவிலாண்ட் என்று பெரும் நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டது இப்படம். அக்காலகட்டத்தில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட படைப்பு இது. குறிப்பாக அட்லாண்டா மாநிலம் தீப்பிடித்து எரியும் காட்சி, 30 ஏக்கர் நிலத்தில் செட் போட்டு எடுக்கப்பட்டது என்பது இன்றும் ஹாலிவுட் வட்டாரத்தில் வியப்பாகப் பேசிக்கொள்ளப்படும் விஷயம்.

கதை என்ன?

அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின்னணியில் எடுக்கப்பட்ட காதல் கதை இது. போர் ஆரம்பிப்பதற்கு முன்பும் அதற்கு பின்பும் ஏற்பட்ட விளைவுகளின் ஊடாகவே கதை பயணிக்கிறது. தெற்கு மாநிலமான ஜார்ஜியாவில் வசதியான பண்ணை அதிபராக வாழும் ஜெரால்ட் ஓ ஹாராவின் மகள் ஸ்கார்லெட் ஓ ஹாரா. ஆஷ்லி வில்க்ஸ் எனும் இளைஞனை ஸ்கார்லெட் ஒருதலையாகக் காதலிப்பாள். ஆனால், ஆஷ்லி அவனுடைய உறவுக்காரப் பெண் மெலனி ஹாமில்டனை மணக்க முடிவுசெய்வான். இதை அறிந்ததும் பொறாமை கொள்கிறாள் ஸ்கார்லெட். அந்த நேரத்தில் உள்நாட்டுப் போர் தொடங்குகிறது. ஆண்கள் அனைவரும் போருக்குக் கிளம்புகிறார்கள். ஆஷ்லியை வருத்தப்பட வைப்பதற்காக மெலனியின் சகோதரன் சார்லஸை, போருக்குக் கிளம்பும் முன் திருமணம் செய்துகொள்கிறாள் ஸ்கார்லெட். போரில் சார்லஸ் இறந்ததும் விதவையாகிறாள். கணவன் இறந்துவிட்ட நிலையிலும், ஆஷ்லியின் நினைவே அவளை வாட்டியெடுக்கிறது. ஒருகட்டத்தில் ஆஷ்லியின் மனைவியான மெலனி வசிக்கும் அட்லாண்டாவுக்குச் செல்வாள் ஸ்கார்லெட். கர்ப்பமாக இருக்கும் மெலனியுடன், வேண்டாவெறுப்பாகப் பழகுவாள்.

போரில் தெற்கு மாநிலங்கள் தோல்வியுற்ற பின்னர், அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அந்தச் சமயத்தில்தான், ஸ்கார்லெட்டின் வாழ்க்கையில் குறுக்கிடுவார் பெரும் செல்வந்தரான ரெட் பட்லர். அட்லாண்டாவில் உயிருக்கு ஆபத்து வர, ரெட் பட்லர் உதவியுடன் மெலினியையும் அவளின் பிஞ்சுக் குழந்தையையும் காப்பாற்றி தன் வீடு வந்து சேர்வாள் ஸ்கார்லெட். போருக்கு முன்பு பல கறுப்பின அடிமைகளுடன் செல்வச் செழிப்புடன் அவள் வாழ்ந்த பண்ணை, அழிந்துபோய் கிடக்கும். பண்ணையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஸ்கார்லெட் மறுமணம் செய்துகொள்வாள்.

இத்தனைக்குப் பிறகும், அவளுக்கு ஆஷ்லி மீதிருக்கும் காதல் மட்டும் உயிர்ப்புடன் இருக்கும். இரண்டாவது கணவனும் இறந்துவிடுவான். ஸ்கார்லெட்டை உயிருக்கு உயிராக நேசிக்கும் ரெட் பட்லர், தன்னை மணந்துகொள்ளும்படி அவளிடம் கேட்பார். பெரும் தயக்கத்துடன் அவரை மணந்துகொள்வாள் ஸ்கார்லெட். ஆஷ்லி மீது அவள் கொண்டிருக்கும் ஆழமான காதல் ரெட் பட்லருக்குத் தெரியும். எனினும், அவளை எப்படியும் மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருப்பார். தனது நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ந்துவருவதை உணரும் ரெட் பட்லர், வேதனை தாங்க முடியாமல் ஸ்கார்லெட்டைப் பிரிந்துசென்றுவிடுவார். அப்போதுதான், அவர் தன் மீது வைத்திருக்கும் உன்னதமான காதலை உணர்வாள் ஸ்கார்லெட். அவரைப் பின்தொடர்ந்து ஓட முடியாமல் துவண்டு நிற்கும் அவள், தனக்குத்தானே சொல்லிக்கொள்வாள் - ‘‘எப்படியும் ரெட் பட்லருடன் இணைந்து வாழும் வழியைக் கண்டுபிடிப்பேன். நாளை என்றொரு தினம் எப்போதும் உண்டு.”

அள்ளிய ஆஸ்கர் விருதுகள்

இத்திரைப்படம் 13 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை உட்பட 8 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. திரையில் வண்ணங்களைச் சிறப்பாகப் பயன்
படுத்தியதற்காகவும், தொழில்நுட்ப சாதனைக்காகவும் இரண்டு கவுரவ ஆஸ்கர் விருதுகளும் வழங்கப்பட்டன. ஆக, மொத்தம் 10 ஆஸ்கர் விருதுகளைப் பெற்று சாதனை புரிந்தது இப்படம். 9 நேரடி விருதுகளை வென்ற ‘கிகி’(1958) இந்தப் படத்தின் சாதனையைத் தாண்டினாலும், 1959-ல், வெளியான ‘பென் ஹர்’ படம்தான் 11 ஆஸ்கர் விருதுகளுடன் இந்தப் படத்தின் சாதனையை முறியடித்தது.
இப்படத்தில் கறுப்பின பணிப்பெண்ணாக நடித்
ததற்காகச் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை ஹாட்டி மெக்டேனியல்ஸ் பெற்றார். கறுப்பினத்தவர் ஆஸ்கர் விருது பெற்றது ஹாலிவுட் வரலாற்றில் அதுவே முதன்முறை. ஆஸ்கர் விருது பெற்ற முதல் வண்ணத் திரைப்படமும் ‘கான் வித் தி விண்ட்' தான்.

பகட்டாக வாழ்ந்த சமூகம், போருக்குப் பின்னால் காற்றோடு காற்றாகக் கரைந்துபோனாலும், காதல் ஒருபோதும் அழிவதில்லை என்று சொன்ன படம் இது. ஆஷ்லி மீதான தன்னுடைய காதல், தன் மீது ரெட் பட்லர் வைத்திருந்த காதல் இரண்டில் எது தனக்கு வேண்டியது என்று புரிந்துகொள்ளாமல் ஸ்கார்லெட் தள்ளாடுவதை மனித மனத்தின் நிர்வாணக் கண்ணாடியாகச் சித்தரித்திருப்பார் இயக்குநர் விக்டர் ஃபெளமிங்.

போருக்கும் காதலுக்கும் இடையிலுள்ள கதையை இந்த வாரம் பார்த்தோம். புரட்சிக்கும் காதலுக்கும் இடையே ஒரு கதையிருந்தால்..? அது ஓர் தன்பாலின உறவாளரின் கதையாக இருந்தால்..?

அடுத்த வாரம் பேசுவோம்.

x