கண்ணான கண்ணே- 27


நம் வாழ்க்கை முறையே நமது ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. உணவுப் பழக்கம் தொடங்கி உறக்கம் வரை நாம் பின்பற்றும் முறைகள் சீராக இல்லாவிட்டால் நம்மை லைஃப்ஸ்டைல் நோய்கள் ஆட்கொள்கின்றன. லைஃப்ஸ்டைல் பற்றி அதிகமாக பேசும் நமக்கு உண்மையில் அதன் மீது புரிதல் இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

லைஃப்ஸ்டைல் அதாவது வாழ்க்கை முறை என்பது அவகேடோ சாப்பிடுவதும் விமானத்தில் பிசினஸ் வகுப்பில் பறப்பதும் அல்ல. ஆரோக்கியம் பேணும் ஒழுக்க நெறிகளை சீராக வரையறுத்து அதனை அன்றாடம் கடைப்பிடிப்பதே லைஃப்ஸ்டைல்.
உங்களின் நட்புவட்டம் அதிகமாக இருக்கலாம். அதனால் வாரம் முழுவதும் ஏதாவது சுப நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டியதாக இருக்கலாம். அதற்காக ஒவ்வொரு நாளும் நீங்கள் விழாவை உண்டு சிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. உணவும், மதுவும் இலவசமாகவே கிடைக்கிறது என்பதற்காக விருந்தை சிறப்பிக்க நினைத்தீர்கள் என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. விழாக்களுக்குச் சென்றுவிட்டு நேரத்தோடு வீடு திரும்பி வீட்டில் சமைக்கப்பட்ட உணவை பசிக்கேற்ப உண்டால் நிம்மதியான தூக்கம் கிட்டும்.

காபி, டீக்கும் விடைகொடுங்கள்...

ஒரு கப் காபி அல்லது டீ குடிக்காவிட்டால் என் நாள் தொடங்காது. காபி குடித்தால்தான் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்று இருந்தீர்கள் என்றால் உங்களை நீங்களே தூக்கி சுமப்பது போன்ற உணர்வுடன்தான் சுற்றித் திரிய வேண்டியிருக்கும். இது நீங்கள் உங்களின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்துவதற்கான எச்சரிக்கை ஒலி. உணவை சீராக்குங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், போதுமான அளவு உறங்குங்கள். இவை மூன்றும் சரியாக இருந்தால் உங்களின் நாளைத் துவக்க காபி, டீயும் தேவைப்படாது.

அழுத்தமும் தூக்கமும்...

உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் அழுத்தமும் தூக்கமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. உங்களுக்கு அழுத்தம் அதிகமாக இருந்தால் அது தூக்கத்தில் எதிரொலிக்கும். வாழ்க்கையில் சவால்களை சந்திப்பது அவசியமானதே. ஆனால், அந்தச் சவால் உங்களுக்கு அழுத்தத்தைத் தருவதாக இருந்தால் அதைத் துறப்பதுதான் நல்லது. உங்களின் உடலுக்கும், மனதுக்கும் அழுத்தம் தரும் உறவோ, வேலையோ, நட்போ உங்களின் வாழ்க்கையைப் போர்க்களம் போல் ஆக்கிவிடும். ஆரோக்கியமான போட்டிகளை எதிர்கொள்வது வேறு; போர்க்களத்தில் மோதுவது வேறு. அதனால் சவால் எதுவென்பதை மதி நுட்பத்துடன் உணர்ந்து அழுத்தத்தில் இருந்து விடுபடுங்கள்.

அழுத்தத்தால் ஏற்படும் தூக்கமின்மை உங்களின் மூளையைச் சோர்வடையச் செய்யும். சோர்வின் காரணமாக தூக்கமில்லாமல் போகும். தூக்கமின்மை ஹார்மோன்களை பாதிக்கும். விளைவு, உடல் நலக்குறைவு, பாலுறவில் நாட்டமின்மை போன்றவையாக இருக்கும். ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க நீங்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்; 
அடித்தளம்.

மதிய வேளையில் உறங்கலாமா?

நிறைய பேருக்கு மதிய உறக்கத்தின் மீது சந்தேகங்கள் இருக்கின்றன. சில பெண்கள் மதிய உறக்கத்தை பியூட்டி ஸ்லீப் என்றுகூட அழைக்கின்றனர். ஒருவகையில் இது உண்மைதான். மதிய உறக்கம் உங்களின் உடலை டீ ஸ்ட்ரெஸ் அதாவது அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது. ஆனால், இந்தத் தூக்கம் நிச்சயமாக 20 நிமிடங்களுக்கு மிகக்கூடாது. 20 நிமிடங்களுக்குள் மதிய வேளையில் ஒரு குட்டித் தூக்கம் போட்டால் அது இரவு தூக்கத்துக்கு நாம் போட்டுவைக்கும் அச்சாரம்.
தூக்கத்தைப் பற்றி நாம் இன்னும் விரிவாகவே பேச வேண்டியிருக்கிறது. தூக்கம் சீராக இருக்க வேண்டுமானால் உணவுப் பழக்கவழக்கம் சீராக அமைய வேண்டும்.

பசியோடும் உறங்க முடியாது, வயிறு புடைக்க உண்டாலும் சீராக உறங்க முடியாது. ஆதலால், முதலில் உணவு முறை எப்படி தூக்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்று பார்ப்போம். அதிகமாக உண்பவர்களோ, அதிகமாக உறங்குபவர்களோ உடல் - மனம் சமன்பாட்டை எட்ட இயலாது. உடலையும் மனதையும் ஒருங்கிணைப்பதுதான் யோக நிலை. யோகா பழக வேண்டுமானால் உணவும், உறக்கமும் சீராக இருக்க வேண்டும்.

நீங்கள் உணவு உட்கொண்ட பின்னர் உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க வேண்டுமானால் உங்கள் உணவின் க்ளைசிமிக் இன்டக்ஸ் (ஜிஐ) சீராக இருக்கும் வகையில் உங்கள் உணவு முறை இருக்க வேண்டும். ஒரு உணவு எடுத்தால், அது எவ்வளவு வேகமாக ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, ரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிக்கிறதோ அதுவே ஜிஐ எனப்படுகிறது. எனவே, குறைந்த ஜிஐ கொண்ட உணவுகளை உட்கொள்ளுங்கள். உணவில் நெய், தேங்காய் எண்ணெய், வெள்ளை வெண்ணெய் ஆகியனவற்றை சேர்த்துக் கொண்டால் திருப்தி உணர்வு ஏற்படும். உண்மையில் அளவில் கொஞ்சமே உண்டிருப்போம். ஆனால், உணவு உண்டது போதும் என்ற உணர்வு இயல்பாக ஏற்படும். மேலும், தேவையான ஊட்டச்சத்துகளை கிரஹிக்கவும் உதவும்.
அதேபோல் உணவில் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களையும் தாதுக்களையும் வழங்குவதோடு லெப்டின் என்ற ஹார்மோன் சுரப்பதற்கும் உதவுகிறது. லெப்டின் என்ற ஹார்மோனே நாம் எப்போது சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பின்னிரவில் தூக்கத்தின் நடுவே எழுந்து ஏதாவது உண்ணும் உணர்வு ஏற்படாமல் இருக்கச் செய்கிறது.

ஆனால், கர்ப்ப காலத்திலோ அல்லது பேறுகாலத்துக்குப் பின்னர் முதல் சில மாதங்களிலோ தூக்கத்தின் நடுவே பசி ஏற்படுவது இயல்பே. அந்த மாதிரி நேரங்களில் பால் சிறந்த உணவு. அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட லட்டு சாப்பிடலாம். இவை இரண்டும் ஜீரண மண்டலத்தில் எவ்வித அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் உங்கள் பசியைப் போக்கும்.

முந்திரிப்பாலை முயற்சி செய்து பாருங்களேன்...

இரவு தூங்கச் செல்லும் முன் ஊறவைத்த முந்திரிப்பருப்புகளை அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம். இது தூக்க மாத்திரைகளைப்
போல் தூக்கத்தைக் கொடுக்கும். ஆனால், எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் பயன் தரும்.

சாப்பிடும்போது டிவி, செல்போன், லேப்டாப் என்று எவ்வித கவனச் சிதறலும் இல்லாமல் உணவின் மீது மட்டுமே முழு கவனம் கொண்டு சாப்பிடுங்கள். உணவும் உறக்கமும் சீராக இருந்தால் நீங்கள் கர்ப்பம் தரிப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது.

சுற்றுச்சூழல் மாசு...

இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு நம் வாழ்க்கை முறையில் குறுக்கிடுவதாக உள்ளது. சில மாசுகளை நாமே கட்டுப்படுத்தலாம். உதாரணத்துக்கு புகைப்பதை நிறுத்துவது. ஆனால், மாசுக் கட்டுப்பாட்டை பெரிய அளவில் அரசாங்கமே மேற்கொள்ள முடியும். டெல்லியில் நிலவும் காற்று மாசு அங்குள்ள மக்களின் பாலுணர்வை 30 சதவீதம் வரை குறைத்திருக்கிறது என்கிறது ஓர் ஆய்வறிக்கை.

நம்மை நோய்வாய்ப்படச் செய்யும் எந்த ஒரு காரணியும் நாம் கர்ப்பம் தரித்தலைத் தடுக்கிறது. இன்சுலின் எதிர்ப்பைப் போலவே சுற்றுச்சூழல் மாசும் ரத்த ஓட்டத்திலிருந்து உடலுக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்துகளை கிரஹிக்கவிடாமால் தடுக்கிறது. காற்றிலிருக்கும் நச்சுத்தன்மை அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது.

சீனத் தலைநகர் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றபோது தங்கள் முதல் பருவ கர்ப்ப காலத்திலிருந்த பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளனர். காரணம், ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக அரசாங்கம் மாசுக் கட்டுப்பாட்டில் மிக மிக அதிக கவனம் செலுத்தியிருக்கிறது. ஆரோக்கியமான கர்ப்பகாலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள நேரடித் தொடர்பு இதன் மூலம் உறுதியானது.

உங்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டால் நீங்கள் வாழும் பகுதியில் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருக்கலாம். அதனால் சொந்த வீடாகவே இருந்தாலும்கூட நீங்கள் கர்ப்பமடையத் திட்டமிட்டிருந்தால் சில மாதங்கள் மாசு அதிகமில்லாத பகுதிக்கு குடிபெயருங்கள். சுற்றுச்சூழல் மாசு மட்டுமே உங்களின் கர்ப்பத்துக்கு குறுக்கே நின்றிருந்தால் நிச்சயமாக இடமாற்றத்திற்கு பின்னால் கர்ப்பம் தங்கும். கர்ப்ப காலத்தின் இரண்டாம் பருவம் முடிந்த பின்னர் உங்களின் பழைய வீட்டுக்குத் திரும்பலாம்.

அடுத்த அத்தியாயத்தில் கர்ப்ப கால உணவுகள் பற்றி பிரத்யேகமாகப் பார்ப்போம்.

 (வளர்வோம்... வளர்ப்போம்)

x