அழகாகத்தான் போய்க் கொண்டிருந்தது அந்த இளம் தம்பதியின் வாழ்க்கை. திடீரென அவர்களுக்குள் ஒரு மாற்றம். “இப்ப கொஞ்ச நாளாவே அவர் என்கிட்ட அன்பா நடந்துக்கறதில்லை டாக்டர்... எதுக்கெடுத்தாலும் எரிஞ்சி விழறார். நானாகவே ஆசையா அவர் பக்கத்துல போனாலும் உதாசீனப்படுத்தறார். ‘இல்லே இப்போ வேணாம்... எனக்கு விருப்பமில்லை... என்னைத் தனியா இருக்க விடு’ன்னு கத்துறார். என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கும் புரியல டாக்டர்” என்று விசும்பலுடன் சொன்னார் அந்த இளம் மனைவி.
திருமணமாகி இது இரண்டாவது ஆண்டு. இருவருமே நல்ல வேலைக்குச் செல்கின்றனர். குழந்தை எதுவும் இல்லை. தனிக்குடித்தனம்தான். பெரியவர்களின் இடர்பாடும் இல்லை. தாம்பத்யம் முதலில் இனித்தது என்றாலும் கடந்த ஆறு மாதமாக அந்த இளைஞன் ஆர்வம் குறைந்தவனாகக் காணப்படுகிறார்.
எதையோ பறி கொடுத்தவர் போல இருப்பதோடு எப்போது பார்த்தாலும் செல்போனும் கையுமாக அமர்ந்து விடுகிறார். வேறு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. அவ்வளவாக நண்பர்களும் இல்லாததால் பெரிய அளவில் ஊரைச் சுற்றுவது என்பதெல்லாம் கிடையாது. “என்ன... கொஞ்சநாளா வேலைக்குப் போகும் ஆர்வம்கூடக் குறைஞ்சி போச்சு சார் அவருக்கு. லீவு போட்டுட்டு என்னையும் வேலைக்கு அனுப்பிட்டு தனியாளா செல்போனும் கையுமா வீட்டில் இருக்கறார். முன்னே இல்லாத ஒரு பழக்கம்னு அதைத்தான் சொல்லலாம். அதோட…..” என்று கூச்சத்துடன் இழுத்தார் அந்தப் பெண்.
“எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லும்மா…”
“எப்படிச் சொல்றதுனு தயக்கமா இருக்கு சார்...”
“....................”
அவரே வாய் திறக்கட்டும் என்று இடைவெளி விட்டேன். மெல்ல தயக்கத்தினூடே அவர் சொன்னது தன் கணவர் இப்போதெல்லாம் நிறைய நீலப்படங்கள் (pornography) பார்க்கிறார் என்பதுதான்.
திருமணமான புதிதில் லேசாக அதைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டியவர் அதன் பின் சமீப காலமாக, அதாவது ஆறு மாத காலமாக நிறைய நீலப்படங்களை மொபைலில் பார்ப்பதை மனைவி கவனித்திருக்கிறார்.
தன் மனைவி தூங்கிய பின், வேலைக்குப் போன பின், எங்கேனும் ஊருக்குப் போனாலும் நேரமும் தனிமையும் கிடைக்கும்போதெல்லாம் போனும் கையுமாக அதுவும் பாலியல் தூண்டல் அதிகம் உள்ள விஷயங்களாகவே அந்த இளைஞர் பார்த்து வந்தது அவர் மனைவிக்கு நன்றாகவே தெரிந்து இருக்கிறது.
இளம் தம்பதியினர், வயது வேகத்தில் பரஸ்பர கிளர்ச்சிக்காக இது போன்ற படங்களைப் பார்ப்பது சகஜமே. நிஜ வாழ்க்கையின் தாம்பத்ய சாகரங்களுக்குத் தூபம் போடுவதற்கான கிரியா ஊக்கியாக இது போன்ற பாலியல் தூண்டல்களைப் பார்க்கிறோம். அது சகஜம்தான். ஆனால், உறவு கொண்டு மகிழவும், உள்ளன்போடு பகிரவும் இல்லாள் ஒருத்தி இருக்கும்போது அதையும் விட செல்பேசியின் சில்மிஷப் படங்கள் ஒருவரை ஈர்க்குமா? அதை இயல்பானதாக எடுத்துக்கொள்ள முடியுமா?அப்படி கிளர்ச்சிக்குரியதான படங்களைப் பார்த்து அதன் விளைவாக தன் இணையுடன் கூடிக் கலப்பதை விடுத்து அதற்கு முரணாக ஏன் தனிமையை விரும்புகிறார் அந்த இளைஞர்? இப்படிப் பல கேள்விகள் எல்லோருக்குமே எழும்.
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று காமம். இனப்பெருக்கத்துக்காக இயற்கை நமக்களித்துள்ள பெரிய சூத்திரங்கள்தான் காதலும் காமமும். காதல் இல்லாத காமம் செயற்கையானதாகவும் காதலோடு கூடிய காமமே முழு இன்பமும் நிம்மதியும் பயப்பதாகவும் நம் கற்பிதம் இருக்கிறது. ஓரளவுக்கு அது சரியானதும் கூட.
காம விகாரங்கள் பல வகைப்படும். இன்னொருவரின் அந்தரங்கத்தைக் கண்டு களிக்கும் மன விகாரம் ‘வாயரிசம்’(voyeurism) எனப்படும். பன்னெடுங்காலமாகவே அடுத்தவரின் அந்தரங்கம் யாருக்குமே மிக சுவாரசியமான ஒன்றுதான்.
மறைந்தும், அடுத்தவருக்குத் தெரியாமலும் செய்த காரியங்களை இப்போது லேசாக செல்போன் ஸ்கீரீனை சாய்த்தும் கணினியின் திரையிலும் நளினமாகப் பார்க்கப் பழகிக் கொண்டுள்ளோம். முன்னெப்போதும் இல்லாத அளவு நீலப்படங்கள் இப்போது இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
13 வயதைத் தாண்டிய பள்ளி மாணவர்கள்கூட சாதாரணமாக பாலியல் தொடர்பான படங்களைப் பார்ப்பது குறித்த அறிவுடன் தான் உள்ளனர். உலகின் வளங்கொழிக்கும் துறைகளில் ஒன்றாக ‘போர்னோகிராபி’ துறை உள்ளது.
அதிவேக இணையம், முகவரியும் அடையாளமும் தேவைப்படாமலே தேடிப் பார்க்க முடியும் சுதந்திரம், எந்த நேரமும் எங்கிருந்தும் அணுக முடிகிற இலவச இணைய வசதி போன்றவை இது வரை நீலப் படங்கள் எப்படி இருக்கும் என்று தெரியாதவரைக்கூடத் தன்பக்கம் கவர்ந்திழுக்கும் காரணிகளாகின்றன.
தொடர்ந்த பணிச் சுமையிலிருந்து சற்றேனும் ரிலாக்ஸ் செய்து கொள்ள, போரடிக்கிறது இதைப்பார்த்தால் கொஞ்சம் பொழுது போகும், மனச்சோர்வு குறையும் என்று பலரும் பல காரணங்களுக்காக நீலப்படங்களைக் காண்கின்றனர். சந்தேகமே இன்றி இவற்றால் பலரும் மன அழுத்தம் நீங்கி லேசாக உணர்கின்றனர். குறிப்பாக இளம் வயதினர் தங்கள் கிளர்ச்சியை மேலும் அதிகப்படுத்திக்கொள்ளப் பார்க்கின்றனர் என்றால் நாற்பது வயதைத் தாண்டியவர்கள் குறைந்து வரும் காமக்கிளர்ச்சியைச் சரிக்கட்டிக்கொள்ள இவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஆக, எல்லாப் பழக்கங்களையும் போல இதுவும் அந்த எல்லைக்கோட்டைத் தாண்டும்போதுதான் பிரச்சினைக்குரியதாக மாறி விடுகிறது. இணையம் இருப்பதன் பலனாகப் பல்வேறு நடத்தைக் கோளாறுகளும் அடிமைத்தனமும் நமக்கு ஏற்படுவதை முன் கண்ட அத்தியாயங்களில் பார்த்திருக்கிறோம். நீலப்படங்களைப் பார்த்து உடல் மற்றும் மனநல பாதிப்புகளுக்கு ஆளாவதும், அல்லது தொடரும் இப்பழக்கத்தால் மீண்டு வர முடியாத அளவுக்கு அடிமைத்தனம் (internet porn addiction) ஏற்பட்டு விடுவதும் அதில் ஒன்றுதான்.
நீலப்படங்களைப் பார்க்கும் எல்லோருமே அதனால் பாதிப்புக்குள்ளாவதும் அடிமைத்தனத்தில் சிக்கிக் கொள்வதும் இல்லை. நிச்சயமாக இல்லை. மிகச் சொற்பம் பேரே இப்படியான சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றனர்.
தொழிலில், சமூகத்தில் மற்றும் குடும்பத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படாதவரை எதுவும் பிரச்சினையில்லை. ஆனால், இவற்றில் ஏதோ ஒரு இடத்திலோ அல்லது எல்லா இடங்களிலுமோ பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் எந்த ஒரு பழக்கமாக இருப்பினும் அது களையப்பட வேண்டியதே.
நீலப்படங்களைப் பார்ப்பது என்பது காலப்போக்கில் அதிகரித்துக்கொண்டே செல்லும். ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து மணி நேரம் வரை இவற்றைப் பார்த்துக்கொண்டே ஒரு மாய உலகில் சஞ்சரிப்பவர்கள் பலர் உண்டு. ‘தம் துணையுடன் மகிழ்வாக இருக்கப் பார்க்கத் தொடங்கினேன்’ என்று சொல்லும் பலரும் காலப்போக்கில் இணையுடன் இணைந்திருப்பதை விட நீலப்படங்களில் லயித்து சுய இன்பத்தில் திளைத்திருப்பதையே விரும்பும் விசித்திர மனப்போக்குக்கு ஆளாகி விடுகின்றனர்.
அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்கும் நீலப்படங்கள் எவர் ஒருவரையும் கட்டிப்போட்டு விடும் திறன் கொண்டவை. நமது மனமகிழ்ச்சிக்குக் காரணமான ‘டோபமைன்’ (dopamine) என்னும் வேதிப்பொருள் இங்கும் வருகிறது. ஒவ்வொரு முறை இது போன்ற படங்களைக் காணும் போதும் இவ்வேதிப்பொருட்கள் அதிகளவில் சுரந்து மேலும் மேலும் இவற்றைத் தேடிப்போகச் சொல்கிறது.
தொடர்ந்து இவற்றிலேயே மூழ்கி இருப்பவர்கள் காலப்போக்கில் எல்லா அடிமைத்தனங்களும் போலவே தனியான ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்குவர். படங்களைப் பார்க்கும் நேரம் அதிகரிப்பு, வெரைட்டியான படங்களைத் தேடித்தேடிப் பார்ப்பது, அப்படிப் பார்ப்பதனால் வேலை வாழ்க்கை போன்றவற்றில் பாதிப்பு வருகிறது என்று தெரிந்தும் மீண்டு வர முடியாமை, அப்படிப் படங்களைப் பார்க்காமல் இருக்கவே முடியாத சூழலுக்குப் போய் அடிமையாகி விடுவது இப்படித்தான் இணைய வழி பாலியல் படங்களுக்கு அடிமைத்தனம் ஏற்பட்டு விடுகிறது.
நீலப்படங்களை அதிகமாகப் பார்ப்பதால் பெரிய அளவில் அடிமைத்தனம் ஏற்படாவிட்டாலும் நிறைய உளவியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட உண்மை.
குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, தமது இணையருடனான கருத்து வேறுபாடுகள், ஆண்மைக் குறைவு போன்ற குறைபாடுகள், மனச்சோர்வு, மனப்பதற்றம் எனப் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் இவர்கள்.
இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் நாம் குறிப்பிட்ட இளைஞனும் அப்படி பாதிக்கப்பட்டவர் தான். ஆரம்பத்தில் பரஸ்பர மன எழுச்சிக்க்காக பாலியல் படங்களைப் பார்க்க ஆரம்பித்தவர் ஒரு கட்டத்தில் அதிலேயே மூழ்கி விட, நிஜ வாழ்வின் உறவே அவருக்குப் பிடிக்காமல் போய் விட்டது.
நீலப்பட நடிகைகளின் நடிப்பில் லயித்து அவை போன்ற அபிநயங்கள்(!?) தன் மனைவியிடம் இல்லை எனக் குறைபட்டுக்கொண்டார். நீலப்பட நடிகர்களின் வீரியமிக்க நடிப்பை நிஜம் என்றும் தம்மால் அப்படி மிருகத்தனமாக இயங்க முடியவில்லை என்றும் குற்ற உணர்ச்சியும் தாழ்வு மனப்பான்மையும் கொள்கிறார்.
உடலியல் ரீதியாகவே வேற்று நாட்டு ஆண்கள் தான் சூப்பர், நாமெல்லாம் ஒன்றுமேயில்லை, அதிலும் தான் சுத்த வேஸ்ட் என்று உருவகப்படுத்திக்கொண்டு ஒரு மாயவட்டத்தில் வாழத் தொடங்கிய அவர் இன்று இழந்திருப்பது நல்ல ஒரு தாம்பத்தியத்தையும், மன நிம்மதியையும்.
இணையத்தால் வீசி எறியப்பட்ட அவரது வாழ்க்கையை மனநல ஆலோசனைகளாலும், மருந்துகளாலும், நடத்தை மாற்றங்களாலும், அனைவரின் ஒத்துழைப்போடும் மீட்டெடுத்தோம். அது அடுத்தவாரம்…’
(இணைவோம்)