காதல் ஸ்கொயர் 26


அன்று மாலை நந்தினியும் அருணும் கௌதமின் வீட்டுக்கு வந்தபோது, கௌதம்தான் கதவைத் திறந்தான். நீண்ட நாட்கள் கழித்து கௌதமைப் பார்த்தவுடன் நந்தினியின் கண்கள் கலங்கிவிட்டன. “ஹாய்… எப்படி இருக்க?” என்ற நந்தினியின் தொண்டை அடைத்தது. சட்டென்று எச்சிலை விழுங்கி அழுகையை அடக்கினாள்.

“நந்தினி… ஏன் கண் கலங்குறீங்க? இப்ப உடம்புல எந்தப் பிரச்சினையும் இல்லை. உள்ள வாங்க…” என்று கதவை அகலமாகத் திறந்தான் கௌதம். உள்ளே நுழைந்த அருண் சுற்றிலும் பார்த்தபடி, “வீட்டுல யாரும் இல்லையா?” என்றான்.
“அம்மா கபாலீஸ்வரர் கோயில் போயிருக்காங்க. அப்பா க்ளினிக்ல இருக்கார். பூஜா இவ்ளோ நேரம் இருந்துட்டு, இப்பதான் வீட்டுக்குப் போனா. உக்காருங்க…” என்று சோபாவில் அமர்ந்தான் கௌதம்.

அவன் அருகில் அமர்ந்த நந்தினி, ஒன்றும் பேசாமல் கௌதமையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். இரண்டு மாத காலம் பார்க்காமலிருந்த பிரிவுத் துயரமும் காதலும் கலந்து அவள் கண்கள் ஒரு வித்தியாசமான உணர்வைக் காட்டியது.
“ஹேய்… என்ன பாத்துக்கிட்டேயிருக்கீங்க?” என்றான் கௌதம்.

“ஒண்ணுமில்ல… நல்லாருக்கியா கௌதம்?”

“அப்ஸொல்யூட்லி ஃபைன். உங்களுக்கு இப்ப நல்லா நடக்க முடியுதா?”

“ம்... நோ ப்ராப்ளம். அப்புறம் ஒரு விஷயம். நீ என்னை வாங்க போங்கன்னு சொல்ல மாட்ட. நீன்னுதான் சொல்லுவ…”
“அப்படியா?” என்று சில வினாடிகள் யோசித்த கௌதம், “அது…  ஆக்ஸிடென்ட் ஆகறதுக்கு முன்னாடி. ஆக்ஸிடென்ட்டுக்கு அப்புறம் நீங்க எனக்குப் புது ஆளுதானே…” என்றவுடன் நந்தினியின் முகம் மாறியது. தொடர்ந்து கௌதம், “கொஞ்ச நாள் ஆச்சுன்னா சரியாப் போயிடும். ஃபர்ஸ்ட் டைம் எங்க வீட்டுக்கு வந்துருக்கீங்க. காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு எழுந்து நடந்தான். அவன் உள்ளே சென்றவுடன் நந்தினி, “என்ன அருண்… என்னைப் புது ஆளுங்கிறான்…” என்றாள் அருணிடம்.
“ஆமாம் நந்தினி… உங்களுக்குள்ள எவ்ளோ நடந்திருந்தாலும், அது அவனுக்குத் தெரியாதுல்ல?”

“புரியது… நான்கூட எங்க லவ் மேட்டர பொறுமையா சொல்லலாம்னுதான் நினைச்சேன். ஆனா பூஜா எந்நேரமும் இவன் கூடவேதான் இருக்காங்கிற. அது வேற உதைப்பா இருக்கு…” என்று கூறியபோது நந்தினியின் முகத்தைப் பார்க்காமல் திரும்
பிக்கொண்டான் அருண். அவன் கௌதம்-பூஜா காதல் விஷயத்தை நந்தினியிடம் சொல்லவில்லை. சொன்னால் நந்தினியால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது.

“என்ன அருண்… இன்னைக்கி சொல்லிடட்டுமா?” என்று நந்தினி கேட்க… அருண் தீவிரமாக யோசித்தான். ‘நந்தினி எதற்காகவும் கௌதமை இழக்கத் தயாராக இல்லை. அவள் விஷயத்தை தள்ளிப் போடப் போட…கௌதமும், பூஜாவும் மேலும் நெருங்கி கல்யாணம் வரை சென்றுவிட்டால் வம்பு. எனவே நந்தினி எவ்வளவு விரைவில் சொல்கிறாளோ அவ்வளவு நல்லது. எனவே அவள் சொல்லட்டும். அதன் பிறகு கடவுள் விட்ட வழி’ என்ற முடிவுடன் அருண், “ஓகே நந்தினி… சொல்லிடு…அதான் நல்லது” என்றபோது கௌதம் கையில் காபி கோப்பைகளுடன் வந்தான்.

காபியை வாங்கி ஒரு மடக்கு குடித்த நந்தினி, “நல்லாதான் காபி போடுற” என்றவள், அவனிடம் எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்று புரியாமல் தவிப்புடன் காபியை அருந்தினாள். சில வினாடிகள் தீவிர யோசனைக்குப் பிறகு நந்தினி, “கௌதம்… காதல்னா என்னான்னு உனக்குத் தெரியுமா?” என்றாள்.

“ம்… தெரியுமே… ரெண்டு பேரு ஒருத்தர
ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்க விரும்புறது…”

“தேங்க் காட்…” என்ற நந்தினி மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் காபியைக் குடித்து முடித்தாள். பின்னர் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, “கௌதம்…உனக்கு ஞாபகம் இருக்காது. ஆக்ஸிடென்ட்டுக்கு முன்னாடி நாம ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸா இருந்தோம். ஒரு நாள்கூட நம்ம பாத்துக்காம இருந்ததுல்ல… சனி, ஞாயிறுல்லாம் ஊட்டி, குன்னூர், அவலாஞ்சினு நீல்கிரிஸ் ஃபுல்லா தனியா சுத்துவோம்…..” என்றாள்.

“இஸ் இட்? இன்ட்ரஸ்ட்டிங். ஆனா எனக்கு எதுவும் ஞாபகமில்லையே…”

“பரவால்ல. நான் போட்டோஸ்லாம் காமிக்கிறேன்” என்ற நந்தினி தனது மொபைலில் இன்ஸ்டாகிராமைத் திறந்தாள். அதில் அப்லோட் செய்திருந்த புகைப்படங்களில் கௌதமும் நந்தினியும் வெவ்வேறு இடங்களில், தோளில் கைபோட்டபடி, இடுப்பை அணைத்தபடி, உற்சாகமாகச் சிரித்தபடி…என்று ஏராளமான காட்சிகள். புகைப்படங்களைப் பார்த்தபடி கௌதம், “அருண் மாதிரி, நீங்களும் எனக்கு ரொம்ப க்ளோஸ் போல…” என்றான்

“அருணை விட க்ளோஸ்” என்ற நந்தினி அடுத்த போட்டோவைக் காண்பித்தாள். அதில் கௌதம், நந்தினியை முழுங்காலுக்கு மேல் பிடித்து உயரே தூக்கியிருக்க… நந்தினி முகத்தில் அலறலுடன், பயத்தில் கௌதமின் முகத்தை தனது மார்போடு சேர்த்து இறுக அணைத்திருந்தாள். அருண்தான் அந்த போட்டோவை எடுத்திருந்தான். இதைப் பார்த்தவுடன் லேசாக கௌதமின் முகம் மாறியது. நந்தினியைக் கேள்வியுடன் பார்த்த கௌதம், “ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் மாதிரி தெரியுது….” என்றான்.  ‘ரொம்ப ரொம்ப
க்ளோஸ்…” என்ற நந்தினி அவன் அருகில் நெருங்கி அமர்ந்தாள்.

“இதில்லாம நம்ப இன்னும் க்ளோஸா எடுத்துகிட்ட போட்டாஸ் எல்லாம் உனக்கு ஜிமெயில்ல அனுப்பியிருந்தேன்” என்றவள் மொபைலில் தனது ஜிமெயில் அக்கவுன்ட்டைத் திறந்தாள். அதில் அவனுக்கு அனுப்பியிருந்த சில போட்டோக்களைப் பார்த்தவுடன் கௌதமின் முகத்தில் அதிர்ச்சி. ஒரு போட்டோவில் கௌதம் அவள் கன்னத்தில் முத்தமிட்டதை நந்தினி செல்ஃபி எடுத்திருந்தாள். இன்னொரு போட்டோவில் இருவரும் இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டிருந்ததை அவள் செல்ஃபி எடுத்திருந்தாள். நந்தினி “நாம எவ்ளோ க்ளோஸ்னு புரியுதா?” என்றதற்கு கௌதம் பதில் சொல்லவில்லை. தொடர்ந்து நந்தினி, “இன்னும் புரியலன்னா இன்ஸ்டாவுல நாம சாட் பண்ணினத காமிக்கிறேன்” என்று இன்ஸ்டாவில், அவர்கள் ஒரு காதல் கால நள்ளிரவில் உரையாடியதைக் காட்டினாள்.

கௌதம்: ஐ லவ் யூ x 1,000
நந்தினி: ஐ லவ் யூ x 10,00,00,000
கௌதம்: அவ்ளோ லவ்வா? ஓகே… நமக்குக் கல்யாணமானதுக்கு அப்புறம், மிட்நைட் இந்த மாதிரி முழிச்சிருக்கிறப்ப என்ன பண்ணுவ?

நந்தினி: ம்… உன்ன நல்லா இறுக்கி கட்டிப்பிடிச்சுகிட்டு…
கௌதம்: சூப்பர்… எடுத்தவுடனே டாப் கியர்ல போறியே… அப்புறம்?
நந்தினி: உன் காதுல என் உதடு சில்லுன்னு உரச… உரச…
கௌதம்: அய்யோ…பின்றியே…அப்புறம்?
நந்தினி: உன் அம்மா என்ன செஞ்சாலும், ஒரு வார்த்தகூட சொல்ல மாட்டியான்னு கேப்பேன்.
கௌதம்: நாசமாப் போக…… ரொமான்ஸ் கற்பனைலகூட, மாமியார் மேல குறை சொல்லாம இருக்க மாட்டீங்களா?
சட்டென்று மொபைலிலிருந்து முகத்தை நிமிர்த்திய கௌதம் நந்தினியைத் தவிப்புடன் பார்த்தபடி, “நாம ரெண்டு பேரும்…..” என்று இழுத்தான். சட்டென்று குரல் உடைந்த நந்தினி, “லவ் பண்ணிட்டிருந்தோம் கௌதம்… உயிருக்குயிரா லவ் பண்ணோம். நீ இல்லன்னா நான் இல்லன்னு லவ் பண்ணோம். நம்மளோட எதிர்கால வாழ்க்கை எப்படியிருக்கும்னு ஆயிரக்கணக்கான கனவுகளோட லவ் பண்ணோம்” என்றவள் சட்டென்று குரல் உடைந்து, அழுதபடி கௌதம் மடியில் படுத்தாள். கௌதம் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான்.

நந்தினி முதுகு குலுங்க அழுதுகொண்டிருப்பதைப் பார்த்த கௌதம், “நந்தினி….. அழாதீங்க….. எந்திரிங்க…..” என்று கூற…. நந்தினி எழாமல் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தாள். கௌதமின் தவிப்பைப் பார்த்த அருண் அவனைப் பரிதாபமாக பார்த்தபடி, “நந்தினி…. அழாத…. கெட்அப்” என்று கூற….. நந்தினி எழுந்து கண்களைத் துடைத்துக்கொண்டாள். பின்னர் தெளிவான குரலில், “கௌதம்…நாம லவ் பண்ணதுல சந்தேகம் ஏதும் இல்லல்ல?” என்றாள். கௌதம் ‘இல்லை’ என்பதுபோல் தலையை ஆட்டினான்.
“அப்ப, உங்கம்மாப்பாகிட்ட சொல்லிடலாம்.”

“எதுக்கு?”
“எதுக்கா? நம்ப ரெண்டு பேரும் லவ் பண்ணிருக்கோம். கல்யாணம் பண்ணிக்க வேண்டாமா?” என்றவுடன் கௌதமின் முகத்தில் பெரும் அதிர்ச்சி. அதைப் பார்த்த நந்தினி, “இதுக்கு எதுக்கு யோசிக்கிற?” என்றாள்.
“இல்ல… ரெண்டு பேரும் லவ் பண்ணியிருக்கிறது உண்மை
தான். ஆனா… எனக்கு எதுவும் ஞாபகத்துல இல்லையே…” என்றவுடன் நந்தினி வேகமாக, “அப்ப, என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறியா?” என்றாள் கோபத்துடன்.
பதிலுக்கு கௌதம், “நந்தினி… நான் அதைப்பத்தி ஒண்ணும் சொல்லல. எனக்கு எதுவும் ஞாபகமில்லன்னுதான் சொன்னேன்” என்றான்.

“உங்கம்மாப்பாவகூடதான் மறந்துட்ட… இப்ப அவங்கள ஏத்துக்கலையா?” என்று நந்தினி கேட்டவுடன், கௌதமிற்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. சில வினாடிகள் யோசனைக்குப் பிறகு, “லவ் பண்ணா, கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிறது சரிதான். ஆனா இப்ப நான்…” என்று கௌதம் இழுக்க… அருணுக்கு நெஞ்சு தடதடத்தது. கௌதம் இப்போது பூஜா விஷயத்தைச் சொல்லப்போகிறான் என்று புரிந்தவுடன் அருண் கண்களால், “வேண்டாம்” என்பதுபோல் ஜாடை காட்டினான். புரிந்துகொண்ட கௌதம் பேசுவதை நிறுத்தினான்.

இதற்கு மேல் மௌனமாக இருப்பது சரியில்லை என்று அருண், “நந்தினி… இப்பதான் விஷயத்த சொல்லியிருக்க…இந்த உண்மைய முதல்ல அவன் ஜீரணிக்கட்டும். மத்த விஷயம்லாம் அப்பறம் பேசலாம்” என்று கூற… நந்தினி அமைதியானாள்.
சில வினாடிகள் மௌனமாக கௌதமின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நந்தினி, “ஓகே கௌதம். நீ நம்ம லவ் பண்ணத மறந்துட்டாலும், அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை. ஏன்னா நம்ம லவ் பண்ணது நூறு சதவீதம் உண்மை. அதனால இனிமே என் வாழ்க்கைல, உன்னைத் தவிர வேற எந்த ஆணுக்கும் இடம் கிடையாது. நேரம் பார்த்து உங்கம்மாப்பாகிட்ட விஷயத்தச் சொல்லு. நான் இப்ப கிளம்புறேன்” என்று எழுந்த நந்தினி விறுவிறுவென்று வாசலை நோக்கி நடந்தாள். நந்தினி செல்வதைப் பார்த்தபடி அருண், “கௌதம்… நீ டென்ஷன் ஆகாதே. நான் நாளைக்குக் காலைல ஏழு மணிக்கு வர்றேன். அடுத்து என்ன பண்றதுன்னு டீடெய்லா பேசலாம்” என்று கூறிவிட்டு நடந்தான்.

கௌதம் குழப்பத்துடன் தலையில் கையை வைத்துக்கொண்டு, தூரத்தில் சென்ற நந்தினியைக் காதலுமின்றி, வெறுப்புமின்றி இயந்திரம் போல் பார்த்தான்.

(தொடரும்)

x