வீட்டுக்குள் பொக்கிஷம்- இது நான்கு தலைமுறையின் தேடல்


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

சிவகாசி டீக்கடை ஒன்றில்  டீ குடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு மனிதரைப் பார்த்ததும் சுறுசுறுப்பாகிவிட்டார் கடைக்காரர். ``சார், இவங்க வீட்டுக்கு நீங்க போயிருக்கீங்களா? ஒரு எட்டுப் போயிட்டு வாங்க சார். மிஸ் பண்ணிடாதீங்க'' என்றார் நம்மைப் பார்த்து. உடனே அந்தப் பெரியவர்,  ``அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்'' என்று தன்னடக்கத்தோடு சொல்ல, விடவில்லை கடைக்காரர். ``சார், அவர் சொல்றத நம்பாதீங்க. அவர் கூடவே வீட்டுக்குப் போனாத்தான் நான் ஏன் சொன்னேன்னு புரியும்'' என்று கட்டாயப்படுத்தினார்.

அந்தப் பெரியவர் பெயர் ராஜராஜன். அருங்காட்சியகம் என்று சொல்லும் அளவுக்குத் தன் வீட்டில் பழங்காலப் புழங்கு பொருட்களையும், மன்னர்கள் காலத்து அரும்பொருட்களையும் சேகரித்து வைத்திருப்பதே அவரது சிறப்பு. ``இன்னொரு நாள் வாங்க சார், இப்ப கொஞ்சம் பொருட்கள்தான் இருக்குது'' என்று ராஜராஜன் தயங்கினாலும், டீக்கடைக்காரரின் கண்களில் தெரிந்த பிரகாசம், அங்கே போயே ஆகவேண்டும் என்று தூண்டியதால் வீட்டுக்குப் போய்விட்டோம்.

சிவகாசிக்கே உரிய சின்னஞ்சிறு சந்து போன்ற வீதிகள். அதில் அனந்தப்ப நாடார் தெருவில் இருக்கிறது ராஜராஜனின் வீடு. உள்ளே நுழையும்போதே, ஆச்சரியம். வரவேற்பறையில் பாதி அவிழ்ந்திருந்த ஒரு மூட்டை நம்மை பிரமிக்க வைத்தது. மன்னர்கள் கால முத்திரை மோதிரங்கள், போர்வாள், வேலைப்பாடுகள் நிறைந்த கருவூலச்சாவி என்று சில பொருட்கள் மட்டும் வெளியே தெரிய, ``விருதுநகர் அருங்காட்சியகத்துல போன மாசம் நடந்த அருங்காட்சியக தின கண்காட்சிக்கு அழைச்சிருந்தாங்க. தூக்கிட்டுப்போற அளவுக்கு இருக்கிற சின்னப் பொருட்கள் கொஞ்சம் உள்ளே இருக்குது'' என்றார். ``எங்கே காட்டுங்க'' என்றோம் ஆர்வமாக.
ஒரு பொருளைக்காட்டி, ``இது என்னன்னு தெரியுதா?'' என்று கேட்க, ``மோதிரம் மாதிரி ஒரு ஓட்டை இருக்குது. ஆனா, ஏகப்பட்ட கை வேலைகள் இருக்குதே? என்ன இது'' என்று குழம்பினோம். ``இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கால் விரலில் அணிந்திருந்த மெட்டிபோன்ற ஒரு அணிகலன்'' என்றார். இப்படி அக்காலப் பெண்கள் அணியும் ஆபரணங்களிலேயே ஏராளமான வகைகளைக் காட்டினார். அரச குடும்பப் பெண்கள் குளித்ததும் தலையைக் காய வைப்பதற்காக புகைபோடப் பயன்படுத்தும் யாழி தூபக்கால், ஐம்பொன்னால் ஆன நகைப்பெட்டி, 400 ஆண்டுகளுக்கு முந்தைய பன்னீர்சொம்புகள், கசப்பு நாக்கில் படாமல் மருந்தூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான சங்குகள், விதவிதமான உலோக கிலுக்குகள், வெள்ளித் தண்டை, வெற்றிலைப்பெட்டிகள், பாக்குவெட்டிகள் என்று சுமார் 100 பொருட்கள் அங்கு இருந்தன. ``வேறு என்ன இருக்கிறது?'' என்று கேட்டோம். புதையல் போல பழங்காசுகளைக் கொண்டுவந்து கொட்டினார். இந்தியாவில் இதுவரையில் கிடைத்த நாணயங்களி லேயே மிகப்பழமையானதாகக் கருதப்படுகிற கப் வடிவ வெள்ளி நாணயம், இலங்கையை வெற்றிகொண்ட தன் நினைவாக ராஜராஜசோழன் வெளியிட்ட நாணயம், சுந்தரபாண்டியன், கிருஷ்ண தேவராயர் கால நாணயங்கள் தொடங்கி, 25 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் புழக்கத்தில் இருந்த இந்திய நாணயங்கள் வரையில் அவரது சேகரிப்பில் இடம்பெற்றுள்ளன.

x