வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்க ராகுல் பிடிவாதமாக மறுத்துவிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் சோனியா காந்தி மீண்டும் தலைவராகி இருக்கிறார். இடைக்காலத் தலைவர்தான் என்றாலும் இந்நிகழ்வு ஒருபக்கம் வரவேற்புக்கும் மறுபக்கம் விமர்சனத்துக்கும் வழிவகுத்திருக்கிறது.
மீண்டும் வந்த காரணம்
காஷ்மீரில் 370-வது, 35-A சட்டக்கூறுகள் நீக்கம், காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது எனும் பரபரப்பான சூழலில், ஆகஸ்ட் 10-ல், காங்கிரஸ் செயற்குழு கூடியது. அந்தக் கூட்டத்திலும் எவ்வளவோ வற்புறுத்தியும் ராகுல் தனது ராஜினாமா முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. அதனால் வேறு வழியின்றி அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிவந்தது.
பிரியங்கா காந்திக்குத்தான் கட்சியின் பெரும் தலைவர்களின் ஆதரவு இருந்தது. ஏற்கெனவே, நட்வர் சிங், அபிஜீத் முகர்ஜி, சத்ருகன் சின்ஹா, அமரிந்தர் சிங், சசி தரூர் உள்ளிட்ட பலரும் பிரியங்காவின் தலைமையை ஏற்கத் தயாராகவே இருந்தனர். ஆனால், பிரியங்கா அதை உறுதியாக மறுதலித்துவிட்டார். இதனால் தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜுன கார்கே போன்ற மூத்த தலைவர்கள் முதல் ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் போன்ற இளம் தலைவர்கள் வரை பலரது பெயர்களும் அடிபட்டன. ஆனால், எதிலும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.