குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் தமிழக முதல்வர் திறந்துவிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த சில மாதங்களாகத் தண்ணீர்ப் பற்றாக்குறை வாட்டிவந்த நிலையில், தற்போதுதான் தமிழகம் சற்று ஆறுதலான நிலைக்குத் திரும்பியிருக்கிறது. ஆனால், கிடைத்த வரத்தைக் கடலில் வீசியெறிவதுபோல், காவிரி நீர் வீணாகக் கடலில் கலக்கும் சூழல் இருப்பதுதான் வேதனையளிக்கிறது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அம்மாநிலத்தின் அணைகளிலிருந்து திறக்கப்பட்டிருக்கும் உபரிநீர் தமிழகத்தை வந்தடைந்துகொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே மேட்டூர் அணையை அரசு திறந்திருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகச் சேதமடைந்த முக்கொம்பு தடுப்பணை, ஓராண்டாகியும் இன்னும் சீர்செய்யப்படவில்லை. இதன் விளைவாக, கொள்ளிடம் வழியாகக் காவிரி நீர் கடலில் கலக்கும் சூழல் நிலவுகிறது. இந்தத் தடுப்பணையில் தண்ணீரைத் தேக்கினால்தான் காவிரி படுகை பகுதிகள் பாசன வசதி பெற முடியும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்திருக்கிறார்கள்.
நீர் மேலாண்மையில் தமிழகம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்பதைத்தான் இது காட்டுகிறது. குறிப்பாக ஆறுகளைத் தூர் வாரும் பணிகள் இன்னும் நிறைவுபெறவில்லை. தமிழகம் முழுவதும் 10,000 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று கடந்த மாதம் முதல்வர் அறிவித்தார். இதுவும் காலம் தப்பிய அறிவிப்பாகவே தெரிகிறது. இன்னொரு பக்கம் மணல் கொள்ளைகளால் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது.
இவற்றுக்கெல்லாம் நிர்வாக ரீதியில் உறுதியான தீர்வுகளுக்கு அரசு வழிவகுக்க வேண்டும். கடவுள் அருளால் மேட்டூர் அணை நிரம்பியிருப்பதாக முதல்வர் பெருமிதப்பட்டிருக்கிறார். ஆனால், கிடைக்கும் நீரைத் தேக்கிவைத்து தமிழகத்தின் குடிநீர்ப் பிரச்சினையையும் விவசாயப் பிரச்சினையையும் சரிசெய்யும் பொறுப்பு கடவுளுக்கு அல்ல, அரசுக்குத்தான் இருக்கிறது. முதல்வர் அதை மறந்துவிடக் கூடாது!