பாலியல் வேட்கைகளுக்கான சிறந்த களமாக இணையம் மாறி வருவது சமீப காலத்திய மாற்றங்களில் ஒன்று. வெளியே போக வேண்டாம். மறைந்து மறைந்து சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயமும் தேவையில்லை. இருந்த இடத்தில் இருந்து ஒரு ‘க்ளிக்’கில் ஆயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் தொடர்புகொள்ளக் காத்திருக்கிறார்கள். இப்படியான ஒரு நடத்தையைத்தான் ‘சைபர் செக்ஸ்' (cybersex) என்று சொல்கிறோம். இன்டர்நெட் சாட்ரூம்கள் போன்றவை திருமணமானவர்களுக்கென்றே ஸ்பெஷலாக இருக்கிறதாம்.
தன் வாழ்க்கை இப்படி இருக்கிறது, என் கணவனோ அல்லது மனைவியோ இப்படிப்பட்டவர், எங்களுக்குள் தாம்பத்யம் இவ்வாறு தான் நடக்கிறது எனப் பேசிக்கொள்வதாகத் தொடங்கும் நட்பு இறுதியில் நேரில் சந்திப்பதில் முடிகிறது. ஆனால், ஒரு சிலருக்கோ சைபர்செக்ஸே போதும்; நேரில் எல்லாம் சந்தித்து உடல் ரீதியான பரிமாற்றங்கள் வேண்டும் என்பதெல்லாம் இல்லை என்ற அளவிலேயே நின்றுவிடும்.
கணவனோ மனைவியோ அருகில் இருக்கும்போதே மற்றவருடன் சாட் செய்கிறோம் என்று பலரும் ஆய்வில் தெரிவித் திருக்கிறார்கள். ‘அந்தப் பெண்ணுடன் பேசும் போது ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் போலவே உணர்ந்தேன்; எனவே, என் மனைவியிடம் சொல்லாத பலவற்றையும் அவளுடன் பகிர்ந்து கொண்டேன்’ என்கிறார் ஒரு கணவர்.
இணைய வழி உறவுக்கு ஏங்கித் தீவிரமாக அதில் சிக்கிக் கொள்பவர்கள் பலரும் அதற்குக் காரணமாகக் குறிப்பிட்டது தம் குடும்ப வாழ்க்கையில் போதுமான பாலியல் திருப்தி இல்லாமல் போனதுதான் என்கின்றனர். “குழந்தையை வளர்ப்பதிலேயே அவர் கவனம் செலுத்துகிறார். என்னைக் கண்டு கொள்வதே இல்லை. அதனால்தான் இணையத்தை நாடினேன். ஈஸியாகவும் இருக்கும் ரிஸ்க்கும் குறைவு” என்கிறார் ஒரு குடும்பத்தலைவன்.
வேறு சிலரோ “வாழ்க்கையில் வெரைட்டி வேணும் சார்” என்று சொல்லி புதுப்புது அனுபவங்களுக்காக ஆன்லைன் உறவைத் தேடுவதாகக் குறிப்பிடுகின்றனர். ‘‘என் இளமைக் காலத்தில் நான் மிஸ் பண்ணிய விஷயங்கள் எல்லாம் கண் முன்னே விரல் நுனியில் கிடைக்கும்போது இழப்பதற்கு யாருக்கு மனசு வரும்” எனக் கேட்கும் 64 வயது முதியவருக்கு பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட பெண் தோழிகள் இருக்கிறார்களாம். யாருடன் டேட்டிங் போவது என்பதைக் குலுக்கல் முறையில்தான் தேர்ந்தெடுப்பாரோ என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.
ஆயினும் இதுபோன்ற ஆன்லைன் உறவுகள் பல இடங்களில் தம்பதியினருக்கிடையேயான உறவு முறிந்து போவதற்கும், சமயங்களில் விவாகரத்துக்கும் காரணமாகி விடுகின்றன. “சைபர் செக்ஸில்தானே ஈடுபட்டேன். நேரில் சந்தித்து உடல் ரீதியாகப் பரிமாறிக் கொள்ளவில்லையே” என்று குறிப்பிட்டாலும் தன் இணைக்கு ஏற்படும் பாதிப்பு கடுமையாக இருப்பதைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
இவை தவிர, நிறைய ஆன்லைன் செயலிகள் இருக்கின்றன. ஒரு பெண் ஆன்லைனில் கிட்டத்தட்ட அரை நிர்வாணமாக திரையில் தோன்றிப் பேசுவார். பெரும்பாலும் தன் வீட்டில் படுக்கை அறையில், சமையலறையில், புழக் கடையில் இருந்தவாறு பேசும் அவரிடம் ஒன்றோ இரண்டோ இரண்டுக்கும் மேற்பட்டவர்களோ சாட் செய்வார்கள். பேச்சு பல கட்டங்களைத் தாண்டி சுவாரசியமாகப் போகும். “இவ்ளோ பேசறேனே... எனக்கு என்ன தருவீங்க” என்ற கட்டம் வரும்போது அந்தப் பெண்ணிற்கு சில பரிசுகளை நாம் தரலாம். அவற்றைச் சேகரம் செய்துகொண்டேவரும் அவர் நாளை அதைப் பணமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
பெரிய அளவில் பாலியல் வெளிப்பாடுகள் இல்லாவிட்டாலும் இந்த போதையை விரும்பும் பல பேர் முழு நேரமும் இதற்காக ஆன் லைனில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதிலும் சில பெண்கள் முழுநேரமும் இதை ஒரு வேலையாகவே செய்கின்றனர்.
பணத்துக்குப் பணம், என் சுய காதலுக்கும் தீனி போட்டது போல் ஆயிற்று, என் கணவனுக்கும் துரோகம் செய்யாமல் சின்சியராக இருந்தது போலவும் ஆயிற்று என்று வாதம் செய்யும் பெண்கள் நிறைய உண்டு. குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, கிரைண்டரில் மாவு அரைக்கும்போது என எல்லா நேரமும் ஸ்மார்ட்போன் முன்பாகவே அழகு காட்டும் இவர்கள் தூங்கும் போது கூட போனை ஆன் செய்துவைத்துவிட்டுத்தான் தூங்கு கின்றனர். அவர்கள் தூங்கும் அழகை ரசிப்பதற்கும், காணிக்கை செலுத்துவதற்கும் ஆட்கள் இருப்பதை அறிந்தவர்தானே அவர்?
முழுநேரமும் இதுபோன்று செயலிகளிலும் தளங்களிலும் இயங்கி ஏகப்பட்ட பணத்தை இழந்தவர்களும் உண்டு. இணை யம் மூலம் அறிமுகமானவரைச் சந்திக்கச் சென்று பணம் நகை எல்லாம் இழந்து அடிபட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக அதைப் பார்த்து கணவன் விவாகரத்துக்கு மனு போட்ட சம்பவங்களும் உண்டு. நிஜ வாழ்க்கையின் நளினங்களை இழக்கும் இவர்கள் துரதிருஷ்டவசமாக சைபர் செக்ஸுக்கு அடிமையாகி விடும் சூழலும் இருக்கிறது.
எல்லா அடிமைத்தனத்துக்கும் பொதுவாக சில குணங்கள் உண்டு. எல்லா நேரமும் கிடைக்கும், விலை மலிவாகவும் கிடைக்கும், எளிதில் அணுகி வாங்க முடியும் என்ற இவ்விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. மது முதலான போதைப் பழக்கங்களுக்கும் இது பொருந்தும். ‘சைபர் செக்ஸ் அடிக் ஷன்’ போன்ற நடத்தை அடிமைத்தனங்களுக்கும் இது பொருந்தும்.
சைபர் செக்ஸ் என்பது வேறு. இணையம் வழியாக நீலப்படங்களையே கண்டு திருப்தி அடையும் விஷயம் (pornography addiction) என்பது வேறு. உளவியலாளர்களின் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு நாளொரு ஆய்வும் பொழுதொரு முடிவுமாக வந்தாலும் கூட இணையம் வழியாக பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் மனிதனின் இந்த நடத்தை இன்றளவும் பல முடிச்சுகளை உள்ளடக்கியதே.
சைபர் செக்ஸ் அடிக் ஷன் என்ற ஒரு உளவியல் பாதிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் அதன் பிரச்சினைகளும், பல்கிப் பெருகும் அதன் விஸ்தாரமும் அப்படி ஒரு சூழலை உண்டாக்கி விடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
இப்படிச் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் எப்போது பார்த்தாலும் இணையவழி பாலியல் விஷயங்களையே சிந்தித்துக்கொண்டிருப்பது, வேலை குடும்பம் என எல்லாவற்றையும் விட சைபர் செக்ஸ் பார்ட்னரே பிரதானமாகிப் போய் விடுவது, கணிசமான நேரம் ஆன்லைனில் இருப்பதால் நிறைய வாய்ப்புகளை இழந்து அது புரிய வரும்போது மனச்சோர்வு அடைவது, மனப்பதற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாவது எனப் பலவாறு பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
நம்பகமான ஒருவரின் உதவியை நாடுங்கள்.
அவரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவருக்குத் தெரியாமல் மொபைல் போனில் இருந்து ஒரு குறுந்தகவல் கூட அனுப்ப மாட்டேன் என்று உறுதி பூணுங்கள்.
கடந்தவை எல்லாவற்றையும் தூக்கிப் போடுங்கள்.
இணையத் தோழியர்களின் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மெமரி கார்டுகள், பென்டிரைவ் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை உடைத்துத் தூள் தூளாக்குங்கள். ஒரு சிறு புகைப்படம் கூட மிஞ்சக் கூடாது. உங்கள் நம்பகமானவர் முன்னிலையில் இதைச் செய்யுங்கள்.
கணினியை மறைக்காதீர்கள்.
ஸ்மார்ட்போனைப் பொறுத்தமட்டில் வேறு ஏதாவது வில்லங்கமான விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் நொடிப் பொழுதில் ஸ்கிரீனை மாற்றி விட முடிகிறது. அப்படித்தான் கணினியின் திரையும். ஆன்லைனும் தனிமையும் கிடைக்கும்போது சில விவகாரமான தளங்களைப் பார்க்க எத்தனிப்பது இயல்பே. உங்கள் நம்பிக்கைக்கு உரியவர் அருகில் இல்லாமல் ஆன்லைனுக்குள் போகாதீர்கள்.
எல்லா சந்தாவையும் நிறுத்துங்கள்.
ஆன்லைன் டேட்டிங் உள்பட பல தளங்களிலும் தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் வசதி இருப்பதனால் நாம் கேட்காமலேயே நம் கிரெடிட் கார்டிலிருந்து பணம் லவட்டிக்கொள்ளப்படும். ஒரு கட்டத்தில் நாமே விரும்பாவிட்டாலும் நம்மை தொடர் சந்தாதாரராக அந்தத் தளம் வைத்திருக்கும். கிரெடிட் கார்டு நிறுவனம் மற்றும் வங்கியின் உதவியுடன் இந்த விவகாரத்தை சரி செய்து கொள்ள வேண்டும்.
குப்பைகளைத் தூக்கி வீசுங்கள்.
எல்லாவிதமான இமெயில் முகவரிகள், பாஸ்வேர்டுகள், புக்மார்க்ஸ், புகைப்படங்கள், வீடியோக்கள், செயலிகள், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள் என எல்லாவற்றையும் நம் எல்லா டிஜிட்டல் கருவிகளில் இருந்தும் அழித்து விட வேண்டும். என்னதான் நிரந்தரமாக எதை அழித்தாலும் ஏதேனும் ஒரு வழியில் நாம் நினைத்ததைப் பார்த்து விட முடியும் என்பது இணையத்தை நன்கு புரிந்தவர்களுக்குத் தெரியும். முடிந்தவரை கட்டுப்பாடாக இருப்போம் என்பதுதான் இதன் மூலம் நாம் சொல்ல வருவது.
சில மென்பொருட்களைப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகள் இணையத்தில் உலவும்போது அவர்கள் கவனம் சிதறக்கூடிய தளங்கள் கண்ணில் பட்டுவிடாமல் காக்கக் கூடிய பணியைச் சில மென்பொருட்கள் செய்யும். இதுபோன்ற மென்பொருட்கள் (parental control software) நாமும் தேவையில்லாமல் மேற்படி தளங்களுக்கு விசிட் செய்வதைத் தடுக்கும்.
இப்படிப் பல விதங்களிலும் முயல்வதோடன்றி மணமானவராக இருந்தால் நிஜ வாழ்வின் மகிழ்ச்சிகளைத் தம் துணையுடன் அனுபவிக்க எல்லா வழிகளிலும் முயல வேண்டும். நிஜம் என்றைக்குமே நிஜம் தான். நிழல் எப்போதுமே நிழல்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே...
(இணைவோம்)