காதல் ஸ்கொயர் 25


கௌதம், பூஜாவைக் காதலிக்கும் விஷயத்தை மொபைலில் அருண், மஹிமாவிடம் சொன்னான். “அய்யோ…என்னடா சொல்ற?” என்ற மஹிமாவின் குரலில் அதிர்ச்சி.

“அவன் சொன்னவுடனே எனக்கு கைகாலெல்லாம் ஆடிடுச்சு. என்ன சொல்றதுன்னே புரியல…கங்கிராட்ஸ் சொல்லிட்டு வந்துட்டேன்”
“டேய் லூசு… கங்கிராட்ஸ் சொன்னியா? நந்தினி விஷயத்த சொல்லலியா?”

“ஏய்…அவன் இனிமேதான் பூஜாகிட்ட ப்ரபோஸ் பண்ணப் போறன்னு சொல்லியிருந்தா, நான் நந்தினி மேட்டர சொல்லியிருப்பேன். ஆல்ரெடி கௌதமும், பூஜாவும் காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப சொல்லி என்ன பிரயோஜனம்? சொன்னாலும் அவனுக்கு ஒண்ணும் ஞாபகமிருக்காது. எனக்கு என்ன பண்றதுன்னே புரியல. வந்துட்டேன்” என்றவுடன் மஹிமாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அருண், “என்ன ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிற?” என்றான்.

“என்ன சொல்றதுன்னே தெரியல. மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு.”

“நமக்கே இப்படி இருக்கு. நந்தினிக்குத் தெரிஞ்சா? நினைக்கிறப்பவே திகிலா இருக்கு. பேசாம நந்தினிகிட்ட விஷயத்தச் சொல்லிடலாமா?” என்றவுடன் சில வினாடிகள் அமைதிக்குப் பிறகு மஹிமா, “நந்தினி டாக்டர்ங்க சொன்னதவிட, வேகமா ரெக்கவர் ஆயிட்டா. இப்ப நல்லா நடக்க முடியுதாம். அதனால, அடுத்த வாரமே ஜாயின் பண்றேன்னு சொல்லியிருக்கா. அவ சென்னை வரட்டும். என்ன பண்றதுன்னு முடிவெடுக்கலாம்… பை” என்று அழைப்பைத் துண்டித்தாள் மஹிமா.

வாழ்க்கையின் அருமையான காலங்களுள் ஒன்று, காதலிக்கத் தொடங்கும் காலம். அப்போது காதலர்களுக்கு என்று தனியாக ஒரு உலகம் பிறக்கும். காதலைத் தவிர மீதி அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, காதலர்கள் ஒரு தனி உலகில் வாழ்வார்கள். பைத்தியக்காரத்தனமாக ஏதேதோ செய்வார்கள். அப்படித்தான் கௌதமும் பூஜாவும் இருந்தார்கள்.

ஒரு நாள் பூஜா தனது வெஸ்பாவில் கௌதமை ஏற்றிக்கொண்டு, “இன்னைக்கு சில முக்கியமான இடங்களுக்கு அழைச்சுட்டுப் போறேன்” என்றவள் அடுத்த நான்கு மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களுக்கு அவனை அழைத்துச் சென்றாள்.

கடற்கரை.

“கௌதம்… ஒருவேளை… நம்ம வீட்டுல நம்மளோட காதல ஏத்துக்கலன்னா, இங்கதான் கடற்கரை மணல்ல ஒரு நாள் விடியற்காலைல உனக்காகக் காத்துட்டிருப்பேன். நீ இங்க வந்து என்னை அழைச்சுட்டுப் போயி, கோயில்ல வச்சு கல்யாணம் பண்ணிக்கணும்” என்ற பூஜா மணலில் நடந்தபடி, “என்னைப் பார்த்தவுடனே நீ ரோட்டுலருந்து மண்ணு மேல ஏறி திடுதிடுன்னு ஓடி வரணும். நானும் திடுதிடுன்னு ஓடிவந்து கரெக்டா இந்த ‘போட்’கிட்டதான் ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சுக்கிறோம்…” என்றாள். கௌதம் சிரிப்புடன், “ஏன் ஓடி வரணும்? நிதானமா நடந்து வந்தே கட்டிப்பிடிக்கலாமே. இல்லன்னா…நீ ரோட்டுலயே காந்தி சிலைகிட்ட வெய்ட் பண்ணலாமே…” என்றான்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. லவ்வர்ஸ்னா க்ளைமாக்ஸ்ல ஓடி வந்து கட்டிப்பிடிச்சுக்கணும். ரோட்டுல ஓடி வந்து கீழ விழுந்தோம்னா, அடிபட்டு மூஞ்சு மொகரல்லாம் பேந்துரும்ல?அதனாலதான் கடல் மண்ணுல ஓடி வரலாம்னேன்…” என்று கூற… கௌதம் சத்தமாகச் சிரித்தபடி, “அம்மா… தாயே…. தமிழ் சினிமா பாக்குறத தயவுசெஞ்சு குறைச்சுக்க” என்றான்.
எக்மோர், ராயல் ரீஜென்ஸி.

“அப்புறம்… நம்ம வீட்டுல வேற வழியில்லாம நம்ப காதல ஏத்துகிட்டு, இங்கதான் ரிசப்ஷன் வைக்கிறாங்க” என்றாள் பூஜா.
பெசன்ட் நகர். கலாஷேத்ரா காலனியில், மரங்களடர்ந்த ஒரு அழகிய வீட்டின் முன்புறம்.

“இந்த வீடு சூப்பரா இருக்குல்ல? கல்யாணத்துக்கு அப்புறம் இந்த வீட்டுலதான் தனிக்குடித்தனம் வர்றோம்” என்றாள் பூஜா.
“அப்ப, இங்க இருக்கிறவங்க?”

“வாடகைக்குதான் இருக்காங்க. அவங்கள காலி பண்ணச் சொல்லிடலாம்.”
“நம்ம எப்படி அவங்கள காலி பண்ணச் சொல்ல முடியும்?”
“அட என் அறிவுகெட்ட காதலா… இந்த வீடே உங்கப்பா
வோடதுதான். வாங்கி வாடகைக்கு விட்டிருக்காரு. நமக்காக காலி பண்ணச் சொல்ல மாட்டாரு?”
சீதாபதி மருத்துவமனை.
“நம்ம குழந்தைங்க இங்கதான் பிறக்கப்போகுது. ட்வின்ஸ். பொம்பளக் குழந்தைங்க. பேரு…தீபிகா…கோபிகா. பேரு ட்ரெடிஷனலா இருக்குல்ல?”
ரோஸரி பள்ளி.
“இங்கதான் நம்ப பொண்ணுங்கள சேர்க்கப் போறோம்”
ஈவ்னிங்லைஃப் முதியோர் இல்லம்.
“இந்தக் காலத்துலயே முக்காவாசிப் பேர் அம்மாப்பாவ பாத்துக்கறதுல்ல…2060-க்கு அப்புறம் யாரு நம்பள பாத்துக்கப்போறா? கன்ஃபர்மா முதியோர் இல்லம்தான். இது கொஞ்சம் காஸ்ட்லியான ஹோம். ஆனா உள்ள ஜிம், நீச்சல் குளம், ரெஸிடன்ட் டாக்டர்னு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கும்.”
முதியோர் இல்லத்திலிருந்து வெளியே வந்த கௌதம்,
“நம்ம கடைசி வரைக்கும் எப்படி வாழ்றதுனு யோசிச்சு வச்சுட்டியா?” என்றவுடன் அவன் கைகளைக் கோத்துக்
கொண்ட பூஜா, “ஆமா… மனசுக்குள்ள உன்னோட ஒரு முழு வாழ்க்கைய வாழ்ந்து பாத்துட்டேன். ஆனா மரணத்தப் பத்தி மட்டும் நினைக்கறதேயில்ல. இவ்ளோ அழகா, ஒரு காவியம் மாதிரி வாழ்ந்துட்டு நம்மளும் செத்துதான் போகணுமா கௌதம்? இப்படியே இந்த உலகம் இருக்குற வரைக்கும் நீயும் நானும் வாழ்ந்துகிட்டே இருக்கணும். ஏன்னா…நம்மளவிட சந்தோஷமா இந்த உலகத்துல யாரும் வாழ்ந்துட முடியாது” என்றாள்.
“எப்படிச் சொல்ற?”
“ஏன்னா… எனக்கு உன் மேல அவ்வளவு லவ்.”
“எவ்ளோ லவ்?”
“எவ்ளோ லவ்னா… இந்த உலகத்
துல இருக்கிற எல்லா பொண்ணுங்
களும், தன்னோட லவ்வர் மேல எவ்வளவு காதல் வச்சிருப்பாங்க. அந்த எல்லா காதலையும் ஒண்ணா
சேத்தா, ஒரு பெரிய காதல் வரும்ல?” என்றபோது பூஜா
தனது இரண்டு கைகளையும் அழகாக, அகல விரித்
திருந்தாள். தொடர்ந்து, “அவ்ளோ காதல் உன் மேல வச்சிருக்கேன்” என்ற பூஜாவை கௌதம் கண்களில் காதல் பொங்க பார்த்தான்.
பூஜா, கௌதமுடன் தங்கள் வீட்டு வாசலில் இறங்குவதை பால்கனியிலிருந்து பார்த்த ரேணுகா தனது கணவர் மூர்த்தியிடம், “ஏங்க… கௌதமும் பூஜாவும் ரொம்ப க்ளோஸா இருக்குற மாதிரி தெரியுது. ஐ திங்க்… தே ஆர் இன் லவ்” என்றார்.
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா பூஜா வீட்டுல ஒத்துக்குவாங்களா?”
“ஏன்? நம்ம பையனுக்கு என்ன குறைச்சல்? பழைய நினைவுகள் இல்ல. அவ்வளவுதான். மத்தபடி நார்மலான மனுஷனாதான் இருக்கான்.”
“பெத்தவங்களுக்கு அவங்க பிள்ளைங்களோட குறை எதுவும் பெருசா தெரியாது ரேணுகா…பாப்போம்” என்றார் மூர்த்தி யோசனையுடன்.
மழை பூமியை லேசாகக் காதலித்துக்கொண்டிருந்த ஒரு மழைக்கால மதியம். கௌதமின் வீட்டில் யாரும் இல்லை. சோபாவில் படுத்திருந்த பூஜாவின் கழுத்தில் முத்தமிட்ட கௌதம், அவள் கழுத்துச் செயினைத் தனது நாக்கு நுனியில் ஏந்தி, மேலே நகர்ந்தான். மூச்சுக்காற்று உரச அவள் உதடுகளில் மெதுவாகச் செயினை நழுவவிட்டான். பூஜாவின் ரோஜா நிற உதடுகளில், பொன்னிற செயின் அழகாக மின்னியது. பின்னர் கௌதம் குனிந்து, தனது உதடுகளால் அந்தச் செயினை எடுக்க முயன்றான். அப்போது பூஜா சிரிப்புடன் சட்டென்று செயினை தன் உதடுகளுக்குள் இழுத்துக்கொண்டாள். “ஏய்…” என்று குனிந்த கௌதம், இரண்டு ஈரமான நிமிடங்களுக்குப் பிறகு, செயினை தனது உதடுகளில் ஏந்தியிருந்தான்.
அப்போது கௌதமின் மொபைல் அடிக்க… எடுத்துப்
பார்த்தான். புது எண். ஆன் செய்து, “ஹலோ…” என்றான். எதிர்முனையில் உற்சாகத்துடன் நந்தினி, “கௌதம்… நான் நந்தினி…” என்று கூற… கௌதம்
சட்டென்று, “எந்த நந்தினி?” என்றான். சில வினாடி
கள் அமைதிக்குப் பிறகு நந்தினி, “கௌதம்… மறந்துட்டியா? கோயம்புத்தூர் ஹாஸ்பிட்
டல்லகூட பாத்தோமே…” என்றவுடன், கௌதம் வேகமாக, “யா… யா… ஸாரி. இப்ப ஞாபகம் வந்துருச்சு” என்றான்.
“எப்படி இருக்க கெளதம்?”
“ஃபைன். நீங்க எப்படி இருக்கீங்க? உங்க முதுகெல்லாம் சரியாயிடுச்சா?”
“சரியாயிடுச்சு. இன்னைக்கி காலைலதான் சென்னைல ஜாப் ஜாயின் பண்ணேன். சாயங்காலம் உன்னப் பாக்க வீட்டுக்கு வர்றேன்” என்றாள் நந்தினி.

(தொடரும்)

x