பேசும் படம் - 34: ஜப்பானை வில்லனாக்கிய புகைப்படம்


இருபதாம் நூற்றாண்டில் ஆசியாவில் நடந்த மிகப்பெரிய போராக சீன - ஜப்பான் போர் கருதப்படுகிறது. 1937-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி தொடங்கிய இந்தப் போர், 1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடையும் வரை நீடித்தது. 2 கோடிக்கும் மேற்பட்டவர்களை பலிகொண்ட இந்தப் போருக்கு சாட்சியாக இந்தக் குழந்தையின் படம் விளங்குகிறது. இந்தப் படத்தை எடுத்தவர் சீன புகைப்படக்காரர் எச்.எஸ்.வாங் ( H. S. Wong).

கொரியாவை யாருடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பது தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே 19-ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் இருந்தே மோதல் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 1894-ம் ஆண்டு முதலாவது போர் தொடங்கியது. இந்தப் போரில் ஜப்பான் வெற்றிகொள்ள, சீன அரசு பலவீனம் அடைந்தது. 1895-ம் ஆண்டில் இந்தப் போர் முடிந்தபோதிலும், ஜப்பான் அரசு அடிக்கடி சீனாவை வம்புக்கு இழுத்துவந்தது.

இந்தச் சூழலில், 1937-ம் ஆண்டு காணாமல் போன தனது ராணுவ வீரரைக் கண்டுபிடிக்க சீன நகரமான வான்பினுக்குள் நுழைய ஜப்பான் அனுமதி கோரியது. இதற்கு சீனா மறுக்க, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டது. சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் உதவியுடன் சீன அரசு ஜப்பானை எதிர்த்து நின்றது. இந்தக் காலகட்டத்தில் 1937-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி, சீன நகரமான ஷாங்காய் மீது மிகப்பெரிய அளவில் குண்டுவீச்சு நடத்த ஜப்பான் அரசு திட்டமிட்டது.
ஷாங்காய் நகரம் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தப்போவது பற்றிய தகவல், சீனாவில் முன்கூட்டியே கசிந்துவிட, அதைப் படமாக எடுக்க சீன பத்திரிகைகளின் புகைப்படக்காரர்கள் பலரும் ஷாங்காயில் கூடினர். ஜப்பானிய விமானப்படை தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பில்லாத, பொதுமக்கள் அதிக அளவில் தஞ்சம் அடைந்திருந்த ஒரு கட்டிடத்தில் அவர்கள் குழுமியிருந்தனர். அவர்களில் ‘நியூஸ் ரீல்’ என்று சீனாவில் அழைக்கப்பட்ட புகைப்படக்காரரான ‘வாங்’கும் இருந்தார். சீனா மீதான ஜப்பானின் தாக்குதலால் அந்நாடு எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிடுவது அவரது முக்கியக் குறிக்கோளாக இருந்தது.

மதியம் 1 மணிக்கு ஜப்பானிய விமானப் படை தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 மணிவரை எந்த விமானமும் வரவில்லை. நேரம் ஆக அக அங்கிருந்த பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் கலைந்து செல்லத் தொடங்கினர். ஆனால், வாங் மட்டும் திரும்பிச் செல்லவில்லை. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று அவரது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது. எத்தனை நேரமானாலும் அங்கேயே இருப்பது என்பதில் உறுதியாக இருந்தார்.

வாங் எதிர்பார்த்ததைப் போலவே, மாலை 4 மணிக்கு ஷாங்காய் நகரத்தை 16 ஜப்பானிய விமானங்கள் சூழ்ந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் குண்டுகளை வீசி மக்களை நிலைகுலைத்தன. குறிப்பாக பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்த ஷாங்காய் ரயில் நிலையத்தின் மீது அதிக குண்டுகள் வீசப்பட்டன. விமானங்கள் பின்வாங்கியதும் ஷாங்காய் ரயில் நிலையத்தைப் படமெடுக்க அங்கு விரைந்தார் வாங். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த ரயில் நிலையம் நொடிப்பொழுதில் தரைமட்டமாகிக் கிடந்ததைப் பார்த்தவர், அதைப் படங்களாகப் பதிவு செய்தார்.

ரயில் நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி பின்னாளில் விவரித்த வாங், “குண்டுவெடிப்புக்குப் பிறகு ஷாங்காய் ரயில் நிலையத்தைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. நான் உள்ளே சென்றபோது ரயில் நிலையம் முழுக்க உடல்கள் ரத்தச் சகதியில் கிடந்தன. தூக்கி எறியப்பட்ட கால்கள், கைகள் எனப் பார்க்கும் இடமெல்லாம் உடல்களின் பாகங்களாக இருந்தன. அங்கிருந்த ரத்தச் சகதியில் நான் அணிந்திருந்த ஷூக்கள் நனைய, ரயில் நிலையத்தை வலம் வந்தேன். அப்போதுதான் அந்தக் காட்சி என் கண்ணில் பட்டது. தண்டவாளத்தில் ஒரு தாய் இறந்து கிடக்க, என்ன நடந்ததென்று அறியாமல் அவருக்கு பக்கத்தில் குழந்தை ஒன்று கதறிக்கொண்டிருந்தது. குண்டுவெடிப்பால் ஏற்பட்ட தூசியும், ரத்தமும் அந்தக் குழந்தையின் உடல் முழுக்க அப்பியிருந்தது. அக்குழந்தையைப் படம் எடுத்த பிறகு, அதை மீட்பதற்காக அருகில் சென்றேன். ஆனால், அதற்குள் அக்குழந்தையின் அப்பா, எங்கிருந்தோ வந்து அந்தக் குழந்தையை வாரி அணைத்துக்கொண்டு போய்விட்டார். இந்த நேரம் போர் விமானங்களின் சத்தம் மீண்டும் கேட்க, நான் அவ்விடத்தை விட்டு வெளியில் வந்தேன்” என்றார். அந்தக் குழந்தையின் பெயரையோ, அது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதைப் பற்றியோ வாங் விளக்கவில்லை.

 அடையாளம் தெரியாத அந்தக் குழந்தையின் புகைப்படம் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் ஜப்பானுக்கு எதிர்ப்பு வலுத்தது. எல்லா நாடுகளும் ஜப்பானை வில்லனைப்போல் பார்த்தன. கிட்டத்தட்ட 136 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் படம் ‘வாங்’கை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. அதே நேரத்தில் தங்களை சிறுமைப்படுத்தும் விதமாக இந்தப் படத்தை எடுத்து வெளியிட்ட ‘வாங்’கின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசளிக்கப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்தது.

எச்.எஸ்.வாங்

சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் 1900-ல் பிறந்தவர் வாங். ஷாங்காய் நியூஸ் உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவனங்களில் புகைப்படக்காரராய் இருந்த வாங், இரண்டாவது சீன - ஜப்பான் போர் தொடர்பான பல படங்களை எடுத்துள்ளார். புகைப்படங்களைத் தவிர இந்தப் போரைப்பற்றிய பல செய்திப்படங்களையும் வாங் எடுத்துள்ளார். ஜப்பானிய அரசு இவரது தலைக்கு விலை வைத்ததால் குடும்பத்துடன் ஹாங்காங் நகருக்கு இடம்பெயர்ந்தார். 1981 ஆண்டில் தைவானில் இவர் காலமானார்.

x