வாசகர் என்ற பெருமையே வாழ்க்கைக்கும் போதும்!- இஸ்திரிக்காரருக்குள் இப்படியும் ஒரு முகம்


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

‘அந்நியன்’ திரைப்படத்தில், ஒரு காட்சியில் மாறுவேடத்தில் வரும் போலீஸ் அதிகாரி பிரகாஷ் ராஜ், தன் பெயரை ‘அயன்புரம் சத்தியநாராயணன்’ என்று குறிப்பிடுவார். பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதிப் புகழ்பெற்ற வாசகருக்கு இயக்குநர் ஷங்கர் கொடுத்த கவுரவம் அது. அயன்புரம் சத்தியநாராயணன் போன்றோரின் வரிசையில் அடிக்கடி பத்திரிகைகளில் கண்ணில் படும் பெயர் அன்னூர் பொன்விழி. கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்த பொன்விழி 30 ஆண்டுகளாகப் பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதிவருபவர். பத்திரிகைகளைத் தேடித் தேடிப் படிப்பவரை, பத்திரிகை சார்பிலேயே தேடிச் சென்றேன்.

‘குமார் கல்யாண ஸ்டோர்ஸ்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட போர்டு. தாழ்வாரம் முட்டும் அந்த அறைக்குள் நுழைந்தால் இடதுபுறம் இரண்டு டேபிள்கள். அதன் மேல் ஏகமாய் நிறைந்து கிடக்கும் தினசரி, வார இதழ்கள் மற்றும் புத்தகங்கள். மேஜையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டுக்கொண்டிருக்கிறார் ஒருவர். “இங்கே… பொன்விழிங்குறது…” என்று கேட்டதும் நிமிர்ந்து பார்த்தவர், “நாந்தானுங்க அது” என்று புன்னகைக்கிறார்.

தமிழில் வெளிவரும் தினசரி, வார, மாத, பருவ இதழ்களில் தவறாமல் இடம்பெறும் பெயர் இவருடையது. ‘இந்து தமிழ் திசை’யில் வெளியான ஐம்பதுக்கும் மேற்பட்ட கேலிச் சித்திரங்களுக்குக் கருத்து எழுதி பரிசுகளைப் பெற்றிருக்கிறார். இங்கேயோ சத்தமில்லாமல் சலவை செய்துகொண்டிருக்கிறார். அறிமுகப் படலம் முடிந்ததும் ஆர்வத்துடன் பேசத் தொடங்குகிறார்.

x