என்.பாரதி
readers@kamadenu.in
குமரி மாவட்டம் புத்தேரி கிராமத்தின் ஆலமூடு அம்மன் கோயில் வாசலில் நிற்கிறது அந்த ஆட்டோ. சவாரிக்கு அழைத்த மாத்திரத்தில் சின்சியராக வந்து நிற்கிறார் ஓட்டுநர் ராஜசேகரன். தனியாகப் புறப்படும் இளம் பெண்கள் பயணிக்க பெரும்பாலும் இவரது ஆட்டோவைத்தான் அழைக்கிறார்கள் பெற்றோர்கள். பின்னே... போலீஸ் ஆட்டோன்னா சும்மாவா?
ஆம். ஆட்டோ ஓட்டுநர் யூனிஃபார்மில் மிடுக்குடன் நிற்கும் ராஜசேகரன், காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த நான்கு வருடங்களாக ஆட்டோ ஓட்டிவருகிறார். “இதுல என்ன ஆச்சரியம் தம்பி? போலீஸ் வேலையில சேர்றதுக்கு முன்னாலேயே ஆட்டோ ஓட்டினவன்தான் நான். இப்ப கூடுதல் பொறுப்போட இந்த வேலையைச் செய்கிறேன்” என்று சொல்லும் ராஜசேகரன், “1974-ல் பி.யூ.சி முடிச்சேன். அப்பாவும் போலீஸ் வேலையில இருந்தவர்தான். நான்தான் மூத்த பையன். என்னோட சேர்த்து மொத்தம் ஆறு பிள்ளைங்க. குடும்ப கஷ்டம். பி.யூ.சி முடிச்சதுமே நான் கூலி வேலைக்குப் போயிட்டேன். அப்புறம்தான் ஆட்டோ வாங்கி ஓட்டினேன். அதுக்கே என்னோட பி.யூ.சி சர்டிஃபிகேட்டை அடகு வைக்க வேண்டியிருந்துச்சு. போலீஸ்ல சேரணுங்குற லட்சியம் மட்டும் என் மனசுல எப்பவுமே இருந்துச்சு” என்று கடந்த காலத்தை நினைவு கூர்கிறார்.
“1976-ல போலீஸ் வேலையில சேர்ந்தேன். ஆயுதப்படையில எட்டு வருசம், அப்புறம் 20 வருசம் சட்டம் - ஒழுங்கு போலீஸ். அப்புறமா புரமோஷன் தேர்வு எழுதி எஸ்.ஐ. ஆனேன். ரிட்டயர்டு ஆகுறப்ப திருவட்டாறு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ” என்று சொல்லும் ராஜசேகரன், பணிக்காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக சிறந்த காவலருக்கான முதல்வர் விருது உட்பட பல்வேறு விருது
களையும் வாங்கிக் குவித்தவர்!