பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com
ஒண்றரை மணி நேர கார் பயணத்துக்குப் பிறகு காஞ்சிபுரம் அன்னை காமாட்சி அம்மன் ஆலய வாசலில் இருந்தார்கள் முதியவரும், காஞ்சி ஸ்ரீமடத்து சிஷ்யரும்.
‘‘மகா பெரியவாளைத் தரிசிப்பதற்கு முன் ஆலயத்தினுள் சென்று அன்னை காமாட்சியைத் தரிசித்து விடலாமா?’’ என்று கேட்டார் சிஷ்யர்.
அதற்கு, ‘‘முதல்ல பெரியவா தரிசனம்... அப்புறம்தான் எல்லாம்...’’ என்று குரலில் உறுதியுடன் சொல்லிவிட்டார் முதியவர்.
அவரது குரலில் தென்பட்ட கண்டிப்பையும் கறாரையும் பார்த்த சிஷ்யர், ‘‘சரி, வாங்கோ... பெரியவாகிட்டயே போகலாம்’’ என்று அவரைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு போனார்.
பக்தர்கள் கூட்டம் மகா பெரியவாளை பக்தியுடன் சூழ்ந்த வண்ணம் காணப்பட்டது. கைங்கர்யம் செய்யக்கூடிய மடத்துச் சிப்பந்திகள் உடனிருந்து பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர்.
காமாட்சியைக் காண வந்த இடத்தில் கருணை தெய்வத்தின் தரிசனமும் கிடைக்குமா? கிடைத்து விட்டதே! ‘‘தேடிப் போய் தரிசனம் செய்ய வேண்டிய மகான், நம்மையே தேடி வந்திருக்கிறாரே’’ என்று காமாட்சியைத் தரிசிக்க வந்த பக்தர்கள் உளம் பூரித்தார்கள்.
ஆலயத்தின் மதில் சுவரை ஒட்டி தற்காலிக ‘கேம்ப்’ போட்டிருக்கும் அந்த பரப்பிரம்மத்தைத் தேடி ஓடி வந்தார்கள். கண்கள் குளிர வணங்கினார்கள். புழுதியில் உடல் பதித்து நமஸ்கரித்தார்கள். ஆசி பெற்றுச் சென்று கொண்டிருந்தார்கள்.
நடமாடும் தெய்வம் நிலை கொண்டிருக்கிற அந்த இடத்தை நெருங்கி விட்டார்கள் முதியவரும் சிஷ்யரும். முதியவரின் கையைப் பிடித்துக் கொண்டு சிஷ்யர் முன்னால் நடக்க... ஒட்டுமொத்த கூட்டமும் அவர்களுக்கு வழிவிட்டு விலகியது.
தொலைவில் அமர்ந்து கொண்டிருக்கும் மகானின் பார்வை ஒரு கட்டத்தில் இந்த இருவர் மீதும் பதிந்தது. ‘இத்தனை கூட்டத்திலும் தனக்கு சிறப்பு தரிசனம் கிடைக்க இருக்கிறதே’ என்கிற பிடிபடாத பெருமையுடன் சிஷ்யரின் கையைப் பிடித்துக்கொண்டு உற்சாகமாக நடந்தார் முதியவர்.
இதோ, மகானின் அருகே சமீபித்து விட்டார்கள். எந்தப் பரப்பிரம்ம சொரூபத்தைத் தான் இறப்பதற்கு முன் காண வேண்டும் என்று அந்த மகானிடமே மனதளவில் கோரிக்கை வைத்தாரோ, அதே மகானுக்கு முன்னால் இப்போது நின்று கொண்டிருந்தார் முதியவர்.
பல நாட்கள் பிரிந்திருந்த தாயும் சேயும் மீண்டும் இணைந்தால், எந்த அளவுக்கு சந்தோஷம் பெருக்கெடுக்குமோ அதுபோல் இருந்தது முதியவருக்கு. தான் இருப்பது மகா பெரியவாளுக்கு முன்னால்தானா என்று அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. எனவே, சுற்றும் முற்றும் திரும்பியவண்ணம் கூடி இருக்கிற கூட்டத்தையும், அருகில் இருக்கிற காமாட்சி ஆலயத்தையும் பார்த்துவிட்டு, ‘இது நிஜம்தான்’ என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டார்.
அதுவரை பக்தர்களுக்குத் தான் வழங்கிக் கொண்டிருந்த தரிசனத்தை அப்படியே நிறுத்தினார் காஞ்சி மகான். ‘இன்னும் கொஞ்ச நேரத்துக்கு யாரையும் கிட்டக்க விடாதே’ என்பதுபோல் தொண்டர்களுக்கு ஜாடை காண்பித்தார். பிறகு, தனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் முதியவரை நேருக்கு நேராகப் பார்த்தார் கலியுக பரமேஸ்வரன்.
முதியவரின் கண்களில் இருந்து ஆறாகப் பெருகியது நீர். என்னவோ பேச முற்பட்டார். உதடுகள் துடித்தனவே தவிர, பேச்சு வரவில்லை.
உதடுகள் பேசுகிற இடமா இது..? உள்ளம் பேசுகிற இடமாயிற்றே!
மகானையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த முதியவர், ஒரு கட்டத்தில் கஷ்டப்பட்டு நமஸ்காரம் செய்ய முற்பட்டார். சிரமப்பட்டு குனிந்து தரையில் விழுந்து நமஸ்காரம் செய்தார். தன் இரு கரங்களையும் உயர்த்தி கருணை பொங்கும் விழிகளுடன் அவரை ஆசிர்வதித்தார் முக்காலமும் உணர்ந்த முனிவர். கூடி இருந்த அத்தனை பக்தர்களும் இந்தப் பரவசக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
‘இத்தனை பக்தகோடிகள் இங்கே கூடி இருக்கிறபோது சாதாரண ஒரு ஏழை பக்தனை இத்தனை வாஞ்சையுடன் தன் அருகே வரவழைத்து பெரியவா அனுக்ரஹம் வழங்குகிறாரே... இந்த பக்தர் யாராக இருக்கும்?’ என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.
சாலை என்றாலும், இங்கு பெரிதாக சத்தம் ஏதும் இல்லை. ஒட்டுமொத்த சூழ்நிலையே அமைதியுடன் காணப்பட்டது.
சுமார் ஐந்து நிமிடம் கரைந்து போயிற்று.
மகா பெரியவாளுக்குத் தரையில் விழுந்து நமஸ்கரித்த முதியவர் இன்னமும் அதே நிலையிலேயே காணப்பட்டார்.
உணர்வுபூர்வமான பக்தியின் வெளிப்பாடாக இன்னும் வணங்கிய நிலையிலேயே இருக்கின்றார் போலிருக்கிறது என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஐந்து நிமிடம் கடந்தும் அவர் எழாததால், ஒருவேளை வயோதிகத்தின் காரணமாக தரையில் இருந்து எழ முடியவில்லை போலிருக்கிறது என்று நினைத்த சிஷ்யர் அருகே சென்றார். அவரை எழுப்ப முற்படுவதற்காகத் தன் இரு கைகளையும் முதியவர் அருகே கொண்டு சென்றார்.
அந்த நேரத்தில் ஒரு சொடக்குச் சத்தம் சிஷ்யரை அப்படியே நிறுத்தியது.
சத்தம் வந்த திசையைப் பார்த்தார்.
சொடக்குப் போட்டு அழைத்தது... மகா பெரியவா!
கைகளைக் கூப்பிய வண்ணம் மகானைப் பார்த்தார். நமஸ்கரித்தார். ‘‘பெரியவா...’’ என்றார்.
கலியுக தெய்வம் திருவாய் மலர்ந்தருளியது. ‘‘அவர் இனி எழுந்திருக்க மாட்டார்.’’
ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும், சிஷ்யர்கள் பட்டாளமும் வாயடைத்துப் போனது.
‘‘ஆமாம்... அவர் மண் வாசத்தை இந்த க்ஷணத்தோட முடிச்சுண்டு மேலுலகப் பயணத்தை ஆரம்பிச்சுட்டார். கயிலாச பகவானின் திருவடி வாசம்தான் அவருக்கு இனிமே...’’
மகா பெரியவா சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அந்த இடமே விதிர்விதிர்த்துப் போனது.
அனைவரும் முதியவரைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு, ‘‘சர்வேஸ்வரா... சர்வேஸ்வரா...’’ என்று பகவான் நாமங்களைச் சொன்னார்கள்.
முதியவரை காரில் அழைத்துக்கொண்டு வந்த சிஷ்யரின் கண்கள் பனிக்க ஆரம்பித்தன.
‘தன்னைத் தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இந்த பக்தரை, தன் சந்நிதிக்கே வரவழைத்து தரிசனம் தந்திருக்கிறாரே... அதைவிட காமாட்சியின் திருவாசலில் ஒரு மோட்ச கதியை வழங்கி இருக்கிறாரே... எப்பேர்பட்ட புண்ணிய ஆத்மாவாக இந்த ஏழை முதியவர் இருக்க வேண்டும்’ என்று பரப்பிரம்ம சொரூபத்தைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி வணங்கினார் சிஷ்யர்.
‘அடுத்து என்ன செய்ய வேண்டும்? இவருக்கு உற்றார் உறவினர்கள் யாராவது இருக்கின்றார்களா? எப்படிக் கண்டுபிடிப்பது?’ என்று மகா பெரியவாளின் உத்தரவுக்காகக் காத்திருந்தது தொண்டர் படை.
கருணைக் கடலான காஞ்சி முனிவர் தன் திருமேனியில் இருந்த ஒரு காஷாய வஸ்திரத்தை எடுத்தார். முதியவரை அழைத்து வந்த சிஷ்யரை ஜாடை காண்பித்து அருகே வரச் சொன்னார்.
சிஷ்யரும் வந்தார். காஷாய வஸ்திரத்தை அவரிடம் கொடுத்து முதியவர் உடல் மீது போர்த்தச் சொன்னார். பிறகு, ‘‘இவருக்கு யாருமில்லே... நாமதான் இவருக்கு எல்லாம் பண்ணணும். இறுதிச் சடங்குகள் பண்றதுக்கு உண்டான ஏற்பாடுகளை ஆரம்பிங்கோ’’ என்று சொல்லிவிட்டு, சுமார் ஐந்து நிமிடம் மகா பெரியவா ஜபத்தில் இருந்தார்.
ஜபம் பூர்த்தி ஆன பின் எழுந்த மகான், மடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
அதன்பின் முதியவருக்கு ஆக வேண்டிய காரியங்கள் மளமளவென்று துவங்கின.
முதியவரை நேரில் போய் அழைத்து வந்த சிஷ்யர்தான் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து போனார்.
‘சர்வேஸ்வர சொரூபமாக, நடமாடும் தெய்வமாக இருந்துகொண்டு, இன்னும் கொஞ்ச நேரத்தில் தன் பக்தன் ஒருவனின் ஜீவன் பிரியப் போகிறது. அவனது கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக என்னைத் தேர்ந்தெடுத்து எப்படித்தான் அனுப்பினாரோ... உயிர் பிரிகிற வேளை காஞ்சி மடத்தினுள் இருக்கக் கூடாது... காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்குள்ளும் இருக்கக் கூடாது என்று தீர்மானித்து எப்படி கோயிலுக்கு வெளியே முகாம் போட்டார்..? பெரியவா... பெரியவா...’ என்று பக்தி கலந்த நெகிழ்ச்சியில் அரற்றினார்.
மகா பெரியவா நடந்து செல்கிற திசையைப் பார்த்து புழுதி கலந்த அந்த வீதியில் விழுந்து வணங்கினார் சிஷ்யர். ‘பெரியவா தரிசனம்தான் முதல்ல...’ என்று முதியவர் சொன்னதற்கு ஏற்ப, தரிசித்தும் விட்டார்.
அப்போ காமாட்சி தரிசனம்?
அதான், பெரியவா பாதார விந்தங்களில் கலந்து விட்டாரே... காமாட்சியும் மகா பெரியவாதானே!
எத்தனை எத்தனை அற்புதங்கள், இந்த மகானின் வாழ்வில்!
எத்தனை அமுதங்களை நமக்காகக் கொடுத்துச் சென்றிருக்கிறார்...
அந்த அமுதங்களே நமக்கு சாகா வரங்கள்!
(ஆனந்தம் தொடரும்)