என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி பளிச்செனப் பேசுபவர் பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். தேர்தல் தோல்வியை துடைத்து எறிந்துவிட்டு கட்சி உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் முனைப்பில் தொடர் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். அதற்கு இடையில் நாகர்கோவிலுக்கு வந்திருந்த அவரை காமதேனுவுக்காகச் சந்தித்தேன்.
தமிழகத்தில் பாஜக கூட்டணியின் படுதோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தீர்களா?
திமுக வெற்றிபெற பொய்யான வாக்குறுதிகளையும், விமர்சனங்களையும் அள்ளி வீசியது. எங்கள் கூட்டணி சரியாக எதிர்வினை ஆற்றவில்லை. மோடி அரசு செய்த சாதனைகள் ஏராளம். அவர் கொண்டுவந்த திட்டங்கள் கடைக்கோடிவரை போய் சேர்ந்தது. ஆனால், அதையெல்லாம் பாஜகதான் செய்தது என்ற செய்தி கீழே போய் சேரவில்லை. திமுக கூட்டணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒருங்கிணைந்து செயல்பட்டனர். எங்கள் அணி குறுகியகாலத்தில் இணைந்து, தேர்தலைச் சந்தித்த கூட்டணி. இதெல்லாம் எங்களுக்குப் பின்னடைவாகப் போனது.