ஹாட் லீக்ஸ்: ஸ்டாலின் இனி தளபதி இல்லையாம்!


மாவட்டப் பொறுப்பாளராகிறார் தங்கம்

திமுகவில் இணைந்த தங்கதமிழ்ச்செல்வன் தேனி மாவட்டத்திலுள்ள திமுக நிர்வாகிகளை வீடுதேடி சந்திக்க வருவதாக தகவல் அனுப்பினாராம். இதை அறிந்துகொண்ட மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், அந்த நிர்வாகிகளை எல்லாம் தனது வீட்டுக்கு வரச்சொல்லி உட்காரவைத்துவிட்டு, “கட்சி நிர்வாகிகள் எல்லாம் என் வீட்டில் இருக்கிறார்கள். நீங்கள் எது பேசுவதாக இருந்தாலும் இங்கே வந்து பேசுங்கள்” என்று தங்கத்துக்கு தகவல் அனுப்பினாராம். ஆனால், அந்தச் சந்திப்பை விரும்பாத தங்கம் அமைதியாக இருந்துவிட்டாராம். இதையடுத்து கட்சி நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு அறிவாலயம் வந்தாராம் ராமகிருஷ்ணன். ஆனால், “நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் போகலாம்” என யூ டர்ன் போடவைத்துவிட்டாராம் ஸ்டாலின். இந்த நிலையில், விரைவில் தங்கதமிழ்ச்செல்வன் தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற செய்தி அறிவாலய வட்டாரத்தில் தடதடக்கிறது.

அமைதிக்குப் பெயர்தானோ அழகிரி!

கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்துக்காக அவரது சமாதியில் தொண்டர்கள் புடைசூழ சென்று அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். அவர் அங்கு வந்துவிட்டுப் போன பிறகு காலை பத்தரை மணி வாக்கில் மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி சகிதம் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார் மு.க.அழகிரி. அவருடன் அவரது விசுவாசிகளான மன்னன், கோபிநாதன், முபாரக் மந்திரி, எம்.எல்.ராஜ், கவுஸ் பாட்சா உள்ளிட்டோரும் வந்திருந்தார்கள். வழக்கமாக மீடியாக்களிடம் எதையாவது கொளுத்திப்போடும் அழகிரி இந்த முறை மூச் விடவில்லை. “அண்ணன் சைலன்ட்டாவே இருக்கிறாரே என்ன திட்டம்?” என்று அழகிரி விசுவாசிகளிடம் கேட்டதற்கு, ”அமைதி... அமைதி... அமைதி. இத அண்ணன் எங்ககிட்ட சொல்லிருக்காரு. அதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு அவரு எதுவும் பேச மாட்டாரு” என்று சொன்னார்கள்.

x