இத்தனை அத்தியாயங்களாக நாம் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தினோம். குழந்தை வளர்ப்பைச் சரியாகச் செய்ய பொறுப்பான பெற்றோராக இருக்க வேண்டிய அவசியத்தை அறிந்தோம். ஆனால், அந்தப் பொறுப்பு ஒரு பெண்ணுக்கு கருவுறுதலுக்கு முன்னரே தொடங்கிவிடுகிறது என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்.
ஆம், கர்ப்பம் தரித்தலுக்கு முன்னதாகத் தொடங்கி கர்ப்ப காலம் தொட்டு பேறுகாலத்துக்குப் பின்னர் வரை ஒரு பெண் தனது உடலை எப்படி உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான குறிப்புகளை ‘பிரெக்னன்சி நோட்ஸ் - பிஃபோர், ட்யூரிங் அண்ட் ஆஃப்டர்' (Pregnancy Notes- Before, During annd After) புத்தகத்தில் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன்.
பாலிவுட் பிரபலம் கரீனா கபூரின் சைஸ் ஜீரோ மந்திரத்துக்குப் பின்னணியில் மட்டுமல்ல... கரீனாவின் கர்ப்ப காலத்திலும் அவருக்கு டயட்டீசியனாக இருந்து அந்தக் காலகட்டத்தை ஆரோக்கியமாக வடிவமைத்துக் கொடுத்ததும் ருஜூதாவே. அதனால்தான், இந்தப் புத்தகத்தின் முன்னுரையை எழுதியிருக்கிறார் கரீனா கபூர்.
கரீனாவின் அனுபவக் குறிப்பு
என்னைப் பொறுத்தவரை, ஒரு பெண் திருமணத்துக்கு முன்னதாகவே தனது உடலைக் கட்டமைக்கத் தொடங்க வேண்டும். நான் 2007-ல், ருஜூதாவுடன் இணைந்து என் டயட் பயணத்தைத் தொடங்கினேன். அப்போது நான் திருமணத்தைப் பற்றி நினைத்ததேயில்லை. ஆனால் 2007-ல், நான் தொடங்கிய டயட் என் வாழ்க்கை முறையானது. அதேபோல் நீங்கள் தொடங்கும் டயட்டும் நாளடைவில் வாழ்க்கை முறையாகும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே டயட் பழகுங்கள். இல்லை, இது திருமணத்துக்காக மட்டும், ஒரு வேலைக்கு செல்லும்வரை மட்டும், விடுமுறைக்காக மட்டும் என்றெல்லாம் யோசித்தீர்கள் என்றால் அப்படியொரு திட்டத்தை செயல்படுத்தாமலேயே விட்டுவிடுங்கள்.
நான் கர்ப்பமாக இருந்தபோதும் படப்பிடிப்புக்குச் சென்றேன், வெளிநாடுகளுக்குப் பயணித்தேன், ஏன்
ஃபேஷன் ஷோக்களில் ஒய்யாரமாக நடந்தேன். இதெல்லாம் சாத்தியமாக நான் கடந்த 10 ஆண்டுகளாக டயட்டை எனது வாழ்க்கை முறையாகக் கொண்டிருப்பதுதான்.
இந்தக் காலத்துப் பெண்கள் கர்ப்பம் தரித்தலை ஒரு நோய் போன்று பார்க்கின்றனர். தயவுசெய்து அப்படிக்
குழப்பாதீர்கள். அப்படிச் சொல்பவர்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொள்ளாதீர்கள். கர்ப்ப காலத்தில் ஆரோக்
கியமான உணவு, நீர்ச்சத்து என்று கூடுதல் கவனம் தேவையே தவிர உங்களையே மறந்து எந்நேரமும் வளரும் வயிற்றைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியஅவசியமில்லை. கர்ப்ப காலத்தை நீங்கள் ரசிக்க வேண்டுமானால் டயட் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே உங்கள் வாழ்க்கை முறையாகியிருக்க வேண்டும்.
இயற்கை அற்புதமானது. அதேபோல் விசித்திரமானதும்கூட. கர்ப்ப காலத்தில் பெண்ணின் தோற்றத்தை மாற்றும் இயற்கை பேறுகாலத்துக்குப் பின்னர் அதை சீராக்கி முந்தைய வடிவத்துக்கே கொண்டு வந்துவிடுகிறது. பேறுகாலத்துக்குப் பின்னர் கொஞ்சம் கூடுதல் எடையுடன் இருப்பதும் அவசியம். பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேவையான கொழுப்புச் சத்தை வழங்குவதற்கும், தாய் - சேயை கிருமி தொற்றுகளில் இருந்து காப்பாற்றவும் இது பயன்படுகிறது. எனவேதான் நான் பிள்ளைப்பேறுக்குப் பின்னர் எனது உடல் வடிவம் குறித்து கவலை தெரிவித்தபோது ருஜூதா, “அவசரம் வேண்டாம் கரீனா. இப்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். உடலுக்கு வேண்டிய போஷாக்கை இப்போது கொடுக்காவிட்டால் எதிர்காலத்தில் ஹார்மோன் மாற்றம் ஏற்படலாம்” என்று எச்சரித்தார்.
அதனால் நான் உடல் எடையைக் குறைக்க எந்த அவசரமும் காட்டவில்லை. மாறாக பேறுகாலத்துக்குப் பின்னர் எடுக்க வேண்டிய உணவிலும், பழக வேண்டிய உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தினேன். கர்ப்ப காலத்தில் எப்படி உடல் எடை சீராகக் கூடியதோ அதேபோல் பேறுகாலத்துக்குப் பின்னர் உடல் எடை வெகு சீராக குறையத் தொடங்கியது.
‘ஊர்கூடி பிள்ளை வளர்க்க வேண்டும்’ என்பது ஆப்பிரிக்க பழமொழி. ஆம், குழந்தை வளர்ப்பை தனியாகச் செய்ய முயற்சி செய்யாதீர்கள். குடும்பமும், உறவுகளும் கூடி வளர்க்கும் பிள்ளைதான் மனதளவில் ஆரோக்கியமான பிள்ளையாக வளரும். ருஜூதாவிடம் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் இவை. இவற்றை நீங்களும் பின்பற்றுங்கள், பயனடையுங்கள் என்று கரீனா கபூர் தனது முன்னுரையில் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
திருமணமான பெண்கள் சில காலத்துக்கு முன்பு வரை மனதளவில் தாய்மையைத் தழுவ ஆயத்தமாகும்வரை குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவது எப்படி என்ற அறிவுரைக்காக மருத்துவர்களை அணுகிவந்தனர். ஆனால், இப்போதெல்லாம் நகர்ப்புற பெண்கள் குழந்தைப் பேறுக்கு என்றொரு காலவரையறையை வைத்துக்கொண்டு, அதற்குள் கர்ப்பம் தரிக்க ஆலோசனை கோரி மருத்துவர்களை நாடுகின்றனர்.
நவீன மருத்துவ வசதிகள் மனிதனின் ஆயுட்காலத்தைக் கூட்டியிருக்கலாம். ஆனால், நாகரிகம் மனிதனின் உடல்பருமனை அதிகரிக்க அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக நகர்ப்புறத்தில் வாழும் பெண்கள் உடல் பருமன் நோய்க்கு எளிதில் ஆளாகிவிடுகின்றனர். காரணம், வாழ்க்கை முறை. முறையற்ற உணவு, சீரற்ற உறக்கம். போதாததற்கு மது, புகை என வாழ்க்கை முறையில் தாமாகவே நெருக்கடியை வளர்த்துக்கொள்ளும் பெண்கள் டையபெஸிட்டி (Diabesity) எனும் புதிய வளையத்துக்குள் சிக்கியுள்ளனர். சர்க்கரை நோய் (டயாபட்டீஸ்), உடற்பருமன் (ஒபீஸிட்டி) என்ற இரண்டு வாழ்க்கை முறை குறைபாட்டால் ஏற்படும் நோய்களின் ஆரம்ப அறிகுறிகளுடனேதான் அவர்களின் திருமணமும் அரங்கேறுகிறது. அதனாலேயே குழந்தைப் பேறுக்கான வாய்ப்புக் குறித்த பயம் தொற்றிக் கொள்கிறது.
முன்னுரையில் கரீனா சொன்னதுபோலவே கர்ப்பம் தரித்தலில் சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டுமானால் நம் இளம் பருவத்திலிருந்தே வாழ்க்கை முறையையும் நெறிப்படுத்தி வைத்திருத்தல் அவசியம்.
கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிடலாம், எப்படி உடலைப் பேணலாம், மகப்பேறுக்குப் பின்னர் உடலை மீண்டும் எப்படிப் பழைய நிலைக்குக் கொண்டுவரலாம் என்பதில் மட்டும்தான் நம்மில் பலருக்கும் அக்கறையிருக்கிறது. ஆனால், உண்மையில் கர்ப்பம் தரித்தலுக்கு முன்னரே நம் வாழ்க்கை முறையை நெறிப்படுத்த வேண்டும். அதுதான் உண்மையான மாற்றத்துக்கான வித்து என்பதை நாம் உணரவே இல்லை.
இதைத்தான் நான் ஆங்கிலத்தில் சுருக்கமாக DEAL என்று குறிப்பிடுகிறேன். டயட், எக்ஸர்சைஸ், ஆக்டிவிட்டி, லைஃப்ஸ்டைல் ஆகிய வார்த்தைகளின் சுருக்கம் இவை. கர்ப்பம் தரித்தலுக்கு முன்னரே ஏன்... திருமணத்துக்கு முன்னரே கூட ஒரு பெண் தனது வாழ்க்கை முறையை நெறிப்படுத்த இந்த நான்கும் அவசியம்.
உணவுப் பழக்கவழக்கம் (டயட்) சீரான உணவுப் பழக்கவழக்கம் இல்லாவிட்டால் உடலில் ஹார்மோன்கள் சீராக செயல்படாது. ஹார்மோன்கள் சமநிலைதான் உங்களின் பாலுணர்வு, இனவிருத்தி ஆகியவற்றைத் தீர்மானிக்கிறது. ஹார்மோன் சுரப்பிகள் சரியாக வேலை செய்தால் நீங்கள் கருத்தரித்தலிலும் சிக்கல் இருக்காது, மகப்பேறுக்குப் பின்னர் உடலை பழைய நிலைக்குக் கொண்டு வருவதிலும் எந்தச் சிக்கலும் இருக்காது.
ஆனால், நீங்கள் உங்கள் மகப்பேறு மருத்துவரைச் சந்தித்தவுடன் கருத்தரித்தலுக்கான வாய்ப்பை அதிகரிக்க அவரின் முதல் பரிந்துரையே எடையைக் குறைக்கவும் என்பதாகவே இருக்கும். ஆனால், பாலுறவுடன் நீங்கள் கர்ப்பம் தரித்தலை உறுதிப்படுத்தும் முக்கியக் காரணி எடை குறைப்பு அல்ல... மாறாக இன்சுலின் உணர்திறன் (இன்சுலின் சென்சிடிவிட்டி).
இன்சுலின் உணர்திறன் என்பது, உணவு உண்ட பின் ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கு, கணையம் எவ்வளவு இன்சுலின் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதன் அளவுகோலாகும்.
நீங்கள் என்ன உண்கிறீர்கள் என்பதே இன்சுலின் சுரப்பதைத் தீர்மானிக்கிறது. எனவே, இன்சுலின் உணர்திறன் செயல்பாட்டை உறுதிப்படுத்த 5 வகையான டயட் ஆலோசனைகளை உங்களுக்கு நான் பட்டியலிடுகிறேன்.
1. பாக்கெட் உணவுகளைப் புறந்தள்ளுங்கள்...
பாக்கெட்டுகளில் விற்பனையாகும் உணவுகளை முழுமையாகப் புறந்தள்ளுங்கள். குறிப்பாக இந்த உணவில் கார்போஹைட்ரேட் உள்ளது, இதில் புரதம் உள்ளது, இதோ இதில் நார்ச்சத்து அதிகம் என்றெல்லாம் ஊட்டச்சத்துக்கான லேபிளைத்தாங்கி வரும் எந்த ஒரு உணவுப் பொருளையும் உண்ணாதீர்கள். பிஸ்கட், பால் என எதுவாக இருந்தாலும் பாக்கெட் உணவு வேண்டாம்.
லோ - ஃபேட், லோ - சுகர், க்ளுட்டன்ஃப்ரீ, ஹை ப்ரோட்டீன் என்ற பிராண்டிங்கில் வரும் பால், தயிர், இனிப்பு வகைகள், நொறுக்குத் தீனிகள் ஆகியனவற்றைத் தவிருங்கள். இவையெல்லாம் உடல்பருமன் குறைப்பைச் சுற்றி பின்னப்பட்டுள்ள தொழில்களின் வலை.
இதில் சிக்கினால் அந்த வியாபாரத்துக்குத் தீனி போடுபவர்களாக இருப்பீர்களே தவிர உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் ஏதும் சேராது.
2. பருவத்துக்கு ஏற்ப உண்ணுங்கள்...
ஒவ்வொரு பருவத்திலும் ஒரு சில காய்கறிகளும், ஒரு சில பழவகைகளும் உண்பதற்கு சாலச் சிறந்ததாக இருக்கிறது. ஆனால், இன்று விளைபொருட்களைப் பதனிடும் தொழில்நுட்பத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீனத்தால் எல்லா பருவத்திலும் எல்லா காய்கறிகளும் பழங்களும் கிடைக்கும்படி செய்யப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட பருவத்துக்கான காய்கறி, பழம் எதுவென்ற குழப்பம் மக்களுக்கு ஏற்படுகிறது. குளிர்பதனப்படுத்துதல் முறையில் எல்லா உணவுப் பொருட்களும் எல்லா காலங்களிலும் கிடைக்கலாம். ஆனால், அதில் இயல்பான நுண் ஊட்டச்சத்துகள் இருக்குமா? இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. உங்களுக்குத் தேவையான காய்கறி, பழங்களுக்காக மால்களைச் சார்ந்திருக்காதீர்கள். அங்கேதான் மேற்கூறிய வகையில் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் குவிந்திருக்கும். மாறாக உள்ளூர் சந்தைக்குச் செல்லுங்கள். அன்றாடம் அறுவடையான காய்கறியும், பழங்களும் இருக்கும். சிறு வியாபாரிகள் எதையும் பதப்படுத்தி விற்பனைக்குக் கொண்டுவர மாட்டார்கள். அவர்களிடம் அதிகமாக இருக்கும் காய்கறிகளும் பழங்களும்தான் அந்தப் பருவத்துக்கானவை. குழப்பமில்லாமல் அவற்றை வாங்கி உண்ணுங்கள். ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்றாற்போல் உணவு வகைகளை மாற்றி உண்ணுவதை ‘டயட் டைவர்ஸிட்டி’ என்கிறோம். அதாவது உண்ணும் உணவிலும் பன்முகத்தன்மை வேண்டும். இதனால் குடல் ஆரோக்கியம் மேம்படும். கூடவே, புரோபயோடிக் பாக்டீரியாக்கள் சிறப்பாகச் செயல்படும். இன்சுலின் உணர்திறனும் சீராக இருக்கும்.
இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் உணவு வகைகள் தொடர்பான ஆலோசனைகள் அடுத்த அத்தியாயத்திலும் பார்க்கலாம்.
(வளர்வோம்... வளர்ப்போம்)