கண்ணான கண்ணே- 24


நோய் எது? இயற்கையாக உடலில் ஏற்படும் மாறுதல்கள் எவை? என்ற புரிதல் குறைபாட்டால்தான் இன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பலரும் தங்களுக்கு ஏற்படும் மாதவிடாயை பெரும் நோய்போல் கருதி சங்கடத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர்.
சில பெண் பிள்ளைகள் மாதவிடாய் நாளென்றால் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து விடுப்பு எடுத்துவிடுகின்றனர். இன்னும் சில கிராமங்களில் பூப்பெய்தவுடனேயே இத்தகைய தவறான புரிதல்களால் பள்ளியிலிருந்தே பிள்ளைகள் நின்று விடுகின்றனர். கல்வி இடை நிற்றலுக்கு இதுவும் ஒரு காரணியாக இருக்கிறது.

இவற்றையெல்லாம் தவிர்ப்பது பெற்றோரின் கைகளில்தான் இருக்கிறது. பெற்றோரின் பொறுப்பு சரியான உணவுப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவது மட்டுமல்ல... உடல் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்துவதும்கூட. அதற்கு முதலில் பெற்றோர் தெளிவு பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக தாயின் அரவணைப்பும் ஆலோசனையுமே சிறந்ததாக அமைய வேண்டும்.
அந்தத் தெளிவை ஏற்படுத்துவதும் மாதவிடாய் காலத்தில் பெண் பிள்ளைகள் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள், பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றிய தொகுப்புதான் இந்த அத்தியாயம்.

பெண் குழந்தைகள் என்றால் 5 முதல் 8 வயதுக்குள் வரும் காலம் பூப்பெய்துவதற்கு முந்தைய முக்கியமான காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு நிறைவாக கால்சியம் சத்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு முந்தைய அத்தியாயம் ஒன்றில் பூப்பெய்தல் காலகட்டத்தில் இருக்கும் பெண் பிள்ளைகளைப் பேணுவது எப்படி என்ற ஆலோசனையைக் கூறியிருந்தேன். அதை மீண்டும் நினைவுகூர விரும்புகிறேன். 

பூப்பெய்தல் என்பது குடும்ப மரபணு, குழந்தையின் விளையாட்டு ஆர்வம், உணவுப் பழக்கவழக்கம், சுற்றுச்சூழல் மாசு ஆகியனவற்றால் உந்தப்படுகிறது. மிக முக்கியமாக உறக்கம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் 8 முதல் 12 வயதுள்ள உங்கள் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதலாக கவனம் செலுத்துங்கள். வீடுகளும் சரி பள்ளிகளும் சரி இந்த வயதில் பூப்பெய்தல் என்றால் என்ன, மாதவிடாய் சுழற்சி என்பது யாது என்பதைத் தயக்கமின்றி தெளிவாகப் பேச வேண்டியது அவசியம். பெற்றோரோ பள்ளியோ பேசாவிட்டால் அவர்கள் தவறாகவே புரிந்து கொள்ள நேரும். அது தேவையற்ற அழுத்தத்தையும் அச்சத்தையும் தரக்கூடும்.

உங்கள் பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் பற்றி எடுத்துக் கூறுவது போலவே ஆண் பிள்ளைகளுக்கும் எடுத்துக் கூறுங்கள். இல்லாவிட்டால், மாதவிடாய் அசுத்தம் என்ற பிம்பம் அவர்கள் மனதில் பதியும். இதுவும் ஒருவகையில் பிற்காலத்தில் ஆண் பிள்ளைகள் மனதில் ஆதிக்க சிந்தனையை வளர்க்கக்கூடும். தன் தோழியின் அசவுகரியத்தைப் புரிந்து நடக்கும் அளவுக்கு உங்கள் ஆண் பிள்ளைகளை வளர்த்தெடுங்கள்.

மாதவிடாய் சார்ந்த பொதுவான கருத்துகள்; பெற்றோர்களுக்கான அறிவுரைகள். 

1.    மாதவிடாய் என்பது இயல்பானது. மாதவிடாய் வலி நிறைந்ததாக இருக்கவே கூடாது. சிறிய அசவுரியங்கள் வேண்டுமானால் ஏற்படலாம். ஒருவேளை வலி ஏற்பட்டால் உங்கள் உணவுப் பழக்கவழக்கம் சரியில்லை என்றே அர்த்தம். 
2.    மாதவிடாய் என்பது இயற்கையாக உடலில் நிகழும் மாற்றம். இதைப் பற்றி வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. பெண் பிள்ளைகளே ஒருவேளை நீங்கள் படுத்திருந்த பெட் ஷீட்டோ, உடுத்தியிருந்த உடையோ, அமர்ந்திருந்த சோபாவோ கறையாகிவிட்டால் வெட்கப்படாதீர்கள். அதைப் பார்த்து உங்களைக் கிண்டல் செய்பவர்களைப் பொருட்படுத்தாதீர்கள். அதை வைத்து உங்களை யாரும் நிர்ணயம் செய்தால் அதற்காக அவர்கள்தான் வெட்கப்பட வேண்டுமே தவிர நீங்கள் அல்ல.
3.    விளையாட்டைக் கைவிட்டுவிடாதீர்கள். உங்கள் மாதவிடாய் காலத்திலும்கூட நீங்கள் எப்போதும்போல் விளையாடுங்கள்.
இனி மாதவிடாய் காலத்தில் உண்ண வேண்டிய உணவு குறித்துப் பார்ப்போம்:
1.    காலைப் பொழுதை ஊறவைத்த உலர் திராட்சைகளுடன் தொடங்கவும். அதேபோல் மாதவிடாய் வரும் நாளுக்கு ஒரு வாரம் முன்னதாக தொடங்கி மாதவிடாய் முடிந்து ஒரு வாரம் வரை தினமும் 2 அல்லது 3 இழையாவது குங்குமப் பூ சாப்பிடவும்.
2.    ஆளி விதையால் செய்யப்பட்ட லட்டை மாதவிடாய் காலத்தில் தினம் ஒன்று வீதம் சாப்பிடலாம். பொதுவாகவே பெண்கள் தினம் ஒரு ஆளி விதை லட்டு சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளைச் சேர்க்கும்.
3.    வெல்லத்துடன் இரண்டு மூன்று மல்லி விதைகளைச் சேர்ந்து நெய்யுடன் சேர்த்து 
உருட்டி மதிய உணவுக்குப் பின்னர் உட்கொள்ளவும்.
4.    பொதுவாகவே நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நலம். அதுவும் மாதவிடாய் நாட்களில் நொறுக்குத் தீனி, காபி, தேநீர் பருகுவதை முற்றிலுமாகவே தவிர்த்துவிடலாம். 
5.    பசியில் சில மாறுதல்கள் ஏற்படலாம். சில நேரம் கூடுதலாக பசிக்கலாம். சில நேரம் பசியில்லாமல் போகலாம். வயிற்றுப் பசிக்கேற்ப சாப்பிடுங்கள். வலுக்கட்டாயமாக உணவைத் திணிக்க வேண்டாம்.
6.    உள்ளூர் பொருட்களால் ஆன சர்பத் வகைகளை உட்கொள்ளலாம். எதுவும் இல்லாவிட்டால் எலுமிச்சை சாறு பருகலாம்.
7.    எள் உருண்டை, எள் மிட்டாய், எள் லட்டு ஆகியனவற்றைச் சாப்பிடலாம். மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்களுக்கு இதனை உண்பது கட்டாயம்.
8.    சேனைக் கிழங்கு, கருனைக் கிழங்கு, சக்கரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை பெண் பிள்ளைகளுக்கு வாரத்தில் ஒரு நாளாவது கொடுப்பது அவசியம். அதுவும் மாதவிடாய் நாட்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றை நிச்சயமாக சமைத்துக் கொடுங்கள்.
9.    சில குழந்தைகளுக்கு மார்பகங்களில் லேசான வலி, தொடை இடுக்குகளில் சிராய்ப்பு போன்றவை ஏற்படலாம். இது வைட்டமின் பி6, பி1, பி12 குறைபாட்டால் ஏற்படும். எனவே, மாதவிடாய் காலத்தில்  ‘வைட்டமின் பி சப்ளிமென்ட்’டை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
10.    சுண்டல், முளைகட்டிய பயிறு வகைகளை இந்தக் காலகட்டத்தில் கொடுப்பது மிக மிக அவசியம்.
11.    முறையான உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றியும்கூட மாதவிடாய் காலத்தில் வலி அதிகமாக இருந்தால் சுப்த பத்தகோனாசனம் எனப்படும் ஆசனத்தை செய்யலாம். இதனால் உதிரப்போக்கு சீராவதுடன் தசைப் பிடிப்புகளும் அகன்றுவிடும்.
12.    மாதவிடாய் காலத்தில் கால்சியம் சப்ளிமென்ட் ஏதேனும் எடுத்துக் கொள்ளலாம். கால்சியம் சிட்ரேட் மாத்திரை பரிந்துரைக்கத்தக்கது.
13.    போதிய அளவு தண்ணீர் பருகி உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
14.    தினமும் ஒரே நேரத்தில் இரவு படுக்கைக்குச் செல்வதை குழந்தைகள் பழக்கப்படுத்திக் கொள்வது மாதவிடாய் அசவுகரியங்களிலிருந்து மட்டுமல்ல; பல்வேறு உபாதைகளிலிருந்தும் பாதுகாக்கும்.
கடைசியாக பெண் பிள்ளைகளுக்கென்று ஒன்று சொல்ல விரும்புகிறேன். மாதவிடாய் நாள் என்பதால் என்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது என்ற நிலையே இல்லை. எனவே, மாதவிடாயை நோயாகக் கருதாமல் அதை இயற்கையின் ஒரு பகுதியாகக் கருதுங்கள். பெற்றோரும் பெண் குழந்தைகளுக்கு உறுதுணையாக இருங்கள்.

 (வளர்வோம்... வளர்ப்போம்)

x