காதல் ஸ்கொயர் 23


அருண், கௌதமின் வீட்டுக்கு வந்தபோது, கௌதம் டிவிபார்த்துக்கொண்டிருந்தான். அருணைப் பார்த்தவுடன் கௌதம் முகத்தில் மலர்ச்சியுடன், “வாங்க அருண்…” என்று வரவேற்றான். அவன், “வாங்க…” என்று மரியாதையாக அழைத்தது, அருணுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
“கௌதம்… நீ என்னை வாடா போடான்னுதான் கூப்பிடுவ”“அப்படியா? போகப் போக சரியாயிடும். உட்காருங்க.”
“உட்காருன்னு சொல்லு.”
“சரி… உட்காரு” என்று கௌதம் சொன்னவுடன் அருண் உட்கார்ந்தான். அப்போது சமையற்கட்டி
லிருந்து வந்த ரேணுகா, “வா அருண். எப்ப சென்னை வந்த?” என்று வரவேற்றார்.
“இன்னைக்கிக் காலைலதான் வந்தேன் ஆன்ட்டி… அங்கிள் இல்ல?”
“க்ளினிக் போயிருக்காங்க. நான் மெடிக்கல் லீவுல இருக்கேன். க்ளினிக்குக்கும் போறதில்ல. நீ ஜாயின்ட் பண்ணிட்டியா? எங்கே ஆபீஸ்?”
“பெருங்குடில.”
“ம்…இரு…உனக்கு காபி எடுத்துட்டு வரேன்” என்று ரேணுகா உள்ளே செல்ல…கௌதமைப் பார்த்து அருண், “வீட்டுல டைம் எப்படி பாஸாகுது?” என்றான். “ம்…அம்மா வீட்லயே இருக்காங்க” என்று கௌதம் ஆரம்பித்தபோது டிவியில், “எங்கேயோ பார்த்த மயக்கம்” பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. அதில் வெள்ளை நிற சுடிதாரில், நயன்தாரா தேவதை போல் தோற்றமளிக்க… கௌதம் பேச்சை நிறுத்திவிட்டு பாடலைக் கவனித்தான். தொடர்ந்து அருண், “எங்க
யாச்சும் வெளிய போனியா?” என்று கேட்க, “ம்… பூஜாவோட பீச்சுக்குப் போனேன்” என்ற கௌதம் பேச்சில் கவனமின்றி, டிவியில் அழகாகத் தெரிந்த நயன்
தாராவையே பார்க்க…அருண் டிவியைப் பார்த்தான்.
டிவியில் நயன்தாரா அழகிய சிரிப்புடன், நீரைத் தாவிச் செல்லும் அழகை கௌதம் கண்கள் மின்ன ரசித்துக்கொண்டிருந்தான். அருணுக்கு சந்தோஷமாக இருந்தது. கௌதம் இன்னும் பெண் சார்ந்த விஷயங்
களை ரசிக்கிறான். பழைய நினைவுகள் இல்லாவிட்டா
லும், 23 வயசுக்குரிய உணர்வுகள் இருக்குமல்லவா? அந்தப் பாடல் முடியும் வரையிலும் கௌதம், அருணிடம்
சரியாகப் பேசவில்லை. அடுத்து நயன்தாரா லோ-லோஹிப்புடன் தோன்றும் “தீம்தனக்கா தில்லானா’ பாடல் ஓடத் தொடங்கியது. இப்போதும் சரியாகப் பேச முடியாமல், நயன்தாராவின் உடல் அழகால் கௌதம் நிலைகுலைவதை அருண் ரசித்தான். அந்தப் பாடல் முடிந்தவுடன் அருண் கௌதமிடம், “அல்போன்ஸா  கிரவுண்ட் போலாமா?” என்றான்.
“அது எங்கே இருக்கு?”
“பக்கத்துலதான். பட்டினப்பாக்கத்துல. காலேஜ் படிக்கிறப்ப, ஈவ்னிங் அங்கதான் கிரிக்கெட் விளை
யாடிட்டு பேசிட்டிருப்போம்” என்றான்.
அவர்கள் அல்போன்ஸா  கிரவுண்ட் சென்றபோது இருட்டியிருந்தது. கிரிக்கெட் விளையாடி முடித்திருந்த
இளைஞர்கள், ஆங்காங்கே சத்தமாகப் பேசிக்கொண்
டிருந்தனர். அருண் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைக்க… கௌதம், “அருண்… நான் சிகரெட் பிடிப்பனா?” என்றான். “ம்…” என்று சொல்ல நினைத்த அருண், ‘வேண்டாம்…. கௌதம் அப்படியே இந்த சிகரெட் பழக்கத்தை விட்டுத் தொலைக்கட்டும்’ என்று நினைத்துக்கொண்டு, “இல்ல…. நீ சிகரெட் பிடிக்க மாட்ட” என்றான்.
“நீங்க… ஸாரி… நீ… நீதான் எங்கம்மாப்பாவுக்கு அடுத்து, என்கூட நிறைய பழகியிருக்க. உன்கூட அவ்வளவு போட்டோஸ் இருக்கு. அதெல்லாம் பாக்குறப்ப… உன்கூட பழகினதுல்லாம் ஞாபகத்துல இல்லன்னாலும், உன்கூட ஒரு நெருக்கம் வந்துடுச்சு” என்றவுடன் அருண் சந்தோஷத்துடன், “காலேஜ்ல புதுசா பாத்து, ஒரே மாசத்துல அவ்வளவு க்ளோஸா
கிட்டோம். அதே மாதிரி மறுபடியும் ஆகிடுவோம்” என்றான். பிறகு சில வினாடிகள் அமைதியாகப் புகையை இழுத்து விட்டுவிட்டு அருண், “இங்க…. வீட்டுல எப்படி இருக்கு?” என்றான்.
“அம்மா, அப்பா, பூஜால்லாம் என்னை ரொம்ப அன்பா பாத்துக்குறாங்க. அதுல எல்லாம் பிரச்சனை இல்ல. ஆனா மூணு பேரும், இது வரைக்கும் என் வாழ்க்கைல நடந்த எல்லா விஷயத்தையும், ஒரே சமயத்துல மூளையில திணிக்கப் பாக்குறாங்க. அதுதான் ரொம்ப வெறுப்பா இருக்கு.”
“ஏன்?”
“ஏன்னா…சரியா சொல்லத் தெரியல. இங்கதான் படிச்சேன்னு செட்டிநாடு ஸ்கூலு, அண்ணா யுனிவர்ஸிட்டின்னு அழைச்சுட்டுப் போனாங்க. ஒரு காலத்துல நான் அதுகூட ரொம்ப அட்டாச்டா இருந்துருக்கலாம். ஆனா இன்னைய தேதிக்கு அந்த ஸ்கூல், காலேஜ், இந்த கிரவுண்ட்னு எதுவும், எனக்குள்ள எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாது”
“ஸாரி… நான் அதுக்காக இங்க அழைச்சுட்டு வரல. தனியா பேசலாம்ன்னுதான்…”
“இட்ஸ் ஓகே. ஆனா அம்மாப்பா தினம்,  ‘உனக்கு நயன்தாரா பிடிக்கும்’,  ‘பாட்டு கேக்குறது பிடிக்கும்’,  ‘புக்ஸ் படிக்கிறது பிடிக்கும்’,  ‘ஆனந்த் மாமாவ பிடிக்கும்’ன்னு ஏதாவது சொல்லிக்கிட்டேயிருக்காங்க. அவங்க எவ்ளோ சொன்னாலும், அது எனக்குள்ள எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அதெல்லாம் மறுபடியும் எனக்குப் பழகி, திரும்பி புதுசா பிடிக்க ஆரம்பிக்கணும். இதை எப்படி அவங்களுக்குப் புரியவைக்கிறதுன்னு தெரியல” என்றவுடன், அருண், நந்தினி விவரத்தைச் சொல்லலாம் என்ற யோசனையைக் கைவிட்டான்.
“இப்ப உன்கூட வெளிய வந்ததுக்கு அப்புறம்தான், ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றேன். எனக்கு ஒரு ஹெல்ப். இஃப் யூ டோன்ட் மைண்ட்… அடிக்கடி என்னைப் பாக்க வர முடியுமா?”
“வரேன் மாப்ள. எனக்கு இங்க பக்கத்துல மந்தைவெளிலதான்டா வீடு.”
“ஓகே. போலாமா?” என்று எழுந்தான் கௌதம்.
அன்றிரவு நந்தினிக்கு போன் செய்த அருண், “நந்தினி…இப்ப உன் லவ் மேட்டர சொல்றதால எந்தப் பிரயோஜனமும் இல்ல. கௌதம் வீட்டுல, பழைய விஷயங்களப் போட்டு திணிக்கிறதே அவனுக்குப் பிடிக்கல. அதுக்கு நடுவுல இதையும் சொன்னா, இன்னும் வெறுப்பாவான். இப்ப… நானே அவனுக்குப் புது மனுஷன்தான். கொஞ்சம், கொஞ்சமா அவன்கூட பழகி ஒரு நெருக்கத்த ஏற்படுத்திக்கிறேன். ஒரு மாசம் போகட்டும். அப்புறம் சொல்றேன்” என்று கூற… நந்தினி தயக்கத்துடன், “சரி…” என்றாள்.
ஞாயிற்றுக்கிழமை மாலை. கௌதமின் வீட்டுக்கு வந்த பூஜா, கௌதமிடம் ஒரு புது ஐபோனை நீட்டி, “உன் பழைய மொபைல் ஆக்ஸிடென்ட்ல காணாமப் போயிடுச்சு. அதான் புதுசு வாங்கியிருக்கேன். அதே நம்பரும் வாங்கிட்டேன்” என்று கூறிவிட்டு தனது மொபைலை எடுத்து, அவன் எண்ணுக்கு அடிக்க… அவன் மொபைலிலிருந்து எழும்பிய சத்தத்தை கௌதம் சந்தோஷத்துடன் பார்த்தான். சில வினாடிகள் போனைத் திருப்பித் திருப்பிப் பார்த்த கௌதம், “ரோட்டுல எல்லோரும் செல்போனோடதான் போறாங்க. இதுல அவங்க பேசுறதவிட, பாக்கறதுதான் அதிகமா இருக்கு. எனக்கும் இருந்தா நல்லாருக்குமேன்னு நினைச்சேன். தேங்க்ஸ்” என்றான். கையை நீட்டி அவன் தேங்க்ஸைத் தடுத்த பூஜா, “இன்னைக்கி ஸிட்டி சென்டர் போலாம். லைஃப் ஸ்டைல்ல ஆஃபர் போட்டுருக்கான்” என்றாள்.
ஸிட்டி சென்டர் மாலில் நுழைந்த கௌதம் தரைதளத்தில் பேட்டரி கார்களை ஓட்டிக்கொண்டிருந்த குழந்தைகள்… கும்பலாக ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள்… என்று எல்லோரையும் ஆர்வத்துடன் பார்த்தான். லைஃப் ஸ்டைலில் நுழைந்து எஸ்கலேட்டரில் ஏறி முதல் தளத்திலிருந்த ஆண்கள் ஆடை பகுதிக்கு வந்தனர். “டீஷர்ட் பாக்கலாம். உன் சைஸ் என்ன?” என்று பூஜா கேட்க…கௌதம் விழித்தான். பூஜா சட்டென்று நாக்கை கடித்துக்கொண்டு, “ஸாரி…” என்று அருகிலிருந்த பணியாளரிடம் “இவருக்கு என்ன சைஸ் பாக்கலாம்?” என்றாள். அவன், “லார்ஜ் ட்ரை பண்ணிப் பாருங்க மேடம்” என்றான். ட்ரையல் ரூமில் கௌதம் புதிய டீஷர்ட்டை அணிந்துகொண்டு வந்து காண்பிக்க, “சூப்பர்…” என்றாள் பூஜா.
பின்னர் தரைத்தளத்திற்கு இறங்கும்போது கௌதம், “என் பேரன்ட்ஸ் என் மேல பிரியமா இருக்காங்க… எனக்குப் புரியுது. ஆனா நமக்குள்ள எந்த ரிலேஷனும் இல்ல. நீ ஏன் என் மேல இவ்வளவு பிரியமா இருக்க?” என்றவுடன் பூஜா நின்றுவிட்டாள். பேசிக்கொண்டே சில அடிகள் நடந்த கௌதம், அருகில் பூஜா வராததைக் கவனித்துவிட்டு நின்றான். திரும்பி வந்து, “சொல்லு… நீ ஏன் என் மேல இவ்வளவு பிரியமா இருக்க?” என்றான்.
“ஏன்னா… எனக்குச் சரியா சொல்லத் தெரியல. ஆனா முத தடவை உன்னைப் பாத்ததுலருந்தே எனக்கு உன்னைப் பிடிக்கும்.”
“அதான் ஏன்ங்கிறேன்?”
“ஏன்னா… ம்… கொஞ்ச நாள் போகட்டும். சொல்றேன்” என்றாள்.
பெண்கள் ஆடை பகுதியில் பூஜா அரைமணி நேரம் தேடி, அவளுக்கு ஒரு பிங்க் நிற டாப்ஸும், ஜீன்ஸும் வாங்கினாள். ட்ரையல் ரூமில் அந்த டாப்ஸை அணிந்து பார்த்த பூஜா வெளியே வந்து கௌதமிடம், “எப்படி இருக்கு?” என்றாள். அந்த பிங்க் நிற டாப்ஸில் அவள் 
அட்டகாசமாகத் தோற்றமளிக்க… கௌதம் அவளை உற்றுப் பார்த்தான். பூஜா, “ஏய்… என்ன பாக்குற?” என்றாள்.
அப்போதும் கண்களை இமைக்காமல் அவளை ரசித்துப் பார்த்த கௌதம் அருகில் வந்து, “இந்த ட்ரெஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க” என்று கூற… பூஜா சந்தோஷமும் வெட்கமுமாக கௌதமைப் பார்த்தாள்.
(தொடரும்)

x