மண்.. மனம்.. மனிதர்கள்! - 23


கொல்லாபுரி என்னும் திருநங்கைக்கு அபூர்வமாக அமைந்த அந்த நிம்மதியான வாழ்க்கையில் யார் கண்பட்டதோ...
ஐஸ் அவுஸ் ஸ்டேஷனுக்குப் புதிதாக வந்த முரட்டு இன்ஸ்பெக்டரிடம் பழைய விரோதத்தோடு தாஸைப் பற்றி யாரோ தாறுமாறாகப் போட்டுக் கொடுத்துவிட ஒரு சண்டைக் கேஸில் ‘புட் அப்’ செய்து தாஸை உள்ளே அனுப்பி வைத்து விட்டார் இன்ஸ்பெக்டர்.
“நீயெல்லாம் நல்லாயிருப்பியா?” என்று வாய் ஓயாமல் திட்டிக்கொண்டே ஆனைச்சந்து வக்கீலிடம் கம்மலைக் கழற்றிக் கொடுத்து தாஸை வெளியே எடுத்தாள் கொல்லாபுரி.
தெருமுனைப் பிள்ளையார் கோயிலில் கற்பூரம் ஏற்றவைத்து வீட்டுக்கு அழைத்துப் போனவள் ஜெயில் தீட்டுக் கழிய நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விபூதி குழைத்துப் பூசி கோழி அடித்துப் போட்டு முதுகு அமுக்கிவிட்டு கட்டிப் பிடித்துக் கொண்டு உறங்க வைத்தாள்.
மூன்று நாள் கழித்து ஆட்டோவை எடுக்கப்போன தாஸிடம்... “இனிமே ஆட்டோவைத் தொடாதே...” என்று கறாராகச் சொல்லிவிட்டார் அதன் சேட்டு ஓனர்.
போலீஸுக்குப் பயந்த சேட்டைப் போலவே மற்றவர்களும் தாஸுக்கு ஆட்டோ தராமல் போக, “அடப் போங்கடா...” என்று தன் நகைகளை விற்றுப் புது ஆட்டோவை இறக்கிக் கொடுத்தாள் கொல்லாபுரி.
பழைய வாழ்க்கை களை கட்டினாலும் புதுக்கருமம் ஒன்று சேர்ந்திருந்தது. அடிக்கடி தாஸ் நிறை போதையாகி வீட்டுக்கு வர ஆரம்பித்தான்.
“யேய், கொல்லாபுரி... ஓடுகாலி முண்ட... இங்க வாடி...”
“த பாரு... யாரப் பாத்து இன்னா
கேட்ட? பாத்துப் பேசு...”
“ச்சீத்தூ... வாயை மூடு. யேய், நான் ஜெயில்ல இருந்தன்ல...”
“ஆமா, அதுக்கு இன்னா இப்போ...”
“ஆங்... நான் இல்லாத சொல்லோ எவங்கூடடி போன..?”
“ஐயீய்யோ... மாத்தா, முண்டாக் கண்ணீ...ம்மா...”
காதைப் பொத்திக்கொண்டு அப்படியே குந்தி உட்கார்ந்து ஓவென அழ ஆரம்பிப்பாள் கொல்லாபுரி.
“கேக்கறேன்ல சொல்றி...ஓடுகாலி நாயி... ”
எட்டி எட்டி உதைக்க ஆரம்பிக்கும் தாஸ் பாத்திரம் பண்டங்களைத் தூக்கி அவள் மேல் அடிப்பான்.
ராத்திரி 10 மணி தாண்டிய பின் ஊரே அமைதியாக உறங்கும் நேரம் நடு ரோட்டுக்கு வந்து விழுந்து புரள்வாள். “ஐயோ, என் புருஷன் என்னைக் கொல்றானே...யாரும் கேக்க மாட்டீங்களா..?” என்று தன் கரகர தொண்டையில் ஒப்பாரி வைத்து ஓய்வாள்.
நடு ராத்திரியில் சீனே மாறிப் போயிருக்கும். கொல்லாபுரி மடியில் தாஸ் படுத்திருக்க, அவள் அவனுக்கு ஆப்பமும் பாயாவும் ஊட்டிவிட்டுக் கொண்டிருப்பாள்.
ஆம், தாஸ் அப்படி அவளை சந்தேகப்பட்டுக் கேட்பதும், குடித்துவிட்டு வந்து அடிப்பதும் அவளுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
பகலில் ஆட்டோ ஓட்டப் போய்விடுவான் தாஸ்.
நாள் முழுவதும் தனியாகவே இருக்க போரடித் ததால்... மாட்டாங்குப்பத்தில் இரண்டு போதைக் கிழவிகளை ஃப்ரெண்டாக்கி வைத்துக் கொண்டாள் கொல்லாபுரி. அவர்களும் வாரத்துக்கு ஒருமுறை வந்து கண்டு கொண்டு செல்வார்கள்.
மேலும், கிருஷ்ணாம்பேட்டை ரோட்டில் கோலமாவு காய வைக்க வரும் இரண்டு பொம்பளை களையும் சேர்த்துக்கொண்டு அஞ்சு பேராக சேர்ந்து உறை சாராயம் அடிப்பார்கள்.
ஊறிப்போன கிழவிகளுக்கு அவ்வளவு சீக்கிரத் தில் போதை ஏறாது. கண்சிமிட்டிக்கொண்டே கொல்லாபுரியைச் சீண்டி விடுவார்கள்.
“கேட்டீங்களாடி கொல்லாபுரி கொறாமைய.... அவ புருசன் ராவானா போதை போட்டுக்குனு வந்து அவளை இஸ்த்து போட்டு அடிக்கிறானாம். முடிய வலிச்சு மெறிக்கிறானாம். ஏன்... இன்னான்னு கேக்க ஆளில்லாமப் போச்சா? ஏதோ, அவனாண்ட தாலி வாங்கிக்கினோமேன்னு தாங்கிக்கினுக்குறா இந்த கொல்லாபுரி...”
பிளாட்பாரத் தரையை ஓங்கி ஓங்கி அறைந்த படியே இப்படிக் கிழவிகள் ராகமாக பேசப் பேச கொல்லாபுரியின் பெண்மை ஏகத்துக்கும் உசுப்பிக் கொள்ளும்.
ஆளுக்கு இன்னும் ரெண்டு கிளாஸ் ஸ்பான்ஸர் செய்வாள். தன் பங்குக்கு கண்ணீரே வராமல் அழுது அழுது தன் புருஷன் கொடுமை செய்வதாக அழுது ஒப்பாரி வைத்துக் காட்டுவாள்.
கிளாஸை சரித்த கையோடு கிழவிகள் மட்டை யாகி விட, “போங்கடி நன்றி கெட்ட கவிச்சி முண்டை களா...” என்று திட்டியபடியே தன் குடிசைக்குள் நுழைந்து கொள்வாள் கொல்லாபுரி.
சாயந்தரம் களைப்பாக வரும் தாஸிடம் கெஞ்சு வாள்.
“தாஸு...தாஸு...தெரியாம இன்னிக்கு ஒருநாள் குட்ச்சிட்டேன் தாஸு. என்ன மன்னிச்சிடு தாஸு...”
“அட்ச்சீ, உனுக்குப் புட்ச்சிருந்தா செய்யி. இதுல இன்னாகுது?”
குளிக்கப்போகும் தாஸுக்குப் பின்னாடியே ஓடுவாள்.
“ஐயோ, உனுக்கு நான் அப்டி செய்யக் கூடாதுல்ல தாஸு...” தாலியை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டு அவனுக்கு முதுகு தேய்த்து விடுவாள்.
மூன்று மாதத்துக்கு ஒருமுறை துறைமுகத்துக்கு போய் வருவாள் கொல்லாபுரி.
அவள் மேல் அன்பு கொண்ட கப்பல் கேப்டன்கள் சிலர், ஷாம்புக்கள், டேப் ரிகார்டர்கள், துணி வகைகள் இன்னும் சில அரிய இறக்குமதி ஐட்டங்களை எல்லாம் சீப் ரேட்டுக்குக் கொடுத்து உதவுவார்கள்.
அதை நல்ல விலைக்கு விற்று காசாக்கி தாஸுக்கு தங்கச்செயினாய் ஏற்றி அழகு பார்ப்பதில் கொல்லாபுரிக்கு கொள்ளை சந்தோஷம்.
கொல்லாபுரி வந்த ராசியோ என்னவோ தாஸுக்கும் ஆட்டோ ஓட்டம் சூடு பிடிக்க நல்ல காசு பார்த்து வந்தான்.
ஒருநாள் மாட்டாங்குப்பத்திலிருந்து வந்த கிழவி மட்டையாகி படுத்துவிட, அவளைத் தேடிக்கொண்டு வந்தாள் அவளது பேத்தி சரோஜா. 17 வயசுக்கு அதிகமான வளர்த்தியோடு வந்தவள் பார்வை, அங்கே சட்டையில்லாமல் உக்கார்ந்திருந்த தாஸின் மேல் பட்டது.
கொல்லாபுரி, சரோஜாவை அழைத்து தனக்கு தலை வாரி விடச் சொன்னாள். “சரிக்கா...” என்று பாவாடையை ஓவராக வழித்துக்கொண்டு உக்கார்ந்த சரோஜா தாஸையும் சேர்த்து வாரிக் கொண்டிருந்தாள்.
அதன்பின் இல்லாத கிழவியைத் தேடி சரோஜா வர ஆரம்பிப்பதும், வெள்ளந்தியான கொல்லாபுரி அவளை உக்கார வைத்து சோறு போட்டு அனுப்பி வைப்பதும் வழக்கமானது.
நாளடைவில் தாஸுக்கும், சரோஜாவுக்கும் பற்றிக் கொண்டுவிட்டது. பெரியமேட்டு லாட்ஜில் வைத்து சரோஜா சொன்னாள்...
“தோ பார், நீ கொல்லாபுரியோட வாழ்ந்துக்கோ எனக்கொண்ணும் இல்ல. ஆனா, உனக்குன்னு ஒரு குழந்தைய என்னாண்ட பெத்துக்கோ...”
“.......................”
“இல்ல கேக்கறேன்... அதால எப்படி உனுக்கு குழந்தை பெத்துத் தர முடியும். சொல்லு..?”
மெல்ல மெல்ல அவனைக் கரைத்தாள் சரோஜா.
ஆயா கிழவியும் கூட சேர்ந்து உசுப்பிவிட ஒருவழியாக கவர்மென்ட் கெஸ்ட் ஹவுஸ் உள்ளே இருந்த கோயிலில் வைத்துத் திருட்டுத்தனமாக சரோஜாவுக்கும் தாலி கட்டி விட்டான் தாஸ்.
தயங்கியபடியே தனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதென்று வந்து சொன்ன சரோஜாவைக் கட்டியணைத்துக் கொண்டாள் கொல்லாபுரி.
“ஏண்டி அக்காவாண்ட சொல்லவேயில்ல... உனுக்கு எப்டில்லாம் சீர் வைக்கணும்னு மனசுல நென்ச்சிக்கினு இருந்தேன் தெரியுமா?”
“இல்லக்கா. இது அவசர கல்யாணம்க்கா. நான் ஏற்கெனவே மூணு மாசமாயிட்டேன். வூட்டுல ஒத்துக்க மாட்டோம்னு என்னை வெரட்டி விட்டுட்டாங்கக்கா...”
“ஐய, அளுவாதடி... நான் இருக்கேண்டி கண்ணு உனுக்கு...” ஆறுதல் சொல்லி, தன்னுடனேயே தங்க வைத்துக் கொண்டாள்.
ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போவது முதல் தாயாதி சீரெல்லாம் செய்து கோஷாஸ்பத்திரியில் நல்ல படியாய் குழந்தை பிறந்தால் மண் சோறு தின்ப
தாகவும் பாளையாத்தாவுக்கு வேண்டிக்கொண்டாள் கொல்லாபுரி.
குழந்தை பிறந்த நாளில்... ரெஜிஸ்ட்டர் எழுதும் போது... குழந்தைக்கு அப்பன் யார் என்பது தெரிய வர...இடிந்தே போனாள்.
தாஸ் காணாமல் போனான்.
லேடி வெலிங்டன் பள்ளிக்கெதிரே இருக்கும் கடலோர கோயில் முண்டகக்கண்ணியம்மனிடம் ஓடோடிப் போன கொல்லாபுரி, தனக்கு நேர்ந்த துரோகத்தை சொல்லி இரண்டு மணி நேரம் அலையோசையோடு சேர்ந்து ஒப்பாரி வைத்து தீர்த்துக் கொண்டாள்.
பிறந்ததும் பெண் குழந்தை என்பதால் ஒருவாறாகத் தன்னைத் தேற்றிக்கொண்டு மறுவாரம் ரிக் ஷாவில் வைத்து சரோஜாவையும் குழந்தையையும் வீட்டுக்குக் கூட்டிவந்தாள்.
அந்த நேரம் ‘அந்தா கானூன்’ படம் ஹிட் அடித்திருந்தது. திரும்பிய இடமெல்லாம் அதே போஸ்டர்ஸ். குழந்தைக்கு ஹேமாமாலினி என்று பெயர் வைத்து தலைக்கு தண்ணி ஊற்றினாள்.
ஒருமாதம் கழித்து, பார்டர் தோட்டத்தில் தாஸைக் கண்டுபிடித்துக் கட்டிக்கொண்டு அழுதாள். தாஸ் நன்றாகக் குடித்திருந்தான்.
தாஸை சமாதானப்படுத்தி கூட்டிக்கொண்டு போய்விடலாம் என்று நினைத்துத்தான் பேச்சை ஆரம்பித்தாள் கொல்லாபுரி.
“தாஸு... தாஸு...”
“ம்ம்ம்...”
“இல்ல, ஏன் என்ன இப்டி நம்ப வெச்சி கயித்தறுத்த?’’
“..................”
“என்னாண்ட ஒரு வார்த்த சொல்லிட்டே செஞ்சிருக்கலாம்ல...”
“....................”
“இப்டியா ஓடி ஒளிவ..?”
“ஏய், யாரப் பாத்து ஓடி ஒளிஞ்சேன்னு கேக்கற..? தோடா, நான் இன்னாத்துக்கு ஓடணும்... ஒளியணும்?”
“ஐ... அப்டீன்னா, இன்னாத்துக்கு ஒர் மாசமா வீட்டுக்கு வரல நீ..?“
“ஏய்... யாரக் கேக்கற? என் இஸ்டம். இன்னாவேணா செய்வேன்...”
“ஐ...எல்லாம் உன் இஸ்டமாயிடுமா? என்னாண்ட ஒரு வார்த்த சொல்லத் தாவலியா?”
“யாங்... உன்னாண்ட இன்னாத்துக்கு சொல்லணும்?” சுருக்கென்று கேட்டான் தாஸ்.
“இன்னா தாஸு, நான் உன் பொண்டாட்டியில்லையா?” ஆதங்கத்தோடு கேட்டாள் கொல்லாபுரி.
நக்கலாக சிரித்த தாஸ் அசிங்கமாக ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லித் திட்டினான். அவ்வளவுதான், கொல்லாபுரிக்கு அப்படியே இருட்டிக்கொண்டு வந்தது. மொத்தமாக இடிந்தே விழுந்தாள்.
சரசரவென அழுகை பொங்கி ஊற்ற ஆரம்பித்தது. முகம் அஷ்ட கோணலாகியது.
“தாஸு என்னப் பாத்தா அப்டிக் கேட்டுட்ட? நீயா அப்டி சொல்லிட்டே?” என்று அடித் தொண்டையில் கத்தினாள்.
அடுத்த கிளாஸ் ப்ராண்டியை உள்ளே தள்ளி முடித்தவன்...
“ஆமா அப்டித்தான் கேட்பேன். அப்டித்தான் திட்டுவேன். இன்னான்ற இப்போ?”
பொத்தென்று விழுந்து அவன் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள் கொல்லாபுரி.
“தாஸு, தாஸு, வாய் தவறி சொல்லிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லிடு தாஸு. காலம் ஃபுல்லா உன் காலு கீழயே இருந்துடறேன் தாஸு...”
“ச்சீச்சீ எட்டப்போ... இன்னாமோ இல்லாதது பொல்லாததையா சொல்லிட்டாங்க...” எட்டி உதைத்தான் தாஸ்.
“தாஸு, தாஸு, தெரியாம திட்டிட்டேன்னு ஒரு வாட்டி சொல்லிடு தாஸு. உனுக்குப் பாத்து பாத்து செஞ்சேனே தாஸு..?’’ கதறினாள் கொல்லாபுரி.
“ஓ... சொல்லிக் காட்றியா? ச்சீ எட்த்துக்குனு போ உன் ஆட்டோவ. எனுக்கு சம்பாரிக்கத் தெரியாதா... புது ஆட்டோ போடத் தெரியாதா..?”
“ஐயோ, நான் அப்டி சொல்லல தாஸு...”
“யேய்...உன்னைப் பத்தி எனுக்குத் தெரியாதா..?”
என்றபடி மறுபடியும் அதே கெட்ட வார்த்தையை அழுத்திச் சொல்லி மீண்டும் எட்டி உதைத்தான் தாஸ்.
சில நொடிகள் விழுந்தபடியே இருந்த கொல்லாபுரி... சட்டென வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள். தாஸிடம் மேற்கொண்டு ஒரு வார்த்தை கூட பேசாமல், விறுவிறுவென்று கிளம்பி கடலோர முண்டகக்கண்ணியம்மன் கோயிலுக்குப் போனாள்.
வானம் கறுத்து மெல்ல இருட்டிக்கொண்டு வந்தது. வேக வேகமாக சன்னிதியை மூன்று சுற்று சுற்றி வந்து நின்றாள். தன் கழுத்தில் இருந்த தாலியைத் தவிர, செயின், தோடு, மோதிரம் என மொத்த நகைகளையும் கழற்றி கோயில் உண்டியலில் போட்டாள்.
இறுகிய முகத்தோடு ஓட்டமும் நடையுமாய் தன் வீட்டுக்கு வந்தாள்.
சரோஜாவையும் குழந்தையும் வீட்டுக்கு வெளியே இருந்த பெஞ்சில் உக்காரச் சொல்லிவிட்டு, உள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டவள் முகமெல்லாம் மஞ்சளை அள்ளிப் பூசிக்கொண்டு, கல்யாண புடவையை எடுத்து உத்தரத்தில் சுருக்கிட்டு, “பொறக்க மாட்டேன்... இனிமே பொறக்கவே மாட்டேன்” என்று ஆவேசமாக முணுமுணுத்துக்கொண்டே ப்ளாஸ்டிக் ஸ்டூலை ஓங்கி உதைத்து தொப்பெனத் தொங்கி செத்தே போனாள் கொல்லாபுரி.
விஷயம் தெரிந்து போதை தெளிந்து தலை தெறிக்க ஓடிவந்தான் தாஸ்.
“ஐயோ... என்ன விட்டுட்டுப் போயிட்டியா... இந்தப் பாவிய மன்னிச்சுடு கொல்லாபுரி...” என்று மாரில் அடித்துக் கொண்டு கதறினான்.
கொல்லாபுரியின் சாவுக்கு பெரிய அளவில் பேண்டு – மோளம் வைத்தான். தெருவே அடைக்கும் அளவுக்குப் பாறைப் பந்தல் பாடை கட்டி, பார்டர் தோட்டத்து நண்பர்களை டான்ஸ் ஆட வைத்து, ஏரியாவே திரும்பிப் பார்ப்பது போல கல்யாண சாவாக எடுத்து கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் வைத்து எரித்தான்.
அந்தச் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட முதல் திருநங்கை என்னும் பேற்றினை கொல்லா புரிக்கு அளித்து அவள் சாம்பலில் உருண்டு, புரண்டு அழுது கொண்டிருந்தான் தாஸ்.
லேசாக தூர ஆரம்பித்திருந்தது...
தன் வாழ்க்கையில் எவ்வளவோ கொடுமை களை யெல்லாம் தாங்கிக்கொண்டு நகர்ந்த வள் கொல்லாபுரி.
தாய் - தந்தை, சுற்றம், எல்லாமே அவளை புறக்கணித்தபோதும் தனக்கு நேர்ந்த துன்பங் களையெல்லாம் புன்சிரிப்போடு கடந்து, போராடி, கல்யாண வாழ்க்கை வரை வரத் தெரிந்த துணிச்சலான திருநங்கைதான் கொல்லாபுரி.
அப்படிப்பட்ட கொல்லாபுரி அவ்வளவு ஆவேசமாகத் தூக்கில் ஏறி தொங்கும் அளவுக்கு அப்படி என்னதான் சொல்லி விட்டான் தாஸ்?
போடா, பொட்டப் பையா..!
(சந்திப்போம்)

x