பேசுவதை விட புகைப்படங்களை எடுக்க செல்போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. தாங்கள் ஏதாவது புதிய விஷயத்தைச் செய்தாலோ, காண நேர்ந்தாலோ, நண்பர்களைச் சந்தித்தாலோ அதை அப்போதே செல்போனில் படம் எடுத்து உடனடியாக சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது ஃபேஷனாகிவிட்டது. இதற்காகவே ஃபேஸ்புக், வாட்ஸ்- அப், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக ஊடகங்கள் உள்ளன.
இப்படி செல்போனில் எடுக்கப்பட்டு இணையதளம் மூலம் நண்பர்களிடம் பகிரப்பட்ட முதல் புகைப்படம் என்ற பெருமையை இங்குள்ள குழந்தையின் புகைப்படம் பெறுகிறது. இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் பிலிப் கான் (Philippe Kahn) என்ற தொழிலதிபர். 1997-ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி பிறந்த தனது குழந்தையைத்தான் இப்படி முதல் முறையாக செல்போனில் படமெடுத்து, தனது இமெயிலில் உள்ள நண்பர்களின் வட்டத்துக்கு அனுப்பிஉள்ளார் பிலிப் கான்.
4 தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனரும், பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளரும், கண்டுபிடிப்பாளரு மான பிலிப் கான், கணக்கியல் வல்லுநராகவும் விளங்குபவர். எப்போதும் எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் சிறு வயது முதலே இவருக்கு உண்டு. 1990-களில் இவரது ஆர்வம் செல்போன்களின் பக்கம் திரும்பியது. அந்தக் காலகட்டத்தில் வேகமாக பிரபலமாகி வந்த செல்போன்களை, படம் எடுக்கவும் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கிய அவர், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். 1997-ம் ஆண்டில் இவரது இந்த ஆராய்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. அச்சமயத்தில் இவரது மனைவி கருவுற்றிருந்தார். தான் தந்தையாகப் போவதை நினைத்து மகிழ்ந்த பிலிப் கான், தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையை செல்போன் உதவியுடன் படமெடுத்து, அதை தனது நண்பர்களுக்கு இணையதளம் மூலம் உடனடியாக அனுப்பி வைக்கத் திட்டமிட்டார்.
குழந்தைப் பேறுக்காக மனைவி கொஞ்சம் கொஞ்சமாகத் தயாராக, அதைவிட வேகமாக தனது திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் பிலிப் கான் தீவிரமாக இருந்தார். நீண்டநாள் ஆராய்ச்சிக்குப் பிறகு தான் நினைத்ததைச் செய்துபார்க்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. இருப்பினும் தனக்கு குழந்தை பிறக்கும் நாளில்தான் அதை சோதித்துப் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
1997-ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி, வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையின் பிரசவ அறைக்குள் தனது மனைவி கொண்டுபோகப்பட, பிலிப் கான் பரபரப்பானார். அந்த அறைக்கு வெளியில் உள்ள பகுதியையே ஒரு சிறு சோதனைக்கூடமாக மாற்றிக்கொண்டார். தனது மோட்டரோலா ஸ்டார்டேக் பிளிப் போன், காசியோ க்யூவி டிஜிட்டல் கேமரா மற்றும் தோஷிபா 430 சிடிடி லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் சில வொயர்களுடன் தனது இறுதிக்கட்ட ஆராய்ச்சியைத் தொடங்கினார். டிஜிட்டல் கேமரா, செல்போன் மற்றும் தனது லேப்டாப்பை வொயர்கள் மூலம் இணைத்து சில தொழில்நுட்ப விஷயங்களையும் செய்து முடித்து, குழந்தை பிறக்கும் நேரத்துக்காகக் காத்திருந்தார்.
இவர் செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி செல்போனின் பட்டனைத் தட்டினால், அடுத்த வினாடியே அதனுடன் இணைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கேமரா படமெடுக்கும். அடுத்த விநாடியே அந்த செல்போன் உடனடியாக வெப் சர்வருடன் இணைப்பை ஏற்படுத்தி, அதிலுள்ள பிலிப்பின் நண்பர்களின் இ-மெயில் முகவரிகளுக்கு படத்தை அனுப்பி வைக்கும். மேலும் இப்படி ஒரு படம் இ-மெயிலில் வந்திருப்பதற்கான சமிக்ஞையையும் அந்த இ-மெயில் முகவரியில் உள்ளவர்களுக்குக் கொடுக்கும்.
சில நிமிடங்கள் கழித்து, தனது மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்த தகவலை நர்ஸ் சொன்னதும் தான் செல்போன், கேமரா மற்றும் லேப்டாப்பை இணைத்து வைத்திருந்த இடத்துக்கு குழந்தையை எடுத்துவரச் சொன்னார் பிலிப். பின்னர் அக்குழந்தையை அவர் படம் எடுக்க, அடுத்த நொடியே செல்போனுக்கும் லேப் டாப்புக்கும் இடையிலான இணைப்பால் அது இ-மெயில் வழியாக பிலிப்பின் இ-மெயிலில் உள்ள சுமார் 2000 நண்பர்களைச் சென்றடைந்தது. இப்படி பிலிப் கானுக்கு பெண் குழந்தை பிறந்த நாளில்தான் முதன்முதலாக செல்போனில் படம் எடுக்கப்பட்டதுடன் அப்போதே அது இணையத்தில் பகிரப்பட்டது.
இந்த சாதனையைச் செய்த சில ஆண்டுகள் கழித்து புகழ்பெற்ற லைஃப் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ள பிலிப் கான், “இந்தச் சாதனையைச் செய்வதற்கு என் மனைவி மிகவும் உதவியாக இருந்தார். எனக்கு குழந்தை பிறக்கும் நாளில்தான் செல்போன் மூலம் முதல் படத்தை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதே நேரத்தில் அது சரியாக வருமா என்றும் எனக்குத் தெரியவில்லை. கடைசி நேரத்தில் சில கருவிகள் இல்லாமல் போனதால் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்தப் படத்தை எடுத்து அனுப்பினேன்.
சென்சாரைப் பயன்படுத்தி செல்போனில் முதல் படத்தை நான்தான் எடுத்தேன் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. எனக்கு முன்னதாக யாராவது இந்த முயற்சியை செய்திருக்கலாம். அதேபோல் டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட படத்தை யாராவது இ-மெயிலில் எனக்கு முன்னால் அனுப்பி இருக்கலாம். ஆனால், செல்போனையும் டிஜிட்டல் கேமராவையும் இணைத்து, படமெடுத்த அடுத்த சில மணித்துளிகளிலேயே இ-மெயிலில் பகிரப்பட்ட முதல் புகைப்படம் இதுதான்” என்கிறார்.
1997-ம் ஆண்டில் செல்போன் மூலமாக முதல் படத்தை எடுத்த பிறகு, இது தொடர்பாக மேலும் பல்வேறு ஆய்வுகளை கான் மேற்கொண்டார்.
2000-ம் ஆண்டில் இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை வாங்கிய ஜப்பானின் ஷார்ப் நிறுவனம், கேமராவுடன் இணைந்த செல்போன்களைத் தயாரித்து வெளியிட்டது.
இன்றைய தினம் நாம் நினைத்த நேரத்தில் படங்களை எடுத்து ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்- அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுகிறோம். அடுத்த முறை அப்படிப் பதிவிடும்போது, அதற்கு மூலகாரணமாய் இருந்த பிலிப் கானைப் பற்றியும் ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம்.
பிலிப் கான்
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் யூதர்கள் சமூகத்தில் 1952-ம் ஆண்டு பிறந்தவர் பிலிப் கான். ஆரம்ப காலத்தில் பிரான்ஸிலும், பின்னர் சுவிட்சர்லாந்திலும் கல்வி கற்ற பிலிப் கான், கணிதத்தில் பட்டம் பெற்றவர். கணிதம் மட்டுமின்றி இசையிலும் நாட்டம் கொண்ட பிலிப் கான், அதிலும் பட்டம் வென்றார். கணிப்பொறியிலும் ஆர்வம் கொண்ட பிலிப், படிக்கும் காலத்திலேயே மிக்ரால் (MICRAL) என்ற மென்பொருளை உருவாக்கினார்.
4 கணிப்பொறி நிறுவனங்களைத் தொடங்கிய பிலிப் கான், அதில் ஒன்றை மோட்டரோலா நிறுவனத்திடம் விற்றார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.