வெங்கடேசனை வெறுப்பேற்றும் அதிமுக
கடந்தமுறை மதுரை எம்பி-யாக இருந்த அதிமுகவின் கோபாலகிருஷ்ணன், தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி கட்டிடம் ஒன்றைப் புதுப்பித்து எம்பி அலுவலமாகப் பயன்படுத்தி வந்தார். ஆனால், இப்போதுள்ள கம்யூனிஸ்ட் எம்பி-யான சு.வெங்கடேசனுக்கு அந்தக் கட்டிடத்தைக் கொடுக்கக் கூடாது என்பது மதுரை அதிமுக அமைச்சர்களின் ரகசிய உத்தரவாம். இது தெரியாமல் அந்தக் கட்டிடத்தைத் தனக்கு ஒதுக்கித் தரும்படி மாநகராட்சி ஆணையர் விசாகனை அணுகியிருக்கிறார் வெங்கடேசன். அதிர்ந்துகூட பேசத் தெரியாத விசாகன், உள்விவகாரங்களைச் சொல்லாமல் அந்தக் கட்டிடம் உள்ள இடத்தில் வணிக வளாகம் அமையவிருக்கும் விஷயத்தைச் சொல்லி சமாளித்திருக்கிறார். இதைக்கேட்டு கடுப்பான காம்ரேட், ஆணையரை கொஞ்சம் ஓவர் டோஸ் கொடுத்து எச்சரித்துச் சென்றாராம். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறாராம் விசாகன். மாநகராட்சியின் மற்ற அதிகாரிகளோ, “எம்பி-க்கு அலுவலக கட்டிடம் தேவை என்றால் அதை ஆட்சியரிடம்தானே கேட்க வேண்டும். அதை விடுத்து, மாகராட்சி ஆணையரோடு மல்லுக்கட்டுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று ஆதங்கப்படுகிறார்கள்.
சீனா தானா சொல்றதக் கேளுங்கோ!
தமிழ் ஊடகங்களிடம் பேசுவதையோ விவாதிப்பதையோ அவ்வளவாக விரும்பாதவர் ப.சிதம்பரம். அப்படிப்பட்டவர், இப்போது தமிழ்குடிமகனாக வலம்வரத் தொடங்கி இருக்கிறார். கடந்த 20-ம் தேதி காரைக்குடியில் நடைபெற்ற பாரதிதாசன் தமிழ்ப்பேரவை ஆண்டு விழாவில் மைக் பிடித்த வர், “தமிழுக்கு மட்டுமல்ல... இந்தி அல்லாத அனைத்து மொழிகளுக்கும் பேராபத்து வந்திருக்கிறது. 1961-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1,650 மொழிகள் இருந்தன. இந்த எழுபது ஆண்டுகளில் அதில் ஏறத்தாழ ஆண்டுக்கு பத்து மொழிகள் வீதம் அழிந்துவிட்டன. ஆக, ஒருமொழி வழக்கொழியாதுன்னு நினைக்காதீங்க. பேரிலக்கியம் பெற்ற வடமொழியே வழக்கொழிந்துவிட்டது. எத்தன பேரு இன்னைக்கி சமஸ்கிருதம் பேசுறாங்க? வழக்கொழிவதுதான் அழிவுக்குத் தொடக்கம். அப்படி வழக்கொழியக் கூடாதுன்னா மொதல்ல நம்ம எல்லாரும் தமிழ்ல பேசணும்; எழுதணும். ஒருமொழி வழக்கொழியாமல் இருக்கணும்னா அந்த மொழி பேசப்படணும். ஒலிதான் மொழி. ஒலியே கேட்கலைன்னா மொழி எங்கே வளரும்?” என்றெல்லாம் பேசி, அரங்கு மக்களை ஆச்சரியத்தில் தள்ளினார்.