அப்துல் நாசர் ஐஏஎஸ்- ஆசிரமத்திலிருந்து வந்த ஒரு மாவட்ட ஆட்சியர்!


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

ஏழ்மையான குடும்பப் பின்னணியிலிருந்து படித்து, உயர்ந்த இடத்துக்கு முன்னேறுபவர்களின் கதைகள், வாழ்க்கையில் வெல்ல நினைப்பவர்களுக்கு வெற்றிப் பாடங்கள். கேரளத்தின் கொல்லம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் நாசரின் கதையும் அப்படியானதுதான். கண்ணூர் மாவட்டம், தளசேரியைச் சேர்ந்த அப்துல் நாசர், வறுமையின் பிடியில் சிக்கி, ஆசிரமத்தில் வளர்ந்து, பின்னர் கல்வியின் துணைகொண்டு படியேறியவர். சாதிக்க வயதும், வறுமையும் தடையே இல்லை என்பதற்கு நிகழ்கால உதாரணமாக இருப்பவர்.

ஆட்சியர் அலுவலகத்தில் அப்துல் நாசரை சந்திக்கச் சென்றபோது, அந்தச் சனிக்கிழமை மாலையிலும் அலுவலகப் பணிகளில் ஆழ்ந்
திருந்தார். “ஞான் தமிழ் பத்திரத்தின் நின்னுள்ள ஆளானு” என்று மலையாளத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டபோது, “நீங்க தமிழ்லயே பேசலாம். எனக்குத் தமிழ் நல்லா தெரியும்” என்கிறார் அகன்ற சிரிப்புடன்.
ஆட்சியர் அப்துல் நாசருக்கு ஏழு மொழிகள் அத்துப்படி. மொழிகளை மட்டுமல்ல, வாழ்க்கையின் அத்தனை சூட்சுமங்களையும் அவருக்குக் கற்றுத்தந்தது – வறுமை!

“எங்க ஊரான தளசேரிக்கும் கிரிக்கெட்டுக்கும் நெருங்கின தொடர்பு இருக்கு. இங்கே இருக்கிற ஸ்டேடியம் 200 வருஷத்துக்கு முன்னால பிரிட்டிஷ்காரங்க கட்டினது. இந்தியாவோட முதல் கிரிக்கெட் ஸ்டேடியம்னுகூட சொல்லுவாங்க. அப்பா அப்துல் காதர் நல்ல கிரிக்கெட் பிளேயர். தளசேரி டவுன் கிரிக்கெட் கிளப்ல மெம்பரா இருந்தவர் அவர்.

x