சமூகக் குப்பையை எழுத்தால் எரிக்கும் ஏகலைவன்!- ஒரு துப்புரவுத் தொழிலாளியின் மறுபக்கம்


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

கோவை கோனியம்மன் கோயில் எதிரே உள்ள டாக்ஸி, டூவீலர் ஸ்டாண்டு. அங்கே அன்றாடம் அந்த மனிதரைக் காண முடிகிறது. வீதி கூட்டுகிறார். குப்பை வண்டிகளைத் தள்ளுகிறார். வேலை முடிந்ததும் அங்கே நிற்கும் ஆட்டோக்களில் ஏதாவது ஒன்றில் உட்கார்ந்து, தடிமனான நோட்டில் விறுவிறுவென்று எழுதுகிறார். இதை சக துப்புரவுத் தொழிலாளர்கள் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘மஞ்சப்பையினுள் செருப்பை வைத்து அடிப்பது நகரத்துத் தீண்டாமை - நேரடியாக செருப்பால் அடிப்பது கிராமத்துத் தீண்டாமை!’ எனும் வரிகள் முகத்தில் அறைகின்றன. ‘அடப்பாவிகளா’ எனும் தலைப்பில் இன்னொன்று:
‘ஹிட்லரும் இடி அமீனும் செத்துவிட்டதாக யார் சொன்னது?
உள்ளூர் சாதி வெறியனை உற்றுப் பார்
உண்மை தெரியும்
அவர்கள் இன்னமும் உயிரோடு’
என்று உலுக்கியெடுக்கின்றன அந்த வரிகள்.
அந்த மனிதரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், மஞ்சள் பையிலிருந்து ஒரு நூலை எடுத்துக் கொடுக்கிறார். ‘இருட்டில் வாழும் வெளிச்சங்கள் - கைநாட்டுக் கவிஞன் ஏகலைவன்’ என்ற தலைப்பு. துப்புரவுப் பணியாளர்களின் கண்ணீர், கனவு, கவுரவம், வாழ்க்கை என்று பல்வேறு விஷயங்களைப் பேசும் அந்நூல், வாசிப்பவர்களின் நெஞ்சங்களைக் கனக்கச்செய்யும் படைப்பு.
அவரைப் பற்றிக் கேட்டதும் ஆட்டோவில் அமர்ந்தபடியே பேச ஆரம்பிக்கிறார். “அப்பா அம்மா வெச்ச பேரு ரங்கசாமி. எழுதுறதுக்காக நான் வெச்சுக்கிட்ட பேரு ஏகலைவன். சொந்த ஊர் புதூர். படிச்சது ரெண்டாம் வகுப்புதான். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி எல்லாமே கார்ப்பரேஷன் துப்புரவுத் தொழிலாளிகள்தான். அம்மா இறந்த பின்னாடி கருணை அடிப்படையில எனக்கு இந்த வேலை கிடைச்சது” என்று ஆரம்பித்தவர், சாதி அடிப்படையில் இயங்கும் சமூகத்தைப் பற்றியும், தான் கவிதை எழுத வந்த கதையைப் பற்றியும் விவரிக்க ஆரம்பித்தார்.
“சின்ன வயசுலேயே ஊர்ல இருந்த ‘முரளி டென்ட் கொட்டகை’யில பாட்டு புக்கு விக்கப் போனேன். பாட்டு புக்கு வித்ததால பாட்டெல்லாம் படிச்சுப் பாடறது வழக்கமாயிருச்சு. பள்ளிக்கூடம்தான் போகலை. எதையாவது படிச்சுக்கணும்னு பகல்ல லைப்ரரிக்குப் போயிடுவேன். அப்ப திராவிடர் கழகத்துல இருந்த கு.ராமகிருஷ்ணன் எனக்கு அறிமுகமானார். எங்க ஊர்ல அப்ப சாதி கொடுமை அதிகம். ஒரு சில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்ங்ககிட்டகூட அது இருந்துச்சு. எங்க சாதிக்காரன் ஒருத்தன் தப்பு செஞ்சா ஒரு தலைவரோட வீட்டு வாசல்ல வச்சு சாட்டையில அடிப்பாங்க. இதையெல்லாம் தட்டிக்கேக்கணும்னே எங்கூர்ல தி.க கொடியைக் கட்டினேன். நிறைய போராட்டங்கள். பல தடவை ஜெயிலுக்குப் போயிருக்கேன். 1981-ல, மனு தர்மம் எரிப்பு நிகழ்ச்சி நடந்துச்சு. அதுல கலந்துக்கிட்டு அரெஸ்ட் ஆனேன். பாவலர் பெருஞ்சித்திரனார், கு.வெ.கி ஆசானோட நானும் ஜெயில்ல இருந்தேன்.
ஒரு கட்டத்துல திராவிட கழகத்துலயும் சாதி ஆதிக்கம் இருக்கிறதைப் பார்த்துட்டு அதுலேருந்து வெளில வந்தேன். என் மனைவிக்கு ஒரு கல்லூரியில துப்புரவு வேலை. வாங்குற சம்பளம் கடனுக்கே போதாது. அவங்க ஹாஸ்டல்ல மீதியாகிற சாப்பாட்டைக் கொண்டுட்டு வந்தாத்தான் வீட்ல நானும் நாலு குழந்தைகளும் சாப்பிட முடியும்கிற நிலைமை” சொல்லும்போதே கண்களில் கண்ணீர் ததும்புகிறது. கண்களைத் துடைத்துக்கொண்டு தொடர்கிறார்.
“மறைந்த நாடகக் கலைஞர் கோமகனோட அப்பா எழுத்தாளர் கம்பராயன் எங்க பக்கத்து வீடு. அவங்கதான் எனக்கு மார்க்சியம் சொல்லிக் கொடுத்தாங்க. ஒருகட்டத்துல, மனசுல தேங்கிக் கிடக்கிற கோபத்தையெல்லாம் எழுத ஆரம்பிச்சேன். நல்லாயிருக்குன்னு நண்பர்கள் சொன்னாங்க. புத்தகமா போட்டேன்” என்றவர் அரசியல் தலைவர்களுடனான தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
“ஒரு தடவை கோயம்புத்தூருக்கு கருணாநிதி வந்தார். எங்க அருந்ததியர் சன மக்கள் ஏன் திமுகவுக்கு ஓட்டுப் போடறதில்லைன்னு அவர் முன்னால கருத்து கேட்டாங்க. என்னையும் கூப்பிட்டிருந்தாங்க. கடைசி நேரத்துல எனக்குப் பதிலா வேறொருத்தர் பேசிட்டார். நான் விடலை. சொல்ல நினைச்சதையெல்லாம் ஒரு குயர் நோட்ல கடகடன்னு எழுதி கருணாநிதி கையிலயே கொடுத்துட்டேன். அவர் உடனே படிச்சுட்டு, ‘பிழையா எழுதினாலும் களையா எழுதறியேய்யா’ன்னு மைக்கிலேயே சொன்னார். ஜெயலலிதாம்மாவையும் பார்த்துப் பேசியிருக்கேன். ஒருதடவை, ‘ஆளப்பிறந்தவர்கள் ஆண்களே என்பதை மாற்றி அமைத்தவர் அம்மா; இது எளிதில் அமைந்து விடவில்லை சும்மா’ என்று எழுதியிருந்தேன். அதை ஜெயலலிதாவுக்கே அனுப்பச் சொன்னாங்க நண்பர்கள். ஃபேக்ஸ்ல அனுப்பினேன். போயஸ் கார்டன்லேருந்து அழைப்பு வந்துச்சு. போய் கால்மணி நேரம் ஜெயலலிதாம்மாகிட்ட பேசினேன். துப்புரவுத் தொழிலாளர்கள் படுற கஷ்டத்தைச் சொல்லி, ‘துப்புரவுத் தொழில்ல ஷிஃப்ட் முறை கொண்டு வாங்கம்மா’ன்னு கோரிக்கை வச்சேன். ‘நம்ம ஆட்சி வரட்டும் செய்யறேன்’னார். ஆட்சிக்கு வந்ததும் மறந்துட்டார்” என்று அடுக்கடுக்காகப் பல சம்பவங்களைச் சொல்லும் ஏகலைவன், ஒரு நாடகக் கலைஞரும்கூட.
15 வருடங்களாக ‘ஏகலைவன் கூத்துப்பட்டறை’ என்ற நாடகக்குழுவை வைத்து நடத்திவருகிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை நடத்தி இருக்கிறார். இப்போதும் மதுரை வீரன் திருவிழாக்களில் தவறாமல் தனது நாடகங்களை அரங்கேற்றுகிறார். கோவை மாநகராட்சியில் சமீபத்தில் நடந்த நாடகக் கலைவிழாவில் இவரது ‘இந்த ஒரு நாள்’ நாடகமும் இடம்பெற்றது. சிறந்த கதாசிரியர், சிறந்த திரைக்கதை என்று 16 பரிசுகளை அந்நாடகம் வென்றது.
“நான் போட்ட கவிதைத் தொகுப்புக்கே ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்க வேண்டியிருந்துச்சு. அதுக்குத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி விருது, குத்தூசி குருசாமி விருது, சமூக நீதிப் போராளி விருதுன்னு பல விருதுகள் தேடி வந்துச்சு. அதுக்கு மேல என்ன வேணும். எங்க சனங்க படிக்கணும்; விழிப்புணர்வு பெறணும். அதுக்காகவே எழுதறேன்” என்று சொல்லும் ஏகலைவன், “அடுத்ததாக ஒரு கவிதை நூலை வெளியிடப் போறேன். அதுவும் எங்கள் மக்களோட வலி மிக்க வாழ்க்கையைச் சொல்லும் படைப்பா இருக்கும்” என்கிறார் உறுதியான குரலில்!

x