உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in
புதிய நிகழ்ச்சி என்று பொழுதுபோக்காக மக்கள் பார்க்கத் தொடங்கிய ‘பிக் பாஸ்’ இன்றைக்கு அன்றாடப் பேசு பொருளாகி
விட்டது. நெடுந்தொடர்களில் மூழ்கியிருந்தவர்களைத் தன் வசப்படுத்தியிருக்கிறது இந்நிகழ்ச்சி. ஆண், பெண், குழந்தைகள் வித்தியாசமில்லாமல் பல்வேறு தரப்பு பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் இதன் தாக்கம் குறித்துப் பரவலான விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. ‘பிக் பாஸ்’ ஏற்படுத்தும் உளவியல் பாதிப்புகள் குறித்து சமூக ஆர்வலரும் மனநல மருத்துவருமான ஷாலினியும் சமூக வலைதளத்தில் தனது கருத்தைப் பதிவிட்டிருந்த நிலையில் அவரிடம் இதுகுறித்து விரிவாகப் பேசினேன்.
‘பிக் பாஸ்’ பார்ப்பதால் வரக்கூடிய உளவியல் சிக்கல்கள் என்னென்ன?
இதுவும் ஒருவித கேளிக்கை நிகழ்ச்சிதான். மற்ற நிகழ்ச்சிகளிலிருந்து இது தனித்துத் தெரிவதற்கு முக்கியக் காரணம், பிரபலங்கள் தங்கள் வீட்டில் எப்படி இருப்பார்கள் எனும் ஆர்வத்தை நம்மிடம் தூண்டும் வகையில் இருப்பதுதான். ஆனால், நாளடைவில் மற்றவர் வீட்டில் என்ன நடக்கிறது என்று ஒட்டுக் கேட்கும் மனநிலையை இந்நிகழ்ச்சி உருவாக்கிவிடக்கூடும் என்பதுதான் இதில் இருக்கும் அபாயம். நிச்சயம் இதுவொரு வகையான மனச்சிதைவை உருவாக்கிவிடும்.